Ad Code



5-ரமழான் மாத நோன்பு தொடர்பான ஃபத்வாக்கள்


கேள்வி:
நோன்பை முறிக்கக் கூடியவைகள் எவை?

பதில்:
பின்வரும் காரணிகள் நோன்பை முறிக்கக் கூடியவைகளாகும்.

1. உடலுறவு கொள்ளல்.
2. உண்ணல்.
3. பருகல்.
4. இச்சையுடன் விந்தை வெளிப்படுத்துதல்.
5. உண்ணல், குடித்தலுக்குப் பகரமாக அமையக் கூடியவை.
7. வேண்டுமென வாந்தியெடுத்தல்.
6. ஹிஜாமா மூலம் இரத்தத்தை வெளியேற்றுதல்
8. மாதத் தீட்டு, பிரசவத் தீட்டு, இரத்தம் வெளியேறுதல்.
உண்ணல், பருகல், உடலுறவில் ஈடுபடுதல் ஆகிய மூன்றும் நோன்பை முறிக்கும் என்பதற்கான ஆதாரமாகப் பின்வரும் வசனம் அமைகின்றன.

‘நோன்பு (கால) இரவில் உங்கள் மனைவியரிடம் உறவு கொள்வது உங்களுக்கு ஆகுமாக்கப்பட்டுள்ளது. அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள். உங்களுக்கு நீங்களே (இரகசியமாக) துரோகமிழைத்துக் கொண்டிருந்ததை அல்லாஹ் நன்கறிவான். எனவே, உங்கள் பாவமன்னிப்பை ஏற்று உங்களை மன்னித்தான். இப்போது முதல் (நோன்பு கால இரவில்) உங்கள் மனைவியருடன் உறவு கொண்டு அல்லாஹ் உங்களுக்கு விதித்ததைத் தேடிக் கொள்ளுங்கள். இன்னும் ஃபஜ்ரு நேரம் என்ற வெள்ளை நூல் (இரவு என்ற) கறுப்பு நூலிலிருந்து தெளி வாகும் வரை உண்ணுங்கள்ளூ பருகுங்கள்ளூ பின்னர் இரவு வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள். இன்னும் நீங்கள் மஸ்ஜித்களில் (தங்கி) இஃதிகாப் இருக்கும் போது அவர்களுடன் உறவு கொள்ளாதீர்கள். இவை அல்லாஹ்வின் வரம்புகளாகும். ஆகவே, இவற்றை நெருங்காதீர்கள். இவ்வாறே, மனிதர்கள் (தன்னை) அஞ்சி நடப்பதற்காக அல்லாஹ் தனது வசனங்களை அவர்களுக்கு தெளிவு படுத்துகின்றான். (2:187)

நான்காவதாக, இச்சையுடன் விந்தை வெளியேற்றுவது நோன்பை முறிக்கும் என்பதற்கு நோன்பாளி குறித்து அல்லாஹ் கூறும் பின்வரும் ஹதீஸுல் குத்ஸி ஆதாரமாக அமைகின்றது.

‘நோன்பாளி தனது உணவையும், தனது பானத்தையும், தனது இச்சையையும் எனக்காக விடுகின்றான்.’

(இங்கே நோன்பாளி அல்லாஹ் வுக்காகத் தனது ஷஹ்வத்தை – இச்சையை விடுவதாக அல்லாஹ் கூறுகின்றான்.) இந்திரியத்தை வெளியேற்றுவது ஷஹ்வத்தை – இச்சையைச் சேர்ந்தது என்பதைப் பின்வரும் ஹதீஸ் தெளிவு படுத்துகின்றது.

‘உங்களில் ஒருவர் இல்லறத்தில் ஈடுபடுவதும் ஸதகாவாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். எங்களில் ஒருவர் தனது ஷஹ்வத்தை – இச்சையைத் தீர்ப்பதற்காக மனைவியிடம் செல்வதற்கு எமக்கு நற்கூலி உண்டா? என நபியவர்களிடத்தில் கேட்டனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் அவர் அதை ஹராத்தில் வைத்தால் அவருக்குப் பாவம் உண்டல்லவா? அவ்வாறே அவர் அதை ஹலாலான முறையில் வைத்தால் அதற்கு நற்கூலி உண்டு என்று கூறினார்கள்.’
(முஸ்லிம்: 2376)

