Ticker

6/recent/ticker-posts

அணிலோடு அழகிய நாட்கள்....!-(நேர்காணல் )

(அணில் வளர்க்கும் எட்டாம் வகுப்பு மாணவியுடன் ஒரு நேர்காணல் )

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் உமா மெட்ரிகுலேஷன் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருபவர் மாணவி ஜனனிஸ்ரீ. அவர் தனது வீட்டில் அணில்குட்டிகளை ஆசையாக வளர்த்து வருகிறார் என்ற செய்தியை கேள்விப்பட்டு அவரை சந்தித்தோம். அப்போது அவர் தனது இடது கையில் வைத்திருந்த ஆப்பிள் துண்டுகளை எடுத்து, வலது கையில் வைத்திருந்த அணிலுக்கு ஊட்டிக் கொண்டிருந்தார். 

அவரிடம் நமது கேள்விகளை முன்வைத்தோம்.

மாணவி ஜனனிஸ்ரீ, அணிலோடு பகிர்ந்துகொண்ட அழகிய  நாட்களைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை வேட்டை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம்.

வேட்டை நிருபர் :"உங்களுக்கு அணில் வளர்க்கும் ஆர்வம் எப்படி வந்தது...?"

மாணவி ஜனனிஸ்ரீ : "எனக்கு சின்ன வயசுல அணில்னா ரொம்ப புடிக்கும். எங்க வீட்டு பால்கனியை ஒட்டி வளர்ந்திருந்த வேப்பமரத்தின் கிளைகளில் நிறைய அணில்கள் வந்து விளையாடும். அவைகளை நான் பால்கனியில் நின்றபடி வேடிக்கை பார்ப்பேன். 

ஒருநாள் என் கைக்கு எட்டும் கிளையில் அணில்கள் வந்து விளையாடிக் கொண்டிருந்தன. அப்போது நான் சாப்பிட்டுக் கொண்டிருந்த கொய்யாப்பழத்தை அணில்களிடம் நீட்டினேன். ஒரு அணில் அதை தன் வாயினால் கவ்வி கொறித்துத் தின்றது. அந்தக் காட்சி பார்ப்பதற்கு மனதுக்கும் மகிழ்ச்சியைத் தந்தது. கொள்ளை அழகாய் இருந்தது. மனதுக்கும் ஆகவே அணிலை வளர்க்க

வேட்டை நிருபர்: "அணில் எப்படி உங்களிடம் இவ்வளவு நெருக்கமானது...?"

மாணவி ஜனனிஸ்ரீ: இரண்டு நாளிலேயே அணில் என்னிடம் அன்பா பழக ஆரம்பிச்சது. என் கையிலிருந்து பிஸ்கெட்டு, திராட்சை, கொய்யா பழம்ன்னு கவ்வி கொண்டு போகும். சில நேரம் என் பக்கத்தில் நின்னு சாப்பிடும். நான் தடவி கொடுப்பேன். பஞ்சுபோல இருக்கும். இரண்டு மாசமா வந்த அணிலு... அதன்பிறகு வரவே இல்ல. எனக்கு மனசுக்கு வேதனையா இருக்கும். காணலியே...? எங்கே போச்சு...? அந்த மரக்கிளையை பார்க்கும் போது அணிலின் ஞாபகம் தான் வரும். கொஞ்ச நாள் போனதும்... அந்த அணில் திரும்ப வந்திடிச்சு. 

மெலிஞ்சுதான் இருந்திச்சி. பார்க்கதுக்கே எனக்கு பாவமா இருந்திச்சி. வீட்டுக்குள்ள ஓடிப் போய்... முந்திரி பருப்பை கொண்டு வந்து கொடுத்தேன். கவ்வி கொண்டு சாப்பிடாம மரத்துக்கு மேலே ஓடிடுச்சு. கொஞ்ச நேரத்துல மீண்டும் வந்துச்சு. மறுபடியும் முந்திரிபருப்பை கொடுத்தேன். அதையும் கவ்விட்டு ஓடிடுச்சு. எங்க அம்மா சொன்னாங்க "ஜனனி உன் அணிலு குட்டி போட்டிருக்கு"ன்னு. உடனே ''எனக்கு குட்டி அணில பார்க்க ஆசையா இருக்குமா"ன்னு அம்மாகிட்ட சொன்னேன். இரண்டு நாளில... என் செல்ல அணில ஒரு பூனை கடிச்சி கொன்னுடிச்சு "பாவம்மா... நம்ம அணிலு..குட்டி அணிலுக்கு பசியா இருக்கும்"னு அழுதேன்."

வேட்டை நிருபர் : "அதன்பிறகு அணில்குட்டிகள் உங்களுக்கு எப்படி கிடைத்தது...? எப்படி பழக்கினீர்கள்...?"

