Ticker

6/recent/ticker-posts

Ad Code



5-ரமளான் மாதத்தின் சிறப்புகளும் சட்டங்களும்!


10. நோன்பு நேரத்தில் தவறிலிருந்து விலகி இருத்தல்

1) யார் கெட்ட பேச்சுக்களையும், செயல்களையும் விட்டுவிடவில்லையோ அவர் உணவை விடுவதிலும், குடிப்பை விடுவதிலும் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையும் இல்லை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி

2) எத்தனையோ நோன்பாளிகள் அவர்கள் பசித்திருந்ததைத் தவிர வேறு எதையும் அவர்களின் நோன்பினால் பெற்றுக்கொள்வதில்லை, இன்னும் இரவில் நின்று வணங்கும் எத்தனையோ பேர் இரவில் கண்விழித்திருப்பதைத் தவிர வேறு எதையும் பெற்றிருப்பதில்லை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: நஸயீ, இப்னுமாஜா

3) உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருந்தால் தன் மனைவியோடு உடல் உறவு கொள்ளக்கூடாது. இன்னும் கெட்டவார்த்தைகள் பேசவும் கூடாது. யாராவது அவரை ஏசினால் அல்லது அடித்தால் அவர் "நோன்பாளி" என்று கூறிக்கொள்ளட்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்

விளக்கம்: நோன்பு நோற்பதென்பது வெறும் பசி, தாகத்தோடு இருப்பது மட்டுமல்ல, பசி தாகத்தை கட்டுப்படுத்துவதைப் போல மற்ற எல்லாத் தவறுகளையும் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். யார் நோன்புநோற்றுக் கொண்டு தவறான பேச்சுக்கள் இன்னும் தவறான செயல்களைச் செய்கின்றாரோ அவர் பசித்திருந்ததையும் தாகித்திருந்ததையும் தவிர வேறு எதையும் பெற்றுக் கொள்ளமாட்டார். ஆகவே நோன்பு மாதத்தில் எல்லாத் தவறுகளையும் விட்டுவிடுங்கள். ஆனால் இன்று நோன்பு காலத்தில்தான் நோன்பு நோற்றவர்கள் இரவெல்லாம் வீணாக விழித்திருந்து சுப்ஹு தொழுகையின்றி தூங்கிவிடுகிறார்கள். இன்னும் சிலரோ பகலையெல்லாம் தூக்கத்திலேயே கழித்து, தொழுகைகளை விட்டு விடுகின்றார்கள். அல்லாஹ் நம்மீது நோன்பைக் கடமை யாக்கியது நாம் பாவங்களைச் செய்வதற்கும் ஃபர்லான தொழுகைகளை விடுவதற்குமா? நிச்சயமாக இல்லை! நாம் எல்லாப் பாவங்களையும் விட்டு தொழுகைகள் மற்றும் நல்அமல்களைச் செய்வதற்குத்தான் அல்லாஹ் அம்மாதத்தை ஏற்படுத்தியிருக்கின்றான். ஆகவே தவறுகளை முற்றாக விட்டு தொழுகைகளை உரிய நேரத்தில் தொழுது எல்லா நல்அமல்களையும் செய்யுங்கள், அல்லாஹ் நம் அனைவருக்கும் எல்லா தவறுகளையும் முற்றாக விடுவதற்கு வாய்ப்பளிப்பானாக!

11. நோன்பாளி மறதியாக சாப்பிட்டால் குடித்தால்

1) (யாராவது) மறந்துபோய் சாப்பிட்டால் அல்லது குடித்தால் அவர் அவருடைய நோன்பை பரிபூரணப்படுத்தட்டும், நிச்சயமாக அல்லாஹ்தான் அவரை சாப்பிடவும், குடிக்கவும் வைத்தான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி

விளக்கம்: யாராவது நோன்பு நேரத்தில் மறதியாக சாப்பிட்டால் அல்லது குடித்தால் குற்றமில்லை. ஞாபகம் வந்ததும் சாப்பிடுவதை குடிப்பதை நிறுத்திக் கொள்ளவேண்டும். அவருடைய நோன்பு பரிபூரணமானதே. யார் வேண்டுமென்றே சாப்பிடுகின்றாரோ அல்லது குடிக்கின்றாரோ அவரின் நோன்பு முறிந்துவிடும், இன்னும் அது பெரும் குற்றமாகும். அந்த நோன்பைப் பிறகு நோற்க வேண்டும்.

12. நோன்பாளி குளிப்பதில் தவறில்லை

1) நபி(ஸல்) அவர்கள் (உடலுறவின் காரணமாக) முழுக்கான நிலையில் பஜ்ர் நேரத்தில் விழித்தெழுந்து பின்பு குளித்துக் கொண்டு நோன்பு நோற்பார்கள் என ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்

2) நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றுக்கொண்டிருக்கும் போது வெப்பம் அல்லது தாகத்தின் காரணமாக தன் தலைமீது தண்ணீரை ஊற்றியதாக சில நபித்தோழர்கள் மூலமாக அபூபக்ர் இப்னு அப்துர்ரஹ்மான்(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஆதாரம்: அஹ்மத், முஅத்தா, அபூதாவூத்

3) அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது ஈரத்துணியை தன்மீது போடுவார்கள். ஆதாரம்: புகாரி

விளக்கம்: தேவைப்படும் போது நோன்பாளி குளித்துக் கொள்வதில்தவறில்லை. புகாரி(ரஹ்) அவர்கள் தன் புகாரி கிரந்தத்திலே நோன்பாளி குளிக்கும் பாடம் என தலைப்பிட்டு மேலே குறிப்பிட்ட ஹதீஸ்களைக் கூறுகின்றார்கள். 

(தொடரும்)

கே.எல்.எம்.இப்ராஹீம் (மதனீ)


 



Post a Comment

0 Comments