அதை வைத்தால் என்று நபி(ச) அவர்கள் கூறியது, குதித்துப் பாயும் விந்தையே ஆகும். இதனால்தான் உடலுறவு அல்லாத இச்சையுடன் மனைவியுடன் கொள்ளும் சில சில்மிஷங்களால் ‘மதி’ (மதன நீர்) வெளிப்பட்டால் கூட நோன்பு முறியாது என்பதே சரியான கருத்தாக உள்ளது. (குதித்துப் பாயும் விந்துவே முன்னைய ஹதீஸின் கருத்தாகக் கொள்ளப்படுகின்றது என்பதைக் குறிக்கவே இது இங்கே கூறப்படுகின்றது)
 
ஐந்தாவதாக, உண்ணல் மற்றும் பருகலில் இல்லாத அதே வேளை, அந்த இடத்தை நிறைக்கக் கூடிய செயற்பாடுகள் நோன்பை முறிக்கும். உதாரணமாக, உணவுக்குப் பகரமாக ஏற்றப்படும் சேலைன். இது உண்ணல், பருகல் என்ற வட்டத்திற்குள் நேரடியாக வராவிட்டாலும் கூட உண்ணல், பருகல் என்பவற்றிற்கு ஈடாக நடக்கக் கூடியதாகும். இந்த வகையில் உணவுக்குப் பகரமாக ஏற்றப்படக் கூடிய சேலைன் மருந்தும் நோன்பை முறிக்கக் கூடியதாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். உணவாக அல்லாமல் மருந்தாக, ஊசி போன்ற வழிகளினூடாக மருந்து ஏற்றப்பட்டால் அது நோன்பை முறிக்காது.

ஆறாவதாக, வேண்டுமென்றே வாந்தி எடுத்தல். அதாவது, தனது வயிற்றில் உள்ளது வாய் மூலமாக வெளியே வர வேண்டும் என்ற நோக்கில் வாந்தி எடுத்தல் நோன்பை முறிக்கும். இது குறித்து அபூ ஹுரைரா(வ) அவர்கள் அறிவிக்கும் பின்வரும் ஹதீஸ் பேசுகின்றது.

‘யாருக்கு வாந்தி வருகின்றதோ அவர் (அந்த நோன்பைக்) கழாச் செய்ய வேண்டியதில்லை. யார் வேண்டுமென்றே வாந்தி எடுக்கின்றாரோ அவர் (அந்த நோன்பைக்) கழாச் செய்யட்டும்’ என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(திர்மிதி: 720)

ஒருவர் வாந்தி எடுத்தால் வயிறு காலியாகிவிடுகின்றது. அந்த வெற்றிடத்தை நிரப்பும் தேவை ஏற்படுகின்றது. எனவே, ஒருவர் பர்ழான நோன்பை நோற்றிருந்தால் அவர் தானாக வாந்தி எடுப்பது கூடாது. ஏனெனில், அவர் வேண்டுமென வாந்தி எடுத்தால் கடமையான நோன்பை சீர்கெடுத்துக் கொள்கின்றார்.

ஏழாவது ஹிஜாமா மூலமாக இரத்தத்தை வெளியேற்றுதல்.

‘ஹிஜாமா செய்பவரும் செய்துவிடுபவரும் நோன்பை முறித்துக் கொண்டனர்.’ என நபி(ச) அவர்கள் கூறினார்கள்.
(ஆதாரம்: புஹாரி: 1937, அபூதாவூத்- 2369)

எட்டாவதாக ஹைல், நிபாஸுடைய இரத்தம் வெளியேறுவது. ஒரு பெண் மாதத்தீட்டானால் தொழாமலும் நோன்பு நோற்காமலும் இருப்பதில்லையா? என்ற ஹதீஸ் இதற்கான ஆதாரமாகும். மாதத்தீட்டுடைய பெண் நோன்பு நோற்றால் அது செல்லாது என்பதில் அறிஞர்கள் ‘இஸ்மா’ முடிவில் உள்ளனர். பிரசவத் தீட்டும் இது போன்றதுதான்.

இந்த எட்டு விடயங்களும் நோன்பை முறிக்கக் கூடியவைகளாகும். இவை அனைத்தும் மூன்று நிபந்தனைகளுக்கு உட்பட்டாலேயன்றி நோன்பு முறியமாட்டாது. அவையாவன,

1. அறிவு
2. நிலைவு – ஞபகம்
3. நோக்கம்

இந்த மூன்று நிபந்தனைகளும் இருந்தாலே அன்றி மேற்குறித்த நோன்பை முறிக்கும் செயல்கள் நோன்பைப் பாழாக்க மாட்டாது.