மாணவி ஜனனிஸ்ரீ : "அணில் இறந்த இரண்டுநாள்ல... தென்னை மரத்திலிருந்து ஒரு பெரிய கூடு ஒண்ணு கீழே விழுந்திடிச்சு. அந்த கூட்டை எங்கப்பா எடுத்திட்டு வந்தாங்க. அதனுள்ளே இரு அணில்குட்டிகள் இருந்திச்சி. கண்ணு மூடிதான் இருந்தது. எங்கப்பா கடைக்கு போய் ஒரு பில்லர் வாங்கி வந்தாங்க. பசும்பால பில்லர்ல எடுத்து... அணிலுக்க வாயில் வைச்சாங்க அம்மா. 

அணில்குட்டிகள் பாலை குடிச்சிடிச்சு வீட்டிலிருந்த சின்ன கூடையை எடுத்து, அதனுள்ளே தேங்காயை சுற்றியிருந்த சவுரிகளை எல்லாம் சின்ன சின்னதா சேர்த்து, பஞ்சுபோலாக்கி கொண்டு வந்தாங்க எங்கப்பா... அதுக்குள்ளே இரண்டு அணில்குட்டிகளை தூங்க வச்சோம். கொஞ்ச நாளில என்கிட்ட நல்லா பழக ஆரம்பிச்சது. கையில வந்து இருக்கும். தடவி கொடுப்பேன். தூங்கிடும் அணில்குட்டிகள். அப்பா வேலைக்கு போய்விட்டு வந்தாச்சின்னா அணில்குட்டிகளோட விளையாடுவார். 

எங்க எல்லாரிடமும் அன்பாக பழகிடிச்சு. அணில்குட்டிகளுக்கு ராமு, லிச்சுன்னு நான்தான் பெயர் வைத்தேன். பெரிசா அணில்கள் வளர்ந்திடிச்சு. ராமு அணில் வெளியேபோய் வர ஆரம்பிச்சது. காலைல போனா சாயந்திரம் வீட்டுக்கு வந்திடும். ஒருநாள் இரவு எட்டுமணி ஆச்சு. ராமு அணிலு வரல. நான் சாமி போட்டோ கிட்ட போய் இருந்து... கந்த சஷ்டி கவசம் பாடினேன். பாடி முடிஞ்சதும் ராமு அணில் வந்திடிச்சி. எல்லாரும் என்னை தான் பாத்தாங்க. ராமு அணிலை தூக்கி முத்தமிட்டு தாலாட்டினேன். லிச்சு அணில் வெளியே போகாது. ஏன்னா... பயந்த சுபாவம் அதுக்கு. இரண்டு அணிலும் என் மடியில வந்து விளையாடும்...”

வேட்டை நிருபர் : "அணில்கள் உங்களை தொந்தரவு செய்யுமா...?"

மாணவி ஜனனிஸ்ரீ : இதுவரையும் எங்களை தொந்தரவு செஞ்சதில்லை. என்னோடு விளையாடுவதுதான் அணிலுக்கு பிடிக்கும். ஒரு தடவை லிச்சு அணிலு சத்தம் போட்டுகிட்டே இருந்தது. நானும் "பசிக்குதா...?"ன்னு கேட்டேன். ஆனா அது டிவி பக்கமா பார்த்து பெரிசா சத்தம் போட ஆரம்பிச்சது... சூர்யா அண்ணன் வந்து பார்த்தான். டிவி இருந்த மேஜைக்கு கீழே சிவப்பு கலர்ல பெரிய அரணை ஒண்ணு ஒளிஞ்சிட்டு இருந்தது. அதை நாங்க வெளியே விரட்டினோம். லிச்சு மட்டும் பார்க்கமா இருந்திருந்தா... எங்கள்ல யாரையாவது அது கடிச்சு இருக்கும். அரணை வெளியே போனதும் லிச்சு என் தோளில் ஏறி நின்னு 'கிச்... கிச்ன்னு செல்லமா சத்தம் போட்டது."

வேட்டை நிருபர் : "அணில்களுக்கு கூடு ஏதுவும் வைத்திருக்கீங்களா...?" 

மாணவி ஜனனிஸ்ரீ : "கூடு எல்லாம் கிடையாது. அதுக எங்க வேணுமானும் போய் இருக்கும். வீட்டு கதவு மேலே... அப்புறமா கதவு கர்ட்டன் மேலே... போய் இருக்கும். தூங்கிறதுக்கு மட்டும் எங்க வீட்டு துணி அலமாரியில போய் படுத்துக்கும். அந்த அலமாரிக்கு கதவு இல்ல.. துணிகளுக்குள்ளே போய் சொகுசா தூங்கும். வீட்ல வெளியே இருந்து யாராவது வந்தாங்கன்னா.. ஓடி போய் ஒளிஞ்சுக்கும். அவங்க போனபிறகு தான் வெளியே வரும்.

ஒரு தடவை... லிச்சு அணிலு மேலிருந்து கீழே விழுந்ததல அடிபட்டு மூக்கு, வாயயெல்லாம் ஒரே ரத்தம். அதுக்கு அப்பா தைலம் தடவி விட்டாங்க. அன்னிக்கு நிறைய பழம் சாப்பிட்டதும், அலமாரியில தூங்க போச்சு. மறுநாள் காலையில்... என் செல்லம் லிச்சு செத்து கிடந்தது. அது என்கிட்ட ரொம்ப பாசமா இருக்கும். வீட்ல எல்லாரும் அழுதிட்டாங்க... பிறகு அப்பா, வீட்டுக்கு பக்கத்தில ஒரு பெரிய குழி தோண்டினாங்க. அதில ஒரு துணியை விரிச்சு... லிச்சுவை படுக்க வச்சாங்க. ஒரு ரூபாய் காசும், பூவும் போட்டு குழியை மூடினாங்க...

