வனவாசிகளின் இயல்பும், பழக்கவழக்கங்களும் இப்போதுவரை மாறாமல் இருப்பதற்கு முக்கிய காரணம், வெளியாட்கள் யாரையும் அவர்கள் தங்களின் எல்லைக்குள் விடாமையே!
ஒரு காலத்தில் பெரும் கஷ்டங்களுக்கு மத்தியில் அடிமையாகவிருந்து தப்பிவந்து வனத்துக்குள் நுழைந்த மூத்தவரை, இந்தப் பிரதேச வனவாசிகள் எப்படித் தங்களில் ஒருவராக ஏற்றுக் கொண்டார்கள் என்பதுவும், பிரதேசத்தின் பெயரை “புரோகோனிஷ்” என்று வைத்துக்கொள்ள ஏன் சம்மதித்தார்கள் என்பதுவும் இன்றுவரை புரியாத புதிராகவே உள்ளது!
உலகில் வனத்துக்கு வெளியே நிறைய வித்தியாசமான மனிதக்கூட்டங்கள் வாழ்ந்து வருவது மூத்தவருக்கு மட்டும் தெரிந்த இரகசியம்!
வெளியே வாழ்ந்து வரும் கோடானுகோடி மக்கள் பற்றி வனவாசிகளுக்குத் தெரிந்தபோதிலும், அவர்கள் எப்படிப்பட்டவர்கள்? நல்லவர்களா, கெட்டவர்களா என்பது அவர்களுக்குப் புரிய வாய்ப்பில்லை!
உலக வாழ் மக்களில் சிலர் நல்லவர்கள்! அவர்கள் நல்லதையே நினைப்பார்கள்! பிறருக்கும் நல்லதையே செய்வார்கள்! இன்னும் சிலர் கடவுள் வணங்கிகள்! கடவுளை வணங்குவதையே அவர்கள் பெரிதாக நினைப்பார்கள்! பிறருக்குத் தீமை செய்ய மாட்டார்கள்!
உலகில் அதிகமானோர் நாகரிகமாக உடுத்துவார்கள். பெரிய மாளிகைகளைக் கட்டிக் கொள்வார்கள்! அளவுக்கதிகமாக உண்பார்கள்! அந்தி சாய்ந்தால் மூக்கு முட்ட மதுபானம் குடித்து விட்டுக் கும்மாளமடிப்பார்கள்!
உலகத்தில் உள்ள எல்லாக் கெட்ட பழக்கங்களையும் இவர்கள் துணிந்து செய்வார்கள்! இவர்கள்தான் உலகிலுள்ள அநியாயக்கார மனிதக் கும்பல்! மற்றவர்களுக்குத் தீமை செய்வதையும், மற்றவர்களின் உழைப்பை அபகரிப்பதிலுமே இவர்கள் கண்ணாய் இருப்பார்கள்! நல்லவர்களைக் கடத்தி, அடிமை வியாபாரம் செய்வது மட்டுமல்லாது, தமக்கு ஒத்தாசைக்காக நல்லவர்களையே அடிமைகளாக்கி வைத்துக் கொள்ளவும் செய்வார்கள்!
அடிமைகள் என்போர் விலங்குகள் மாட்டப்பட்டு, அடித்து உதைத்து துன்புறுத்தப்படுவார்கள்! கொடுமைகள் இழைக்கப் பட்டு, பசி – தாகத்துடன் துடிதுடிக்க வைக்கப் படுவார்கள்! வயோதிபர்களும், நோயாளிகளும் உழைக்க வலுவற்றோர் எனக்கருதப்பட்டு கொலை செய்யப்படுவார்கள்! சுகயீனமுற்றோர்களுக்கு சிகிட்சை கூடச்செய்யாது கடலில் தள்ளி விடுவார்கள்!
அடிமைகளை இனங்கண்டுகொள்வதற்காக மிருகங்களுக்குக் குறியீடு போடுவதுபோல், பழுக்கக் காய்ச்சிய இரும்பினால் குறியீடுகள் போடப்படுவார்கள்! அநியாயக்கார மனிதக் கும்பல்களது வீடுகளில் வளரும் மிருகங்களை விடவும் மோசமான முறையில் அடிமைகள் வழி நடாத்தப் படுவார்கள்!
அநியாயக்கார மனிதக் கும்பலால் கருவருக்கப் பட்டவர்களுள் மூத்தவரும் ஒருவர்! இவர்களைத்தான் மூத்தவருக்குப் பிடிக்காது! இவர்களில்லாத உலகு ஒன்றைத்தான் அவர் எப்போதும் வேண்டி நின்றார்! இவர்களை இல்லாமலாக்கிவிட்டால் அல்லது நல்லவர்களாக்கிவிட்டால், உலகமும் நல்ல உலகாகிவிடும் என்று அவர் நம்பினார்! அதற்காக அவர் தன்னிடமிருந்த வைத்திய நூலை அடிப்படையாகக் கொண்டு நீண்ட காலத் திட்டம் ஒன்றைத் தயார்படுத்தி வைத்திருந்தார்! இளவயதில் அவருக்குக் கற்றுத்தந்த வைத்தியப் பேராசானின் அறிவுரைகள் இதற்குப் பெரிதும் உதவின!
அவரிடமிருந்த பெற்ற - திருப்பிக் கொடுக்காமலே தன்னோடு எடுத்துவந்த - அந்த நூலை மூத்தவர், தான் கானகத்துக்குள் வந்ததுமுதல் ஓய்வு நேரங்களில் மனதில் பதியக் கூடியதாகப் படித்துக் கொண்டிருந்தார்.
அதில் குறிப்பிடப்பட்டிருந்த சிலவற்றைப் பரிசோதனை செய்து, வனவாசிகள் நோய்வாய்ப்படும் போதெல்லாம் கசாயங்களாகக் கொடுத்து அவர்களைச் சுகமாக்கினார்!
கொடிய நோய்கள் பரவினால் கூட அதனை எதிர்கொள்ளும் திறன் கொண்ட வனவாசிகளுக்கு, வெளியாட்கள் மூலம் பரவும் ஜலதோஷத்தை எதிர்க்கும் திறன் இல்லாமை வருந்துதற்குரியது!
ஜலதோஷம் ஏற்பட்டால் வனவாசிகள் அதற்குப்பலியாகி விடுகின்றனர் என்பது வருத்தமான உண்மையாகும்!
அவரிலிருந்து மூன்று அல்லது நான்கு தலைமுறைகள் கடந்ததும் திட்டம் நிறைவு பெறுவதற்கான ஆக்கபூர்வமான வேலையொன்றை நெறிப்படுத்தி விட்டு, மூத்தவர் மறைந்து போனார்!
(தொடரும்)
செம்மைத்துளியான்
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments