Ticker

6/recent/ticker-posts

இஸ்ரேல்: பாலஸ்தீனர்களுக்கு மனிதநேய உதவிகளைச் செய்ய சொன்னதால் ஆத்திரம் - தலைமை ஆசிரியரை தாக்கிய கும்பல் !

இஸ்ரேல் -பாலஸ்தீனம் இடையே கடந்த பல ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வருகிறது. பாலஸ்தீன பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டு வந்த குடியேற்றம் மற்றும் அல்- அக்ஸா மசூதி பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு போன்றவற்றால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு வந்தது.

இந்த சூழலில் கடந்த மாதம் அக்டோபர் 7-ம் தேதி, இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை அனுப்பி தாக்குதல் நடத்தியது. மேலும், இஸ்ரேலின் பல பகுதியில் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதில் நூற்றுக்கணக்கான இஸ்ரேல் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் கொல்லப்பட்டனர். அதோடு ஏராளமானோரை ஹமாஸ் அமைப்பு பணயக்கைதிகளாக பிடித்து வைத்தது.

ஹமாஸ் அமைப்பின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் விமானங்கள் மூலமும், ஏவுகணைகளை அனுப்பியும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல் இதுவரை 21 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவி பாலஸ்தீன குடிமக்கள் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது.

இந்த நிலையில், பாலஸ்தீன மக்களுக்கு மனிதநேய உதவிகளைச் செய்யவேண்டும் என்று கூறிய பள்ளி தலைமை ஆசிரியரை அந்த பள்ளி மாணவர்களே தாக்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலஸ்தீன மக்களுக்கு மனிதநேய உதவிகளைச் செய்யவேண்டும் என்று Haaretz என்ற பத்திரிக்கை செய்தி வெளியிட்டிருந்தது.

இதனை இஸ்ரேலின் முக்கிய நகரான டெல் அவிவ்வில் உள்ள உயர்நிலை பள்ளியின் தலைமை ஆசிரியர் ஒருவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த அவர் பள்ளி மாணவர்கள் சிலர் கும்பலாக திரண்டு பள்ளியிலேயே அந்த ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து அந்த கும்பல் தலைமை ஆசிரியரை தாக்கியுள்ளது. இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், பல்வேறு தரப்பினரும் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், வலதுசாரி தலைவர்கள் எதிர்காலத்தில் மனித தன்மை அற்ற தலைமுறையை உருவாக்கி வருவதாகவும் விமர்சித்து வருகின்றனர்.

kalaignarseithigal


 



Post a Comment

0 Comments