அன்னிக்கு ராமு அணிலு ஒண்ணுமே சாப்பிடல. அடிக்கடி வெளியே போயிட்டு வந்திட்டே இருந்து. அலமாரியை சுத்தி, சுத்தி வந்திட்டு... கதவு மேலே சோகமா படுத்திட்டு. மறுநாள் காலைல வெளியே போன ராமு அணில் அன்னிக்கு ராத்திரி பத்து மணியாகியும்கூட வரல. விடிய, விடிய கதவை திறந்து வச்சு காத்திட்டிருந்தாங்க அப்பா ஆனா ராமு வரல... இதுவரையிலும் அது வரல. அதுக்கு லிச்சுவை பிரிஞ்ச சோகம்.. எங்க எல்லாரையும் விட்டு எங்கேயோ போயிடுச்சு ராமு... அன்னிக்கு அப்பாவும் ரொம்ப கவலையா இருந்தாங்க... சாப்பிடலை... இதை கேள்விப்பட்ட எழுத்தாளர் ராஜேஷ்குமார் தாத்தா போன் பண்ணி ஆறுதல் சொன்னாங்க.

கொஞ்ச நாளுக்கு பிறகு எங்கப்பா ஒரு அணில் கொண்டு வந்தாங்க. எனக்கு அத பாத்ததும் ஒரே ஆச்சரியம்! ஏன்னா... ராமு, லிச்சு போல தான் இந்த குட்டி அணிலும் இருந்திச்சி. என் மடியில படுக்க வச்சு அதுக்கு 'ராலி'ன்னு பேரு வெச்சேன்."

வேட்டை நிருபர் : "ராலின்னு ஏன் பேர் வெச்சீங்க...?"

மாணவி ஜனனிஸ்ரீ: ராமு, லிச்சு அணிலோட பேர்ல இருந்து முதல் எழுத்தை எடுத்துதான் ராலின்னு பேர் வெச்சேன். இந்த ராலி குட்டி எங்ககிட்ட ரொம்ப அன்பா இருக்கும். ஒரு வருஷமா ராலி அணிலு எங்ககூடதான் இருக்கு கேரட்ன்னா நல்லா சாப்பிடும். 

இனி ராலி என்னை விட்டு எங்கயும் போகாது. என் கூடதான் இருக்கும்..." என்று சொன்ன ஜனனிஸ்ரீ கண்ணாடி செல்பில் விளையாட்டு கார் மீது அமர்ந்திருந்த ராலி அணிலை எடுத்து கொஞ்சினார்.


வேட்டை நிருபர் : "அணில் வளர்ப்பதினால் பிரயோஜனம்  என்ன ...?"

மாணவி ஜனனிஸ்ரீ: "எல்லோரும் பூனை, நாய், கிளி, ஆடு வளர்ப்பாங்க.எனக்கு அணில் பிடிக்கும். நான் அணிலிடம் அன்பா இருப்பதையும், அதற்கு சாப்பாடு கொடுப்பதையும், அதனோடு விளையாடுவதையும்... வீடியோ எடுத்து என் தோழிகளுக்கு அனுப்புவேன். இதைபார்த்த என் தோழிங்க, அவங்க வீட்டில வளர்க்கும் ஆடுகளுக்கும் கீரை வாங்கி போட ஆரம்பிச்சாங்க. அதனோட அன்பா இருக்க ஆரம்பிச்சாங்க... அதை எனக்கு வீடியோ எடுத்து அனுப்புவாங்க. இதையெல்லாம் எங்கப்பா முகநூல்ல போடுவாங்க. அவங்க ஃபிரண்ட்ஸ் எல்லாரும் பார்த்திட்டு, "எங்க பிள்ளைங்களும் பூனை, காக்கை, புறாக்களுக்கு எல்லாம் உணவு போட ஆரம்பிச்சிருக்காங்க. அவங்க மனசிலயும் உயிர்களிடத்து அன்பு வேணும்ங்கிறதை உங்க அணில் புரிய வைச்சிருக்கு!"ன்னு சொல்வாங்க... 

"அதை கேட்கும்போது மனதுக்குள் மகிழ்ச்சி துள்ளும் அணிலைப் போல!"என்றார் மாணவி ஜனனிஸ்ரீ.

வேட்டை நிருபர்
நாகர்கோவில்


 



Post a Comment

2 Comments

  1. மனம் மகிழ்வில்...

    இனிய வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. அழகு டா செல்லம்... படிக்க படிக்க மிகுந்த ஆர்வமும் மகிழ்வுமாய் இருந்தது.. ராலி குட்டியோட எப்போதும் சந்தோஷமாய் இருக்க என் மனமார்ந்த வாழ்த்துகள்💐💞😍

    ReplyDelete