திருவாட்டி நூர் ஆயிஷா முகம்மது அக்பரின் இறுதிச் சடங்கில் அவரது கணவர் திரு ரவுஃபும் உற்றார் உறவினர்களும் கலந்துகொண்டனர். படம்: பெரித்தா ஹரியான்
அண்மையில் நியூயார்க் பூங்காவில் உள்ள 30 மீட்டர் உயரமுள்ள பாறையிலிருந்து விழுந்து உயிரிழந்த சிங்கப்பூர் பெண் மிகவும் அன்பானவர், தாராள மனம் படைத்தவர், விலங்குகளை நேசிப்பவர் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.
சம்பர் 22ஆம் தேதியன்று 39 வயது திருவாட்டி நூர் ஆயிஷா முகம்மது அக்பர் மாண்டார்.
பிரேத பரிசோதனைக்குப் பிறகு அவரது உடலை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் அவரது கணவரான 41 வயது திரு அப்துல் ரவுஃப் முகம்மது சையது சிங்கப்பூருக்குக் கொண்டு வந்தார்.
அமெரிக்காவை மையமாகக் கொண்ட சொத்து முதலீட்டு நிறுவனமான நோபல் ஸ்கை இன்டர்நேஷனலின் இணை நிறுவனர்களாக அந்தத் தம்பதியர் இருந்தனர்.
திருவாட்டி நூர் ஆயிஷாவின் நல்லுடல் டிசம்பர் 27ஆம் தேதியன்று சுவா சூ காங் இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.
200க்கும் மேற்பட்டோர் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டனர். திரு ரவுஃப் கண்ணீருடன் தமது மகனான 10 வயது யூசோஃப் ஐடானுக்கு ஆறுதல் கூறினார்.
செய்தியாளர்களிடம் பேச அவர் மறுத்துவிட்டார்.
திருவாட்டி நூர் ஆயிஷா மிகவும் அன்பானவர் என்றும் தமது குடும்பத்தினர் அனைவருக்கும் அவரை மிகவும் பிடிக்கும் என்றும் திரு ரவுஃபின் சகோதரியான 30 வயது திருவாட்டி கேப்ரியேல் பெரேரா தெரிவித்தார்.
விலங்குகள் மீது திருவாட்டி ஆயிஷா அதிகப் பாசம் வைத்திருந்ததாகவும் ஆபத்தில் சிக்கி உதவி தேவைப்பட்ட விலங்குகளை அவர் காப்பாற்றியிருப்பதாக திருவாட்டி கேப்ரியல் நினைவுகூர்ந்தார்.
திருவாட்டி ஆயிஷாவை திரு ரவுஃப் ஏன் காப்பாற்றவில்லை என்றும் இதனால் சந்தேகம் ஏற்படுவதாகவும் இணையவாசிகள் தெரிவித்திருந்த கருத்துகளுக்கு அவர் பதிலளித்தார்.
நியூயார்க் அதிகாரிகள் தமது சகோதரரிடம் விசாரணை நடத்திவிட்டதாகவும் சம்பவம் நிகழ்ந்ததற்கு முன்பு அந்தத் தம்பதியர் எடுத்த காணொளி, படங்களை அவர்கள் ஆராய்ந்துவிட்டதாகவும் திருவாட்டி கேப்ரியேல் கூறினார்.
சந்தேகம் ஏற்படும்படி ஏதும் நடக்கவில்லை என்று அதிகாரிகள் முடிவெடுத்ததாக அவர் தெரிவித்தார்.
திரு ரவுஃப் மீது அவர்களுக்குச் சந்தேகம் இருந்திருந்தால் சிங்கப்பூருக்கு வர அவரை அதிகாரிகள் அனுமதித்திருக்கமாட்டார்கள் என்றார் திருவாட்டி கேப்ரியேல்.
தமது மனைவி பாறையிலிருந்து வழுக்கி கீழே விழுந்ததாகவும் அவரைத் தேட ஒரு குடும்பம் உதவியதாகவும் திரு ரவுஃப் டிசம்பர் 24ஆம் தேதியன்று தெரிவித்திருந்தார்.
திருவாட்டி ஆயிஷாவைக் கண்டுபிடித்தபோது அவர் இன்னும் உயிருடன் இருந்ததாக திரு ரவுஃப் கூறினார். ஹெலிகாப்டர் மூலம் அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
காயமடைந்த திருவாட்டி ஆயிஷா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் குறித்து விசாரணை தொடர்வதாக நியூயார்க் காவல்துறை தெரிவித்துள்ளது.
tamilmurasu
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments