Ticker

6/recent/ticker-posts

காரசாரமான ஹைதராபாத் சிக்கன் கிரேவி... எப்படி செய்வது?


வீக் எண்ட் வந்துவிட்டாலே கண்டிப்பாக வீட்டில் ஏதாவது ஒரு அசைவ உணவு செய்வது வழக்கம். அதிலும் சிக்கன் அதில் கண்டிப்பாக இடம்பெற்றிருக்கும். ஏனென்றால் அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்று கிக்கன்.

ஆனால் சிக்கனை வைத்து பொதுவாக அனைத்து வீடுகளிலும் குழம்பு, வறுவல், சிக்கன் 65 என செய்து சாப்பிடுவது வழக்கம். அதே வேளையில் ஹோட்டல்களுக்கு சென்றால் விதவிதமான சிக்கன் உணவுகளை வாங்கி விரும்பி சாப்பிடுவோம். அதில் முக்கியமான ஒன்று ஹைதராபாத் சிக்கன் ரெசிபிகள்.

எனவே காரசாரமான ஹைதராபாத் சிக்கன் கிரேவியை வீட்டிலேயே எளிதாக எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் தெரிந்துகொள்ளுங்கள். இந்த கிரேவியை புலாவ், சப்பாத்தி, ரொட்டி, நாண் கூட சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:

சிக்கன் மரினேட் செய்ய தேவையானவை :
சிக்கன் - 1/2 கிலோ
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி தூள் - 1 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
தயிர் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப

கிரேவி செய்ய தேவையானவை :

பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 1
எண்ணெய் - 2 டீஸ்பூன்
இலவங்கப்பட்டை - 1
கிராம்பு - 3
நட்சத்திர சோம்பு - 1
கறிவேப்பிலை - 2 கொத்து
கொத்தமல்லி இலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை :

முதலில் சிக்கனை நன்றாக சுத்தம் செய்து அலசி ஒரு பௌலில் எடுத்துக்கொள்ளுங்கள்.

பின்னர் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், கரம் மசாலா, இஞ்சி, பூண்டு பேஸ்ட், தயிர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து சுமார் அரைமணி நேரம் மூடி போட்டு ஊறவைத்து கொள்ளுங்கள்.

அடுத்து அடுப்பில் கடாய் ஒன்றை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு மற்றும் நட்சத்திர சோம்பு சேர்த்து கலந்து சிவந்ததும் சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்துக்கொள்ளுங்கள்.

பின்னர் அதில் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளவும்.

வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கியவுடன் நறுக்கிய தக்காளி மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கவும்.

தக்காளி மென்மையாக வதங்கியவுடன் மரினேட் செய்த சிக்கனை போட்டு 5 நிமிடங்களுக்கு நன்கு கலந்து வதக்கவும்.

சிக்கன் துண்டுகள் எல்லாம் நன்கு வதங்கி  எண்ணெய் பிரிந்துவரும் தருவாயில் கிரேவிக்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலந்துவிட்டு கொள்ளுங்கள்.

குறிப்பு : ருசி பார்த்து உப்பு அல்லது காரம் தேவையென்றால் சேர்த்து கொள்ளுங்கள்.

பின்னர் கடாயை மூடி மிதமான தீயில் 10 நிமிடங்களுக்கு சமைக்கவும்.

குறிப்பு : இடையிடையே சிக்கனை அடிபிடிக்காமல் கலந்துவிட்டு கொள்ளுங்கள்.

சிக்கன் நன்றாக வெந்து கிரேவி திக்காக மாறி மேலே எண்ணெய் மிதந்தவுடன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலையை தூவி இறக்கினால் சுவையான ஹைதராபாத் சிக்கன் கிரேவி சாப்பிட ரெடி.

இதை புலாவ், சப்பாத்தி, ரொட்டி, நாண் கூட சேர்த்து சாப்பிட்டால் சுவை அற்புதமாக இருக்கும்.

news18

Post a Comment

0 Comments