
நீதிமன்றக் கட்டமைப்பில் தீர்க்கப்பட வேண்டியுள்ள வழக்குகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், சட்டத்தை நிலைநாட்டும் செற்பாட்டில் காணப்படும் கணிசமான காலதாமதம் தொடர்பில் நீதி மற்றும் தேசிய ஒருமைபாட்டு அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.
இதற்கமைய, உயர்நீதிமன்றத்தினால் தீர்க்கப்பட வேண்டிய 5,785 வழக்குகள் நிலுவையில் இருப்பதுடன், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் 4,572 வழக்குகளும், குற்றவியல் வழக்குகள் விசாரிக்கப்படும் மேல் நீதிமன்றங்களில் 6,286 வழக்குகளும், வணிக மேல் நீதிமன்றங்களில் 6,146 வழக்குகளும், மூன்று நீதிபதிகளைக் கொண்ட நீதிமன்றங்களில் 3 வழக்குகளும், மேல் நீதிமன்றங்களில் 27,324 வழக்குகளும், மாவட்ட நீதிமன்றங்களில் 262,665 வழக்குகளும், சிறுவர் நீதவான் நீதிமன்றங்களில் 1260 வழக்குகளுமாக ஒட்டுமொத்தமாக தீர்க்கப்பட வேண்டிய 1,131,818 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக அதிகாரிகள் குழுவில் சுட்டிக்காட்டினர்.
வழக்கு விசாரணைகளை நெறிப்படுத்துவதற்கான திட்டங்கள் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதாகவும், இது தொடர்பில் நீதிபதிகளுக்கு பயிற்சியளிக்கும் செயற்றிட்டமொன்றும் நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதாக இலங்கை நீதிபதிகள் அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.
பத்தாவது பாராளுமன்றத்தின் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுசார் ஆலோசனைக் குழு முதல் தடவையாக அதன் தலைவர் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் (சட்டத்தரணி) ஹர்ஷன நாணயக்கார அவர்களின் தலைமையில் நேற்றையதினம் (27) பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்தத் தகவல்கள் முன்வைக்கப்பட்டன.
சட்டமா அதிபர் திணைக்களத்தின் பணிகள் தொடர்பில் பாரிய காலதாமதம் இருப்பதாக உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். நாடு முழுவதிலுமுள்ள பொலிஸ் பிரிவுகளிலிருந்து கிடைக்கும் குற்றவியல் வழக்குகளை விசாரணை செய்வதற்கு சட்டமா அதிபர் திணைக்களத்தின் குற்றவியல் பிரிவில் 70 அரச சட்டத்தரணிகளே இருப்பதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
மேலும், ஒதுக்கப்பட்ட வழக்குகளைக் கையாள ஒரு அரசாங்க சட்டத்தரணி பல வருட அனுபவமும் நிபுணத்துவமும் இருக்க வேண்டும் என்றும், சேவை மூப்பு ஒரு முக்கிய காரணியாகும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
சட்டமா அதிபர் திணைக்களத்தின் வகிபாகம் மற்றும் காலதாமதம் தொடர்பில் சில காலங்களாகப் பேசப்பட்டு வருவதாகவும், திணைக்களத்தில் உள்ள சட்ட அதிகாரிகளின் எண்ணிக்கை வழக்குகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது போதுமானதாக இல்லையென நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் (சட்டத்தரணி) ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
மேலும், ஏறத்தாழ 30 வருடங்களுக்கும் அதிகமான அனுபவத்தைக் கொண்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல்கள் 6 பேர் இந்த வருடத்திற்குள் வேலையிலிருந்து விலகுவதாகவும் குறிப்பிட்ட அவர், சட்டமா அதிபர் திணைக்களத்தின் பணிகளை எவ்வித இடையூறும் இன்றி முன்னெடுப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுக்கும் என்றும் வலியுறுத்தினார்.
இக்கூட்டத்தில் தேசிய ஒருமைப்பாட்டு கௌரவ பிரதியமைச்சர் மொஹமட் முனீர் முலாபர், குழுவின் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
adaderanatamil

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments