Ticker

6/recent/ticker-posts

“உடுநுவரை அபிமானி” மௌலவி - கதீப் முஹம்மது ஹனீபா அவர்களுக்காகப் பிரார்த்திப்போம்!


இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றை ஆராய்வதிலும் அதன் பல்வேறு கூறுகளை அவதானிப்பதிலும் அண்மைக்காலமாக முஸ்லிம்களிடையே ஆர்வம் வலுவடைந்து வந்துகொண்டிருக்கும் நிலையில், வரலாறு இல்லாத எந்தவொரு சமூகமும் உலகில் தலை நிமிர்ந்துவாழவோ  நிலைத்து நிற்கவோ முடியாது என்பதனை மனதிற்கொண்டு சுமார் இரண்டு தசாப்த காலமாக  வரலாற்று நூல்கலை எழுதி வருபவரான “உடுநுவரை அபிமானி” மௌலவி - கதீப் முஹம்மது ஹனீபா அவர்கள் நோய்வாய்ப்பட்டு கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், அவருக்காக விசேட துஆப் பிரார்த்தனை நிகழ்வொன்று இன்று மஃரிப் தொழுகையுடன்  உடுநுவர- அம்பரப்பொல ஜூம்ஆப் பள்ளிவாயிலில் நடைபெற இருப்பதாகவும் அறிகின்றோம்!

முகவரியில்லாத சமூகம் என்ற அவப்பெயரிலிருந்து முஸ்லிம் சமுதாயத்தைப் பாதுகாப்பதற்கு  முஸ்லிம்களின்  இருப்புபற்றி விவரங்கள் திரட்டப்பட  வேண்டும் என்ற கோரிக்கை 1960களில் முன்வைக்கப்பட்டாலும், சமீப காலமாக பிரதேச ரீதியாகவும், தேசிய ரீதியாகவும்  முன்னெடுக்கப்பட்டு வருகின்றது!

காலத்ததுக்குக் காலம் முஸ்லிம்களின் பூர்வீகம் பற்றி எழுப்பப்பட்ட கேள்விகளின் மனத்தாக்கமும், முஸ்லிம்களின்  வரலாற்றுத் தொன்மையைக் கொச்சைப்படுத்த முற்பட்ட சம்பவங்களுமே இவ்வாறான  வரலாற்று நூல்களை வெளிக்கொணரும் ஆர்வத்தை இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு அளித்துள்ளதெனலாம்.


முஸ்லிம்களது பண்பாட்டம்சங்கள், வழக்காறுகள், வரலாற்றுக் தொடர்புகள் என்பன  குறித்து அணுகப்பட வேண்டிய விடயங்கள் முஸ்லிம்களின் வரலாற்றை அறிவதற்கும்  கட்டியெழுப்புவதற்கு உதவக்கூடியன. உண்மையான வரலாற்றுச் சான்றுகள்  பகுத்தறிவுக்குப் பொருத்தமான முறையில் பதிவிடப்பட வேண்டியது காலத்தின் தேவை என்பதை உணர்ந்து செயல்பட்டுவருபவர் மௌலவி ஹனீபா அவர்களாவார்.

அந்த வகையில் இலங்கையின் மத்திய பிரதேச முஸ்லிம்களது வருகை பற்றியும், அவர்களது வழக்காறுகள் பற்றியும், ஆங்காங்கே தேடியலைந்து தகவல்களைத்திரட்டியெடுத்து, அவற்றை நூல் வடிவில் வெளியிடுவதில் மௌலவி – கதீப் இஸட். ஏ. முஹம்மது ஹனீபா அவர்களின் பங்களிப்பு மகத்தானது.

“உடுநுவரை அபிமானி” என்ற அரச விருது பெற்றுள்ள மௌலவி –  முஹம்மது ஹனீபா அவர்கள், தான் அரச சேவையிலிருந்து ஓய்வுபெறும் வரை ஒரு நல்லாசிரியராகப் பணிபுரிந்துள்ளமையும், அண்மைக்காலம் வரை பிரதேசத்தின் குவாஸி நீதவானாக சேவை புரிந்து வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது!

ஆசிரியத் தொழிலிலிருந்து ஓய்வு பெற்றபோதிலும் சமூகத் தொண்டாற்றுவதில் மிக ஆர்வம் கொண்ட இவர், போர்த்துக்கேயர் காலத்திற்கு முன்பிருந்தே  சுதந்திதரமான முஸ்லிம்களின் குடியிருப்புக்கள் மத்திய மலைநாட்டில்  இருந்துவந்துள்ளன  என்பதனை நிரூபிப்பதற்காக கடினமான அகச்செய்திகள் பலவற்றை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் நோக்கில், அவற்றை சமூகத்தின் உள்மட்டத்திலிருந்து திரட்டியெடுத்துள்ளார்.

2005 முதல் இதுவரை அவரால், “உடுநுவரை முஸ்லிம்கள் வாழ்வில் ஸூபித்  தரீக்காக்கள்”, “மத்திய பிரதேச இஸ்லாமியக் குடியிருப்புக்கள்”, “மத்திய பிரதேச முஸ்லிம்களின் பூர்வீகம்”, “அறிஞர் மௌலவி ஓ. எல். எம். இப்றாஹீம் ஆலிம் ஸாஹிப் அவர்களது வாழ்வும் பணியும்”, “உடுநுவரை முஸ்லிம்களின் பூர்வீகமும் பெரிய பள்ளிவாசல் வரலாறும்”,  “இஸ்லாமிய வரலாற்றில் அஹ்லுல் பைத்துக்கள்”, “இஸ்லாமிய சட்டவியலில் மாற்றுக்கருத்துக்களின் மதிப்பு” மற்றும் சிங்கள மொழியிலான “ஸ்ரீலங்கேய முஸ்லிம் வங்ஸ கதாவ” போன்ற நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.

சுயேச்சையான வரலாற்றுத் தொகுப்புப்பணியில்  தன்னை அர்ப்பணிப்புடன்  ஈடுபடுத்தி வந்த  மௌலவி முஹம்மது ஹனீபா அவர்கள், கடந்த மூன்று தசாம்தங்களாக  உடுநுவரை மக்களோடு இரண்டரக்கலந்து சமயப்பணியுடன் பொதுப்பணிகளிலும் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருபவராவார்.

அவரது “இலங்கை - மத்திய பிரதேச முஸ்லிம்களது வருகை பற்றிய வரலாற்றுக் கட்டுரைத் தொடர்” கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக “வேட்டை” பதிவிட்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது!

நோய்வாய்ப்பட்டிருக்கும் மௌலவி முஹம்மது ஹனீபா அவர்கள்       நோயிலிருந்து மீண்டுவந்து சமுகத்திற்கு மென்மேலும் பணி செய்ய வேண்டுமென்று வல்ல அல்லாஹ்விடம் “வேட்டை” பிரார்த்திக்கின்றது!

வேட்டை


 



Post a Comment

0 Comments