Ticker

6/recent/ticker-posts

1.பிக்ஹுஸ் ஸவ்ம் (நோன்பின் சட்டங்கள்)

(இந்த ஆக்கம் அஷ்ஷெய்க் கலாநிதி ஹைஸம் ஸர்ஹான் என்பவரின் "பிக்ஹுஸ் ஸவ்ம்" என்ற கையேட்டின் மொழி பெயர்ப்பாகும்)

மாபெரும் அருளாளன் அன்புடையோன் அல்லாஹ்வின் பெயரால்...

ஸவ்ம் (நோன்பு) என்பதன் அர்த்தம்:மொழி வழக்கில்: தடுத்துக்கொள்ளல் / தவிர்த்துக்கொள்ளல் என்பதாகும்.

மார்க்க வழக்கில்: ஃபஜ்ர் சாதிக் (எனும் உண்மையான பஜ்ர்) ஆரம்பிக்கும் நேரத்திலிருந்து சூரியன் மறையும் வரை உண்பதையும்  குடிப்பதையும் ஏனைய நோன்பை முறிக்கின்ற அனைத்தையும் தவிர்த்துக் கொள்வதன் மூலம் அல்லாஹ்வை வணங்குதல்.

நோன்பின் வகைகள்:

1. பர்ழான (கட்டாயமான) நோன்பு.

உ-ம்: ரமழான் நோன்பு, கப்பாரஹ் (குற்றப்பரிகார) நோன்புகள், நேர்ச்சை நோன்பு. 

2. நஃபிலான (உபரியான) நோன்புகள்.

(உ-ம்: அறஃபஹ் நோன்பு, ஆஷூராஃ நோன்பு, திங்கள், வியாழன் நோன்புகள்.)

நோன்பின் ருகுன்கள்:

(அதில் அத்தியவசியமாகப் பேணவேண்டியவை / அவையின்றி நோன்பு செல்லுபடியற்றது)

1. நிய்யத் (எண்ணம்) 

2. நோன்பை முறிக்கும் விடயங்களைத் தவிர்த்தல்

நோன்பின் நிய்யத்களின் வகைகள்:

1- பர்ழான நோன்பின் நிய்யத்: 

- பர்ழான நோன்பிற்கு கட்டாயமாக இரவில், அதாவது பஜ்ருக்கு முன்னரே நிய்யத் வைக்கப்பட வேண்டும். நோன்பு பிடிக்கப் போகிறேன் என்ற எண்ணம் பஜ்ருக்கு முன்னர் வர வேண்டும். 

- ரமழான் மாதத்தின் ஆரம்பத்தில் நிய்யத் வைத்தால்  (அதாவது இந்த மாதம் நோன்பு பிடிக்கப் போகிறேன் என்ற எண்ணம் ஏற்பட்டால்) போதுமானது. 

- நிய்யத் வர வேண்டிய இடம் உள்ளமே; அதனை நாவினால் மொழிவது பித்அத் - மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்டதாகும். 

2- நஃபிலான (உபரியான) நோன்பின் நிய்யத்: 

- நோன்பை முறிக்கும் எந்த ஒரு காரியத்தையும் பஜ்ரில் இருந்து செய்யாமலிருந்தால் நாளின் எந்த நேரத்திலும் நஃபில் நோன்புக்குரிய நிய்யத்தை வைத்து நோன்பை தொடர முடியும். 

- ஆனால் நிய்யத் வைத்த நேரத்திலிருந்து தான் கூலி-நன்மை கணக்கிடப்படுமா அல்லது முழு நாளுக்கும் கூலி கிடைக்குமா என்று அறிஞர்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடு உள்ளது.

ரமழான் நோன்பு கட்டாயமாவதற்கான நிபந்தனைகள்:

1- முஸ்லிமாக இருத்தல்.

2- புத்தி சுவாதீனம் இருத்தல்.

3- பருவ வயதை அடைந்திருத்தல்.

-ஆயினும் 'தம்யீஸ்' எனும் பிரித்தறியும் பருவத்தை அடையும் சிறுவர்களும் நோன்பு பிடிக்க ஆர்வமூட்டப்படுவர். நோன்பு அவர்களுக்குக் கட்டாயம் இல்லாவிட்டாலும்  அவர்களது பொறுப்பாளிகள் அவர்களுக்கு ஏவுவார்கள்.-

4- ஊரில் தங்கி இருத்தல். 

-அதாவது பிரயாணத்தில் இருப்பவர் நோன்பு நோற்பது கட்டாயமில்லை. பிரயாணம் முடிந்த பின்னர் விட்ட நோன்புகளை நோற்றுக் கொள்ளவேண்டும். எனினும் சிரமம் இல்லாவிடின் பிரயாணி நோன்பு நோற்றுக் கொள்வதே ஏற்றமானது. காரணம் 

1. நபியவர்கள் அவ்வாறு செய்து இருக்கிறார்கள்; 

2. இதனால் விரைவாக பொறுப்பு நிறைவேற்றப்பட்டுவிடுகிறது; 

3. ஏவல், விலக்கல்களுக்குட்பட்ட மனிதனுக்கு இதுவே இலகுவாகவும் அமைந்திருக்கிறது; 

4. மேலும், இதன் மூலம் இம்மாதத்தின் சிறப்பையும் அடைந்து கொள்ளமுடியும். 

5- ஆரோக்கியமாக இருத்தல்.

6- மாதவிடாய் மற்றும் குழந்தை பெற்ற பிறகு ஏற்படும் இரத்தப்போக்கிலிருந்து விடுபட்டிருத்தல். 

(தொடரும்)

Presented by
Sunnah Academy
South India
 
 மேலும்...வேட்டை வாரமலர்


 



Post a Comment

0 Comments