குறித்த நபர் இது குறித்த ஷரீஆ சட்டத்தை அறிந்தவராகவும் குறித்த நிலை அல்லது நேரம் பற்றிய அறிவுடையவராகவும் இருத்தல். அவர் ஷரீஆ சட்டம் குறித்து அறிவீனராகவும் அல்லது குறித்த நேரம் பற்றிய அறிவீனராகவும் இருந்தால் அவரது நோன்பு ஏற்றுக் கொள்ளத்தக்கதாகும்.

அல்குர்ஆனில் எமக்குக் கற்றுத் தரப்பட்டது இப்படி அமைந்துள்ளது.

”எங்கள் இரட்சகனே! நாம் மறந்துவிட்டாலோ அல்லது தவறிழைத்துவிட்டாலோ எம்மைக் குற்றம் பிடித்து விடாதிருப்பாயாக! ‘
(2:286)

இவ்வாறு நாம் கேட்கும் போது நீங்கள் கேட்டதை நான் தந்துவிட்டேன் என அல்லாஹ் கூறுகின்றான்.

‘நீங்கள் எதில் தவறு செய்தீர்களோ, அதில் உங்கள் மீது குற்றமில்லை. எனினும், உங்களது உள்ளங்கள் வேண்டுமென்றே கூறுவது (உங்கள் மீது குற்றமாகும்.) அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும் நிகரற்ற அன்புடைய வனாகவும் இருக்கின்றான்.’(33:5)

இந்த இரு ஆயத்துக்களும் நாம் கூறியதற்கான ஆதாரமாகத் திகழ்கின்றன.

இது குறித்து குறிப்பாக நோன்பு குறித்தே ஹதீஸ் வந்துள்ளது. அதீஃ இப்னு ஹாதம்(வ) அவர்கள் தனது தலையணையின் கீழ் வெள்ளை, கறுப்பு என இரண்டு நூற்களை வைத்திருந்து அவற்றில் கறுப்பிலிருந்து வெள்ளை வெளிப்படையாகத் தெரியும் வரை உண்டு, குடித்து வந்தார். அதன் பின்னர்தான் நோன்பிருந்தார். இது குறித்து நபியவர்களிடம் அவர் கூறிய போது, அல்குர்ஆனில் கறுப்பு நூலில் இருந்து வெள்ளை நூல் தெரியும் வரை நீங்கள் உண்ணுங்கள்; பருகுங்கள் என அல்லாஹ் கூறியது இந்த நூலைக் குறிக்கும் அர்த்தத்தில் அல்ல. வெள்ளை நூல் என்றால் பகலின் வெண்மை. கறுப்பு நூல் என்றால் இரவின் இருட்டு என நபி(ச) விளக்கப்படுத்தினார்கள். இருப்பினும் குறித்த நோன்பைக் கழாச் செய்யுமாறு கூறவில்லை.

அவர் சட்டம் குறித்துத் தெரியாமல் அந்த ஆயத்தின் அர்த்தம் இதுதான் என நினைத்துச் செயல்பட்டார்.

நேரம் தெரியாமல் நடப்பதும் நோன்பை முறிக்காது என்பதற்கு புஹாரியில் இடம் பெறும் பின்வரும் ஹதீஸ் ஆதாரமாக உள்ளது.

‘மேகமூட்டமுள்ள ஒரு நாளில் நபி(ஸல்)அவர்கள் காலத்தில் நாம் நோன்பைத் திறந்த பின்னர் சூரியன் வெளிப்படாது.’
(புஹாரி: 1959)

சூரியன் மறைவதற்கு முன்னர் அது மறைந்துவிட்டதாக நினைத்து நோன்பைத் திறந்த அவர்களை அந்த நோன்பைக் கழாச் செய்யுமாறு நபி(ச) அவர்கள் ஏவவில்லை. கழாச் செய்வது கட்டாயம் என்றால் ஏவியிருப்பார்கள். அப்படி ஏவியிருந்தால் அது உம்மத்துக்கு அறிவிக்கப்பட்டு உம்மத்திற்கு வந்து சேர்ந்திருக்கும்.

