உலகத்தின் பல பகுதிகளில் இன்று (மே 12) அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. பலரும் தங்களின் தாயாருக்கு வாழ்த்துகளை தெரிவித்தும், பரிசு கொடுத்தும் அவர்களை மகிழ்ச்சியடைய செய்வதை சமூக வலைதளங்களில் பார்க்க முடிகிறது. அந்த வகையில், பெற்றோர்கள் மீதே வினோதமாக ஒரு வழக்கை மகள் ஒருவர் தாக்கல் செய்துள்ளது அன்னையர் தினத்தை கொண்டாடும் உங்களுக்கு அதிர்ச்சியை தரலாம்.
அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி மாகாணத்தைச் சேர்ந்த பெணமணி ஒருவர் தங்கள் பெற்றோர் தன்னை பெற்றெடுக்கும் போது தன்னிடம் ஒப்புதல் பெற தவறிவிட்டனர் என்று கூறி வழக்கு போட்டுள்ளார். அந்த பெண் டிக்டாக் பிரபலம் என கூறப்படும் நிலையில், அவரது டிக்டாக் பக்கத்தில்,"நான் பிறக்கும் முன்னர் என் பெற்றோர் என்னை எந்த விதத்திலும் தொடர்புகொள்ளவில்லை. மேலும் இங்கு (பூமிக்கு) வருகிறாயா என்று கூட கேட்கவில்லை" என நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார்.
காஸ் தியாஸ் என்ற அந்த பெண்மணிக்கும் குழந்தை இருக்கிறது. இந்த சூழலில், எதற்கு தன்னை பெற்றெடுத்தீர்கள் என்று அவரது பெற்றோர் மீதே வழக்குப்போட்ட காரணம் குறித்து காஸ் தியாஸ் வீடியோ ஒன்றில் விளக்கியுள்ளார். இவர் அவரின் குழந்தையை தத்தெடுத்துள்ளார். எனவே தன் குழந்தை தன்னிடம் இந்த கேள்வியை கேட்க இயலாது. மேலும் அவர்,"நீங்கள் தற்போது கர்ப்பமாகியிருக்கிறீர்கள் என்றால் முதலில் மனநல ஆலோசகரிடம் சென்று, உங்கள் வயிற்றில் இருக்கும் குழந்தைகளிடம் அவர்களை பெற்றெடுப்பதற்கான ஒப்புதலை பெறுங்கள்" என்றார்.
மேலும் அந்த வீடியோவில்,"அதை செய்யவில்லை என்றுதான் என் பெற்றோர் மீது வழக்குத் தொடுத்தேன். அவர்கள்தான் என்னை கருவுறுவதற்கும், என்னை கருவில் வளர்த்ததற்கும், என்னை பெற்றெடுத்தற்கும் காரணமானவர்கள். நான் இங்கு இருப்பதற்கு யாரும் என்னிடம் சம்மதம் கேட்கவில்லை. நான் வளர்வேன் என்றோ வாழ்க்கையை ஓட்டுவதற்கு தனியே வேலைக்குச் செல்வேன் என்றோ எனக்கு தெரியவே தெரியாது. அதனால் தான் அவர்கள் மீது வழக்குப்போட்டேன்" என பேசியிருந்தார்.
மேலும், "நான் அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை என்பது மட்டுமில்லை நான் பிறக்கும் முன்னர் என் பெற்றோர் என்னை எந்த விதத்திலும் தொடர்புகொண்டு பூமிக்கு வருகிறாயா என்று கூட என்னிடம் கேட்கவில்லை. அதனால்தான் வழக்குப்போட்டேன். இல்லையெனில் நான் இப்படி பெற்றோர் மீது வழக்குப்போடும்படி பிள்ளைகளிடம் சொல்லி விழிப்புணர்வு செய்து வருகிறேன். இதேபோல் வழக்குப்போட்டால் தான் காலம் முழுக்க வேலைக்கு சென்று கஷ்டப்பட வேண்டியிருக்காது" என பேசியிருந்தார்.
அதாவது இந்த வீடியோவை அவர் நையாண்டி செய்யும் விதமாக பதிவிட்டுள்ளார். அதில் கூறியிருக்கிறது உண்மையில்லை. பிள்ளைகளை பெற்று வாழ்க்கை முழுவதும் வேலைக்குச் செல்ல வேண்டியிருக்கிறதே என்ற கஷ்டத்தை கண்டெண்டாக்கி அதை காமெடியாக பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் இது உண்மையா அல்லது நகைச்சுவையா என்பது புரியாமல் குழம்பிப்போயுள்ளனர்.
இது நகைச்சுவைக்காக அவர் பதிவிட்டு வீடியோவாகும். மேலும் தன் குழந்தைகளை தான் தத்தெடுத்ததாகவும், அவர்கள் பூமிக்கு வந்ததற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்றும் அவர்களுக்கு நான் உதவவே செய்கிறேன் என்றும் தெரிவித்திருந்தார். அதனால் அவர்களால் தன் மீது வழக்குப்போட முடியாது எனவும் நகைச்சுவையாக பதிவிட்டிருக்கிறார்.
zeenews
0 Comments