(நபி வழியில் தொழுகை)
04 தொழுவதாக மனதில் நினைத்தல் (நிய்யத்):
எந்தவொரு வணக்கமாயினும் ‘நிய்யத்” அவசியமாகும். நபிகளார் கூறினார்கள் : “நிச்சயமாக அமல்கள் யாவும் நிய்யத்தைக் கொண்டே நிறைவேறும்” (புஹாரி , முஸ்லிம்).
உதாரணமாக , ஒருவர் ஸுப்ஹ் தொழப் போகிறார் எனில் , “ஸுப்ஹ் தொழுகிறேன்” என்பதாக , வுழூ செய்யப் போகிறார் எனில் , “வுழூ செய்கிறேன்” என்பதாக மனதில் நினைத்தல். இதைத்தான் இஸ்லாம் நிய்யத் என்று சொல்கிறது. இதை விடுத்து அரபு மொழியில் சில வாசகங்களை மனனமிட்டு மொழிவது நிய்யத் அல்ல. இருப்பினும் பெரும்பாலானோர் தொழுமிடத்தில் நின்று கொண்டு அதற்கென நேரமெடுத்து , “உஸல்லீ பர்ழ…” என்றெல்லாம் மனனமிடப்பட்ட சில வாசகங்களை கூறும் வழக்கத்தை சர்வசாதாரணமாக எங்கும் அவதானிக்க முடியும்.
ஆயினும் அரபு மொழி நன்கு தெரிந்த நபியவர்களோ , ஸஹாபாக்களோ தொழுகைக்கு நிற்கும்போதோ , நோன்பு நோற்கும் போதோ நிய்யத்தை வாயினால் மொழிந்ததாக எந்தவொரு ஆதாரமும் இல்லை.
ஏனெனில் “நிய்யத்” என்ற அரபுப் பதத்திற்கு “மனதில் நினைத்தல்” என்பதே அர்த்தமாகும். எனவே ,“நிய்யத்” இடம்பெற வேண்டிய இடம் உள்ளமே அன்றி உதடுகள் அல்ல. மனதில் நினைக்க வேண்டியதை வாயினால் மொழிந்தால் அதற்கு நிய்யத் என்று சொல்லப்படவும் மாட்டாது. மனதினால் நினைக்குமாறு நபியவர்கள் கட்டளையிட்டிருக்கும் போது “இல்லை , இல்லை நாங்கள்
வாயினாலும் மொழிவோம்” என்று கூறுவது நபியைப் புறக்கணிப்பதாகும். முற்கால இமாம்கள் மனதில் நினைப்பதையே நிய்யத் என குறிப்பிட்டிருக்கிறார்கள். ஹனபி மத்ஹப் அறிஞரான இமாம் இப்னு அபில் இஸ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: “நிய்யத்தை வாயினால் மொழிய வேண்டுமென்று இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்களோ , ஏனைய மூன்று மத்ஹபுகளின் இமாம்களோ ஒருபோதும் கூறவில்லை. அவர்கள் அனைவரினதும் ஏகோபித்த கருத்து ,நிய்யத் என்பது மனதில் நினைத்தல் என்பதேயாகும். பிற்காலத்தில் தோன்றிய சில அறிஞர்களே நிய்யத்தை வாயினால் மொழிய வேண்டும் என்பதை உருவாக்கினார்கள்” (நூல் : “அல் இத்திபாஃ” ,பக் : 62).
இதே வேளை , இன்னுமொரு விடயத்தையும் சிந்திக்க வேண்டும். அனைத்து வணக்கங்களுக்கும் நிய்யத் அவசியம் என்று இஸ்லாம் குறிப்பிடுகின்ற போது தொழுகைக்கும் நோன்புக்கும் மாத்திரம்
நிய்யத்தை வாயினால் மொழிவது எந்த வகையில் நியாயமானது?
அல்குர்ஆன் ஓதுதல் , திக்ர் , துஆ , ஸலவாத் , ஸகாத் மற்றும் இன்னோரன்ன வணக்கங்கள் இருக்கின்றன. இவற்றுக்கும் நிய்யத் அவசியமாகும். நிய்யத்தை வாயினால் மொழிய வேண்டும் என்று கூறுவோர் ஏன் இந்த வணக்கங்களைச் செய்யும் போது வாயினால் நிய்யத்தை மொழிவதில்லை?
(தொடரும்)
ARM.ரிஸ்வான் (ஷர்க்கி)
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments