Ticker

6/recent/ticker-posts

இஸ்லாம் ஒரு பூரணப்படுத்தப்பட்ட மார்க்கம் !



اَ لْيَوْمَ اَكْمَلْتُ لَـكُمْ دِيْنَكُمْ وَاَ تْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِىْ وَرَضِيْتُ لَـكُمُ الْاِسْلَامَ دِيْن      
“இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தைப் பூரணமாக்கிவிட்டேன். மேலும் நான் உங்கள் மீது என் அருட் கொடையையும் பூர்த்தியாக்கி விட்டேன்” (குர்ஆன் 5:3)

இந்த அல்குர்ஆன் வசனத்தை யாரும் மறுக்கவும் இல்லை. பல குர்ஆன் வசனங்களுக்கு வித்தியாசமான வியாக்கியானங்கள் அர்த்தங்கள் கொடுக்கப்பட்ட போதும், இந்தக் குர்ஆன் வசனத்திற்கு இதுவரையில் எவரும் வித்தியாசமான அர்த்தங்கள் வியாக்கியானங்கள், கொடுக்கவில்லை. ஆக இஸ்லாமிய மார்க்கம் பூரணப் படுத்தப்பட்டது என்பதில் முஸ்லிம்களுக்குள் எந்தக் கருத்து வேற்றுமையும் கிடையாது.

இஸ்லாம் மற்றும் அமல்கள் விடயத்தில் சம்பந்தப்பட்ட எந்தவொரு விடயத்திலும் முஸ்லிம்கள் கருத்துவேறு பட்டு தர்க்கம் செய்யவோ, பிரியவோ தேவையில்லாத வகையில், அல்லாஹ் தன் குர்ஆன் மூலமாகத் தன்னுடைய சட்டங்களைத் தெளிவுபடுத்தி விட்டான். அச்சட்டங்களில் மனிதனுடைய சட்டம் கடுகளவும் நுழைவதற்கு இடம் கிடையாது. அந்த வகையில் மனிதன் அமல்களையும் அவ்ராதுகளையும்,   திக்கிர்களையும் கண்டு பிடித்து இறைவனுக்கு சொல்வாதாயின் அது இறைவேதமாக முடியாது.

இறைவன் என்பவன் மனிதனிலிருந்து தேவையற்றவன்.

இஸ்லாம் என்பது அல்லாஹ்வின் கட்டளைப்படி நபியவர்களால் நமக்கு கட்டித்தரப்பட்ட வழிமுறைகளாகும்.

இவற்றில் மனிதன் உலகில் வாழும்காலத்தில் வாழ வேண்டிய விதம் அவன் மறுமைக்காக செய்யவேண்டிய அமல்கள் அத‌ற்கான நற்கூலிகள் அடங்களாக ஒரு மனிதன் பிறந்தது முதல் அனைத்தும் அல்லாஹ்வின் கட்டளைப்படி நபியவர்களால்  காட்டித் தரப்பட்டுள்ளது.

இவற்றை விடுத்து நாம் சில நம் தலைவர்களால் அல்லது நாம் மதிக்கக் கூடியவர்களால் அறிமுகப்படுத்ப்பட்ட அமல்களை நம் சிந்தனைப்படி பின்பற்றுவோமாக இருந்தால் ,  இஸ்லாம் பூரணப்படுத்பட்டது என்ற குர்ஆன் வசனத்தை நிராகரிப்பது போன்றதாகும். இவை குர்ஆனை நிராகரித்த இறை நிராகரிப்பில் நம்மை கொண்டு சேர்க்கும் என்பதை நாம் சிந்திக்க தவறுகிறோம்.

நாம் மதிக்கக்ககூடிய தலைவர்கள் அல்லது நாம் பின்பற்றும் பிரிவின் ஸ்தாபகர்கள். என்ற வகையில் ஏதாவது ஒரு புதிய வகை அமலைகண்டுபிடித்து அதை நியாயப்படுத்தி இஸ்லாத்தின் சட்டங்களை அதற்கேற்ப வலைத்து இறைவனுக்கே பாடம் நடாத்தும் அளவில் நம் நிலை இன்று காணப்படுகின்றது.

