
உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டம் உத்தியோகபூர்வமாக மக்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக அதன் திட்டப் பணிப்பாளர், பொறியியலாளர் டி.சி.எஸ். எலகந்த தெரிவித்துள்ளார்.
இது தேசிய மின்சக்தி கட்டைப்பிற்கு 120 மெகாவோட் மின்சாரத்தை ஒருங்கிணைத்தல் மற்றும் விவசாய நிலங்களுக்கு நீரைப் பெற்றுக்கொடுக்கும் வகையிலான பாரியதொரு திட்டமாகும்.
புஹல்பொல நீர்த்தேக்கத்தில் சேகரிக்கப்படும் நீரை, நான்கு கிலோமீற்றர் சுரங்கப்பாதையினூடாக, டயரபா நீர்த்தேக்கத்திற்கு எடுத்துச் சென்று,அங்கிருந்து 15.5 கி.மீ சுரங்கப்பாதையூடாக, எல்லகரந்தகொல்ல பகுதியிலுள்ள இரண்டு நிலத்தடி விசையாழிகளுக்கு நீர் செலுத்தப்படும். இந்த விசையாழிகள், ஒவ்வொன்றும் 60 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்து தேசிய மின்கட்டமைப்பிற்கு பங்களிப்புச் செய்யவுள்ளதாக அறிய முடிகின்றது.

மின்சார உற்பத்தியைத் தொடர்ந்து, எஞ்சிய நீர் நான்கு கிலோமீற்றர் சுரங்கப்பாதையினூடாக அலிகொட்டா நீர்த்தேக்கத்திற்கும், பின்னர் ஹந்தபனகல மற்றும் குடா ஓயா நீர்த்தேக்கங்களுக்கும் அனுப்பப்படவுள்ளதால், இத்திட்டத்தின் மூலம் 15,000 ஏக்கர் நெற்பயிர்களுக்கு பெரும்போக மற்றும் சிறுபோகப் பருவகாலங்களில் நீர் விநியோகம் உறுதி செய்யப்படவுள்ளதாகவும் அறியமுடிகின்றது.
அதனால், மின்சார உற்பத்திக்கு அப்பால் உமா ஓயா திட்டம், விவசாயம் மற்றும் குடிநீர் விநியோகத்தில் முக்கிய தேவைகளையும் நிவர்த்தி செய்யும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது!
கடந்த 2023 மார்ச் மாதம் 18ம் திகதி ஈரான் தூதுவர் ஹாஷிம் அஷ்ஜாஸாதிஹ், ஊவா மாகாண ஆளுனர் ஏ.ஜே.எம்.முஸம்மில், இராஜாங்க அமைச்சர்களான ஷசீந்திர ராஜபக்ஷ, ஜகத் புஷ்பகுமார, சாமர சம்பத், பாராளுமன்ற உறுப்பினர்களான சுதர்ஷன தெனிபிட்டிய, குமாரசிறி ரத்னாயக்க, கயாஷான் நவநந்தன, யதாமினி குணவர்தன மற்றும் திட்ட முகாமையாளர் உள்ளிட்ட பலருடன் பிரதமர் தினேஷ் குணவர்தன திட்டத்தைப் பார்வையிடச் சென்றார்.

2011ம் ஆண்டில், உமா ஓயா பல்நோக்கு திட்டம்¸ ஈரானின் ஏற்றுமதி மேம்பாட்டு வங்கியின் கடனுதவியுடன் ஆரம்பிக்கப்பட்டது.
இருப்பினும், ஈரானில் சிலபல தடைகள் தாக்கத்தை ஏற்படுத்தி, திட்டத்தின் நிதி உள்நாட்டு திறைசேரி ஒதுக்கீடுகளுக்கு மாற்றப்பட்டமையினால், திட்டப்பணிகள் தாமதமாகியதாக அறிய முடிகின்றது.
செம்மைத்துளியான்

.gif)




0 Comments