‘உங்களுக்கு முன்னுள்ள நூஹுடைய சமூகம் மற்றும் ஆத், சமூத் சமூகங்களுடையவும் அவர்களுக்குப் பின்னுள்ளவர்களினதும் செய்தி உங்களிடம் வரவில்லையா? அவர்களை அல்லாஹ்வே நன்கறிவான். அவர்களது தூதர்கள் தெளிவான சான்றுகளை அவர்களிடம் கொண்டு வந்தும் அவர்கள் தமது கைகளைத் தமது வாய்களில் வைத்துக் கொண்டு, ‘நீங்கள் எதைக் கொண்டு அனுப்பப்பட்டீர்களோ அதை நிச்சயமாக நாம் நிராகரிக்கின்றோம். எதன்பால் எங்களை நீங்கள் அழைக்கின்றீர்களோ அது பற்றி நிச்சயமாக நாம் பெரும் சந்தேகத்தில் இருக்கின்றோம்’ என்றும் கூறினர்.’ (14:9)

என அல்லாஹ் அவனது திருமறையில் கூறுகின்றான். கழாச் செய்ய ஏவியதாக அறிவிப்பு வராததால் நபி(ஸல்) அவர்கள் கழாச் செய்யுமாறு ஏவவில்லை என்பது உறுதியாகின்றது. அவர் கழாச் செய்யுமாறு ஏவவில்லை என்றால் கழாச் செய்வது கட்டாயம் இல்லை என்பது அர்த்தமாகும்.

இவ்வாறே ஒரு மனிதர் தூக்கத்தி லிருந்து விழிக்கின்றார்; உண்ணுகின்றார்; பருகுகின்றார்; இரவு என்று அவர் நினைக்கின்றார். ஆனால், அவர் பஜ்ர் உதயமான பின்னர்தான் உண்டு, குடித்துள்ளார். அவர் தெரியாமல் இப்படி நடந்து கொண்டதால் அவர் மீது அந்த நோன்பு கழாச் செய்ய வேண்டியதில்லை. ஏனெனில், அவர் அறியாமையால் இப்படி நடந்துள்ளார்.

இரண்டாவது நிபந்தனை நினைவுடன் இருத்தலாகும். அதற்கு எதிர் நிலை மறதியுடன் இருப்பதாகும். முன்னைய ஆதாரத்தினுடைய வசனமே இதற்கும் ஆதாரமாக உள்ளது.

‘யாராவது மறதியாக உண்டுவிட்டால் அல்லது பருகிவிட்டால் அவர் நோன்பை முறித்துவிடாது தொடர்ந்து நோன்பிருக்கட்டும். அவரை உண்ணச் செய்ததும், குடிக்கச் செய்ததும் அல்லாஹ்வே!’ என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.(புஹாரி: 1933)

மூன்றாவது நிபந்தனை ‘நோக்கம்’ நோன்பை முறிக்கும் செயலை ஒருவர் தேர்வு செய்து செய்திருக்க வேண்டும். தேர்வு இல்லாமல் அவர் நிர்ப்பந்திக்கப்பட்டோ அல்லது நிர்ப்பந்திக்கப்படாமலோ நடந்திருந்தால் அது நோன்பைப் பாதிக்காது. நிர்ப்பந்திக்கப்பட்டவர் குப்ருடைய வார்த்தையைக் கூடக் கூறலாம் எனக் கூறும் பின்வரும் அல்குர்ஆன் வசனம் இதற்கு ஆதாரமாகும்.

‘எவர் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்ட பின் அவரின் உள்ளம் நம்பிக்கையால் அமைதி பெற்ற நிலையில், அவர் நிர்ப்பந்திக்கப்பட்டதின் காரணமாக அவனை (வாயளவில்) நிராகரிக்கிறாரோ (அவர் மீது குற்றமில்லை.) எனினும், எவர்கள் மன நிறைவுடன் நிராகரிப்பை ஏற்றுக் கொள்கின்றார்களோ அவர்கள் மீது அல்லாஹ்வின் கோபம் உண்டாகும். அவர்களுக்கு கடுமையான வேதனையும் உண்டு.’ (16:106)

குப்ருடைய விடயத்திலேயே நிர்ப்பந்தத்திற்கு மன்னிப்பு உண்டு என்றால் ஏனைய விடயங்களுக்கும் மன்னிப்பு உண்டு என்பதை எவராலும் மறுக்க முடியாது.

‘தவறுதலாகவும், மறதியாகவும், நிர்ப்பந்தத்தின் காரணமாகவும் செய்யப்படும் குற்றங்களைப் பதிவதை விட்டும் அல்லாஹ் பேனையை உயர்த்திவிட்டான்’ என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கப்படும் ஹதீஸ்களும் இதற்கான ஆதாரமாகும்.