அல்லாஹ் இஸ்லாம் மார்கத்தை பூரணப்படுத்தி விட்டான் எனக்கூறுகிறான். அவ்வாறான இந்த மார்கம் அல்லாஹ்வால் பூரணப்படுத்தப்பட்ட, பி்ன்னர் திக்ர், அமல், மற்றும் அமல் விடயங்களில் மனிதவர்கம் தலையிட முடியாது
என்பதையே நாம் இஸ்லாம் மார்க்கத்தை பூரணப்படுத்தி விட்டோம் என்பதின் அர்த்தமாகும். 

அதையே அல்லாஹ் எமக்கு இந்த ஆயத்தின் முலம்  எமக்கு அருள்கிறான்.

இஸ்லாத்தில் அல்லாஹ், தன் தூதர் நபி(ஸல்) அவர்களுக்கே, சுயமாக சட்டம் இயற்றவோ, சட்டத்தை மாற்றவோ அனுமதியளிக்கவில்லை. இதைத் தெளிவாகக் கண்டபின், வேறு யார்தான் இதைச் செய்ய முடியும்.

நபி(ஸல்) அவர்கள் எச்சரிக்கிறார்கள்:

"நான் உங்களைப் போன்ற ஒரு மனிதன்தான். உங்களுக்காக, இறைவன் தேர்ந்தெடுத்துத் தந்த மார்க்கத்திலிருந்து, ஏதாவதொன்றை நான் ஏவினால், அதை எடுத்துக்கொள்ளுங்கள். என் சொந்த அபிப்பிராயத்திலிருந்து எதையாவது, நான் சொன்னால் நான் மனிதன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்” (அறிவிப்பவர்: ராஃபிஉ பின் சுதீஜ், : முஸ்லிம்)

இமாம்கள். அல்லாஹ்வின் சொல்லுக்கும், தூதர் நபி(ஸல்) அவர்களின் சொல்லுக்கும் மாற்றமாக எங்களுடைய சொல் காணப் பட்டால், அவற்றைத் தூக்கி எறிந்துவிட்டு, அல்லாஹ்வின் சொல்லையும், அவனது தூதரின் சொல்லையும் பற்றிப் பிடித்துக் கொள் ளுங்கள் என்று மிகத் தெளிவாக பல்வேறு இடங்களில் கூறி, தங்களைப் பாதுகாத்துக் கொண்டார்கள். 

பூரணப்படுத்தப்பட்ட இஸ்லாம், கலப்பற்றதொரு மார்க்கம். அது அல்லாஹ்வுக்கே சொந்தமானது. அதில் யாருக்கும் உரிமை கிடையாது. அந்த மார்க்கத்திற்கு அல்லாஹ்தான் இஸ்லாம் என்று பெயர் சூட்டினான். நம் அனைவரையும் முஸ்லிம்களாகவே வாழ்ந்து முஸ்லிம்களாகவே மரணிக்கச் சொல்லுகிறான்.

எனவே அல்லாஹ் “இஸ்லாம்’ என்று அறிவிப்பது மட்டுமே இஸ்லாம். அதுவல்லாத எதுவும் இஸ்லாமாகிவிடாது. 

இஸ்லாம் என்ற பெயரில் இஸ்லாத்தில் இல்லாதவற்றை அல்லாஹ் அறிவித்து நபியவர்களால் காட்டித்தரப்படாததை யார் செய்தா லும் அது ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என்பதை நாம் தெளிவாக அறியமுடிகின்றது.

“இன்னும் இஸ்லாம் அல்லாத வேறு மார்க்கத்தை எவரேனும் விரும்பினால், அது ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக்கொள்ளப் படமாட்டாது; மேலும் அவர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில்தான் இருப்பார்” (குர்ஆன் 3:85) என்று அல்லாஹ் கூறுகிறான். 

இங்கு இஸ்லாம் அல்லாத வேறு மார்கம் எனக்குறிப்படப்படுவதானது அல்லாஹ்வால் அருளப்படாத மனிதனின் கண்டு பிடிப்புக்களாகும் என்பதையும் விளங்க முடிகின்றது.

அல்லாஹ்வின் மார்க்கம் இதுதான் என்று மிகத் தெளிவாக அவனுடைய சொல்லிலிருந்தும், தூதர் (ஸல்) அவர்களின் சொல் லிலிருந்தும் ஆதாரங்கள் காட்டிய பின்பும், அதிகமானோர் இன்று இமாம்களின் சொல் மற்றும் தம் தலைவர்களின்  சொற்களில் தங்கிக் கிடக்கின்றனர். 

அப்படியானால் அல்லாஹ்வின் மார்க்கத்தில் சட்டங்களைக் கொண்டு வரவும், சட்டத்தை மாற்றவும் இமாம்களுக்கு உரிமை இருப்பதாக இவர்கள் கருதுகிறார்களா ?.

“நபி(ஸல்) அவர்கள் மூலமாக நமக்குக் கொடுக்கப்பட்ட இஸ்லாத்திலில்லாத ஒன்றை எவன் உண்டாக்கி; இதுவும் இஸ்லாத்தில் உள்ளதுதான் (பித்அத்ஆ) என்று கூறுகிறானோ, அது எடுத்தெறியப் படவேண்டிய ஒன்றாகும்”. அறிவிப்பாளர்: ஆயிஷா(ரழி), இந்த ஹதீஸ் புகாரி, முஸ்லிம் அகிய இரு கிரந்தங்களிலும் பதியப்பட்டுள்ளது.

பித்அத்துகள் (நவீன கண்டு பிடிப்புக்கள்) அனைத்தும் வழிகேடுகளாகும்” அறிவிப்பாளர்: ஜாபிர்(ரழி) இப்னு மஸ்வூத்(ரழி), நூல்கள்: புகாரி, முஸ்லிம், நஸயீ.

“அல்லாஹ்வின் மிகப்பெரும் கோபத்திற்கு உள்ளான மூவரில் ஒருவர், இஸ்லாத்தில் மூடப் பழக்க வழக்கங்களை உண்டு பண்ணுகிறவராவர்”. அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ்(ரழி), நூல்: புகாரி.

இந்தவகையில் சொற்பகாலம் உலகில் வாழும் மனிதனின் வாழ்க்கையில் அமல்களுக்காக ஒரு சிரிது காலத்தைதான் மனிதனால் ஒதுக்கிக் கொள்ள முடிந்த மனித வாழ்க்கையில், நம் கை எட்டிய கால  தூரத்தில் ஏற்படுத்ப்பட்ட மெளலிது, மனாகிபு, ராத்திபு, புர்தா, வித்ரியா, தஸவ்வுஃபு, மன்திக், மஆனி, ஃபலக் ஆகியவற்றை படிப்பதில் தானே காலம் வீணடிக் கப்படுகின்றது ஏன் நாம் இதை சிந்திக்கின்றோமில்லை.

அல்லாஹ் நபிகளார் மூலம் காட்டித்தந்த அமல்களுக்கு ஒவ்வென்றிற்கும் இத்தனை நன்மைகள் என அறிவித்துள்ளான்.

எனவே அல்லாஹ்வால் நன்மை தருவதாக சொல்லப்படாத, நன்மை தருவதாக அல்லாஹாவால் உத்தரவாதம் தரப்படாத, மனிதனால் நவீனமாக கண்டுபிடிக்கப்பட்ட அமல்களை எமது குறுகியகால இந்த வாழ்கையில் முன்னேடுத்துச் செல்வதா ?

உலமாக்கள் இந்த உண்மையை உணர வேண்டும். அதை மக்களுக்குச் சொல்ல முன்வர வேண்டும். காரணம் உலமாக்கள் நபிமார்களின் வாரிசுகள், நபிமார்கள்  உண்மையைச் சொல்லப் பயந்ததில்லை. தலை போய்விடும், பசி, பட்டினி வந்துவிடும், கெளரவம் பறிபோய் விடும் என்றெல்லாம் எண்ணி, உண்மையைச் சொல்லப் பயந்ததில்லை,  அதற்கு நபிமார்களின் வாரிசுகளாகிய உலமாக்கள், அவர்கள் விட்டுச் சென்ற பணியைத் தொடரவேண்டும். இன்றைய கால மக்கள் உண்மையை உணரவே ஆசைப்படுகிறார்கள். இது அறிவு வளர்ச்சியடைந்த காலம் உண்மையை உரைக்கிற போது மக்கள் சிந்திப்பார்கள்.

“அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு, எவர் தீர்ப்பு அளிக்கவில்லையோ, அவர்கள் காஃபிர்கள் அநியாயக் காரர்கள், பாவிகள்”. (குர்ஆன் 5:44,45:47)

ஒரு சமயம் உமர் (ரழி) அவர்கள், நபி(ஸல்) அவர்களிடத்தில் தெளராத்தின் பிரதியொன்றைக் கொண்டுவந்து படிக்க ஆரம்பித்தார்கள். நபி(ஸல்) அவர்களின் முகம் கோபக்கனல் வீசிச் சிவந்தது.

“பிரகாசமுள்ள தெள்ளத் தெளிவான ­மார்கத்தை  நான் உங்களிடம் கொண்டு வந்திருக்கிறேன். எந்த இறைவனிடம், இந்த முஹம்மதின் உயிர் இருக்கிறதோ, அந்த இறைவன் மீது ஆணையாக, இப்போது மூஸா(அலை) உங்களிடம் வந்து நீங்கள் அவரைப் பின்பற்றினால், நீங்கள் வழி தவறியவராவீர்கள்; அந்த மூஸா(அலை) இப்போது இருந்தாலும் என்னைப் பின்பற்றுவதை விட்டு, அவருக்கு வேறு வழியில்லை”என்று நபி(ஸல்) அவர்கள், உமர்(ரழி) அவர்களைக் கடிந்து கூறினார் கள். அறிவிப்பாளர்: ஜாபிர்(ரழி), நூல்: தாரமீ.

அல்லாஹ்வின் இறை நூலில் ஒன்றான, அலாஹ்வினால் அருளப்பட்ட தெளராத்தைப் படிப்பதற்கே உமர் (ரழி) அவர்களை நபி(ஸல்) அவர்கள் கடிந்துரைத்திருக்கிறார்கள் என்றால், மனிதர்களாக, மதிப்புமிக்கவர்களாக, செய்குமார்களாக நாம் ஏற்றுள்ள,   இன்னும் சமகாலத்தில் அல்லது நமக்கு சில தசாப்தங்களுக்கு முன்னர் நாம் தலைவர்களாக, மதித்தவர்களாக இருந்தாலும் அவர்களால் கண்டு பிடக்கப்பட்டவை இஸ்லாமிய மார்க்கம் ஆகலாமா ? என்பதை முஸ்லிம் சகோதர, சகோதரிகளே சற்று சிந்தித்துப் பாருங்கள்.

“ரசூல்(ஸல்) அவர்கள், எங்களுக்கு தொழுகை நடத்திவிட்டு, எங்கள் பக்கம் முகத்தைத் திருப்பினார்கள். கண்களில் கண்ணீர் சிந்த, உள்ளங்கள் திடுக்கிடும் அளவுக்கு உருக்கமாகவும், நளினமாகவும் உபதேசித்தார்கள். இது கடைசிப் பிரசங்கமோ என எங்களிலொருவர் கேற்கும்  அளவுக்கு பின்வருமாறு கூறினார்கள்.
"அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள். மேலும் அவனின் பேச்சுக்கு செவிமடுங்கள்.அவனின் சொல்லுக்கு வழிப்பட்டு நடவுங்கள். ஒரு கருப்புநிற அடிமை உங்களுக்கு அதிகாரியாக இருந்தால், அவருக்கு வழிப்படுங்கள். எனக்குப் பின் உங்களில் யார் உயிர் வாழ்வீர்களோ, அப்பொழுது அதிகமான மார்க்கக் குழப்பங்களை காண்பீர்கள். அந்நேரத்தில் என்னுடைய வழியையும், கடவாய்ப் பற்களால் பற்றிப் பிடிப்பது போன்று என் சுன்னத்தைப் பற்றிப் பிடித்து நேர்வழியின்பால் இட்டுச் செல்லக்கூடிய நேர்வழி பெற்ற கலீபாக்கள் வழியையும் பின்பற்றுங்கள். மேலும் (எண்ணற்ற) புதிய அனுஷ்டானங்களைக் குறித்தும் எச்சரிக்கிறேன். புதியவைகள் அனைத்தும் வழிகேடுகள்”. அறிவிப்பவர்,  இர்பாழு பின் சாரியா (ரழி) நூல்கள்: அஹமது, அபூதாவூது, திர்மிதி, இப்னு மாஜ்ஜா போன்றவற்றில் இது பதியபாபட்டுள்ளது
இன்று நமக்குள் ஏற்படும் பிரச்சினைகளுக்கு, அல்லாஹ்வின் புனித குர்ஆனும், தூதர் நபி(ஸல்) அவர்களின் தெளிவான ஹதீஸும் இருந்தும் கூட தீர்ப்பு அளிப்பதில் குழப்பம் ஏன் ? அப்பிரச்சனைகளுக்கு நம்மில் பெரும் பாலோர் குர்ஆன், ஹதீத் கொண்டு தீர்ப்பு அளிப்பதில்லை. இதுதான் குழப்பத்திற்கு முழு முதற்காரணம். அந்த இமாம் அப்படிச் சொல்லுகிறார், இந்த இமாம் இப்படிச் சொல்லுகிறார். அந்தக் கிதாபில் அப்படி உள்ளது. இந்தக் கிதாபில் இப்படி உள்ளது என்று பேசி அடம் பிடிப்பதைக் காண முடிகிறது. இது ஏன்? முஸ்லிம்களை கூறு போட்டு, ஆளுக்கொரு சட்டம் என்று வகுத்து, அங்கீகரித்தது யார்?

