துக்க வீட்டில் கொடிகட்டி பறந்த கள்ளச்சாராய விற்பனை... 36 உயிர்களை காவு வாங்கிய கள்ளக்குறிச்சி சம்பவம் நடந்தது எப்படி?

துக்க வீட்டில் கொடிகட்டி பறந்த கள்ளச்சாராய விற்பனை... 36 உயிர்களை காவு வாங்கிய கள்ளக்குறிச்சி சம்பவம் நடந்தது எப்படி?


கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியான கருணாபுரத்தில் சுமார் ஐந்தாயிரம் பேர் வசித்து வருகின்றனர். அதே பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜன் என்ற கண்ணுக்குட்டி என்பவர், தனது வீடு, சகோதரர் தாமோதரன் வீடு, ஜீவா என்ற உறவினர் வீடு என 3 வீடுகளில் வைத்து, பல ஆண்டுகளாக கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

கல்வராயன் மலைப் பகுதியில் இருந்து கள்ளச்சாராயத்தை, பிளாஸ்டிக் கேன் மற்றும் லாரி டியூப்களில் கொண்டுவந்து, அதனை 200 மில்லி என்ற அளவில் பாக்கெட்டுகளில் அடைத்து 60 ரூபாய்க்கு விற்பனை செய்து வந்துள்ளார். மலிவு விலைக்கு கிடைத்ததால் கருணாபுரம், ஏமப்பேர், மாடூர், வீரசோழபுரம், மாதவச்சேரி ஆகிய கிராமங்களைச் சேர்ந்தவர்கள் கண்ணுக்குட்டியிடம் கள்ளச்சாராயம் வாங்கி குடித்து வந்ததாக தெரிகிறது.

சாராயம் விற்றது தொடர்பாக கண்ணுக்குட்டி பல முறை கைது செய்யப்பட்டு, விடுதலை ஆகியுள்ளார். அவர் மீது இதுவரை 70 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த சூழலில்தான், கருணாபுரம் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை துக்க நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுள்ளது. இதற்காக வந்தவர்கள் கண்ணுக்குட்டியிடம் கள்ளச்சாராயத்தை வாங்கிக் குடித்துள்ளனர். வழக்கத்தைவிட விற்பனை அதிகமானதால், கள்ளச்சாராயத்திற்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. ஆனால் கல்வராயன் மலைப்பகுதியில் இருந்து கள்ளச்சாராயத்தை உடனடியாக கொண்டுவர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அதனால், மறுநாள் தன்னிடம் இருந்த கள்ளச்சாராயத்தில் கண்ணுக்குட்டி அதிகளவில் மெத்தனால் கலந்து விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. திங்கள்கிழமை மற்றும் செவ்வாய்கிழமை அருந்தியவர்களுக்கு கள்ளச்சாராயம், விஷச்சாராயமாக மாறி அவர்களின் உயிரை காவு வாங்கியிருக்கிறது. கள்ளச்சாராயம் குடித்தவர்களுக்கு, செவ்வாய்க்கிழமை இரவு 10 மணிக்கு மேல் வயிறு, நெஞ்சுப் பகுதிகளில் எரிச்சல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து உடல் நலம் பாதிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் அடுத்தடுத்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். கண்ணுக்குட்டியே கல்வராயன் மலைப்பகுதியில் இருந்து கள்ளச்சாராயத்தை இறக்கி விடிய விடிய விற்பனை செய்ததாக உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கூறியுள்ளனர். மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

news18


 



Post a Comment

Previous Post Next Post