இந்த அடிப்படையில் புழுதி பறந்து சென்று ஒருவரது மூக்கு வழியாகத் தொண்டையை அடைந்து அதன் சுவையை அவர் உணர்கின்றார். இதனால் அவரது நோன்பு பாதிக்கப்படமாட்டாது.

இவ்வாறே நோன்பை விடுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டு அந்த நிர்ப்பந்தத்திலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள ஒருவர் இவற்றைச் செய்தால் அவரது நோன்பு முறியாது. அவரின் நோன்பு சரியான நோன்பேயாகும். ஏனெனில், இதை அவர் தேர்ந்தெடுத்துச் செய்யவில்லை.

இவ்வாறே பகல் நேரத் தூக்கத்தில் ஒருவருக்கு ஸ்கலிதமானால் அவரது நோன்பும் முறியாது. ஏனெனில், தூக்கத்தில் இருப்பவருக்கு எந்த நோக்கமும் இல்லை.

இவ்வாறே ஒருவர் நோன்பாளியான தனது மனைவியைக் கட்டாயப்படுத்தி நிர்ப்பந்தித்து உறவு கொண்டால் அவளது நோன்பு செல்லும். ஏனெனில், அவர் இதைத் தேர்வு செய்யவில்லை.

இங்கு கவனிக்க வேண்டிய ஒரு அம்சம் உண்டு. தன்மீது நோன்பு கடமையான நிலையில் இருக்கும் ஒருவர் ரமழானில் பகலில் உறவு கொண்டதன் மூலம் நோன்பை முறித்தால் ஐந்து விடயங்கள் தொடர்ச்சியாகக் கவனிக்கப்பட வேண்டும்.

1. இதற்கான குற்றம் உள்ளது.
2. மீதி நோரத்தில் அவர் நோன்பிருக்க வேண்டும்.
3. அவரது நோன்பு பழுதாகிவிட்டது.
4. அவருக்குக் கழாச் செய்யும் கடமை உள்ளது.
5. இதற்கான குற்றப்பரிகாரத்தை அவர் செய்ய வேண்டும்.

இந்த உடலுறவு மூலமாக இதெல்லாம் நடக்கும் என்பதை அறிந்து செய்தாலும் அறியாமல் செய்தாலும் அவர் மீது இதெல்லாம் ஏற்பட்டுவிடும். உதாரணமாக, பகலில் நோன்பு காலத்தில் உறவு கொண்டால் நோன்பைக் கழாச் செய்ய வேண்டும் என்பது தெரியும். இருப்பினும் குற்றப் பரிகாரம் நிறைவேற்ற வேண்டும் என்பது அவருக்குத் தெரியாது என அவர் நழுவ முடியாது. அவர் இந்த சட்டத்துக்குள்ளாகியே ஆக வேண்டும்.

ஏனெனில், அவர் நோன்பைப் பழுதாக்கும் காரியத்தை அறிந்து வேண்டுமென்றுதான் செய்தார். இந்தக் காரியத்தை அவர் வேண்டுமென்றே செய்ததால் அதைச் செய்தால் என்னென்ன சட்டம் உண்டோ அதையெல்லாம் அவர் செய்தாக வேண்டும். இதற்குப் பின்வரும் ஹதீஸ் ஆதாரமாக அமைகின்றது.

‘ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிம் வந்து ‘நான் அழிந்துவிட்டேன்’ என்றார். ‘உன்னை அழித்தது எது?’ என நபி(ச) அவர்கள் கேட்ட போது, ‘ரமழானில் நோன்போடு மனைவியுடன் உறவு கொண்டுவிட்டேன்’ என்றார். அவருக்கு அதற்குரிய குற்றப்பரிகாரத்தைச் செய்யுமாறு நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.’

அந்த மனிதருக்கு இதற்குக் குற்றப்பரிகாரம் உண்டா? இல்லையா? என்பது தெரியாமல் இருந்தும் நபி(ஸல்)அவர்கள் குற்றப்பரிகாரம் செய்யுமாறு ஏவியுள்ளதால் தவறு செய்தவர் அதற்கான பரிகாரம் உண்டு என்பதை அறியாமல் செய்திருந்தாலும் பரிகாரத்தைக் காண வேண்டும். 

(தொடரும்)

தமிழாக்கம் (அபூ அப்னான்)


 



Post a Comment

0 Comments