அழகிய பித்அத், அழகற்ற பித்அத் என்று கூறயாருக்கும் வஹீ வந்திருக்கின்றதா ? பித்ஆவை பற்றி வரும் ஹதீஸ்களில் அழகிய பித்ஆ என்ற பெயரில் அமல் விடயங்களை நியாப்படுத்த மார்கத்தில் இவர்களுக்கு அனுமதியளித்து  யார் ? 

இதற்காக எங்காவது மார்க்க அனுமதி உள்ளதா ?

அரபி மொழியைக் காட்டி, குர்ஆனை ஓதி உணர, சிந்திக்க விடாமல், இதுகாலம் வரை பொது மக்களை உலமாக்களாகியவர்கள் அச்சுறுத்தியல்லவா வந்துள்ளார்கள். குர்ஆனை விளங்குவதற்கு எத்தனையோ படித்தரங்கள் இருக்கின்றன என்று மக்களை  பயமுறுத்தி வந்திருக்கிறோம். குர்ஆனை விளங்க குறிப்பிட்ட கலை பலவற்றைக் கற்றிருக்க வேண்டும் என்ற கட்டளை யாருடையது?

“இக் குர்ஆனை விளங்குவதற்கு மிகவும் எளிதாக ஆக்கியிருக்கிறோம். இதைச் சிந்திப்பவர்கள்  இல்லையா ?” (குர்ஆன் 54:17) என உலகம் நிலைக்கும் வரையில் ஒவ்வொரு வினாடியும் அல்குர்ஆன் மனிதனைப் பார்த்து சவால் விட்டுக் கொண்டிருக்கின்றது
 
ஆனால் நாமோ அல்லாஹ்வின் சொல்லை பொய்ப்பிக்கின்றோம்.

இக் குர்ஆனை விளங்குவதற்கு மிகவும் எளிதாக ஆக்கியிருக்கிறோம் என அல்லாஹ் செல்லும் போது, நாமோ இல்லை அது நமக்கு விளங்காது என தர்க்கம் புரிகின்றோம்.

அவ்வாறாயின் சிந்தித்துச் செயல்படுத்த முடியாதொரு நூலான குர்ஆனை தெளிவில்லாத, நடைமுறைக்கு சாத்தியப்படாத ஒரு வழிகாட்டல் நூலை அல்லாஹ் நமக்குத் தந்துள்ளான் என்பது இவர்களது வாதமா ? 

“சத்தியம் வெல்லும், அசத்தியம் அழியும் ” (குர்ஆன் 17:81).

சிந்திப்போம் நேர்வழி பெறுவோம் இது அல்லாஹ்வின் வாக்கு.

பேருவளை ஹில்மி


 



Post a Comment

0 Comments