பி. எச். அப்துல் ஹமீட் ஒரு கலைப் பொக்கிஷம்! நீடூழி வாழ வாழ்த்துக்கள்!

பி. எச். அப்துல் ஹமீட் ஒரு கலைப் பொக்கிஷம்! நீடூழி வாழ வாழ்த்துக்கள்!


இலங்கையின் கொழும்பு,  தெமட்டகொடையைப் பிறப்பிடமாகக் கொண்ட பி. எச். அப்துல் ஹமீட் அவர்கள்-  ஹசன், ஹாசியா உம்மா ஆகியோருக்கு, நான்காவது மகனாகப் பிறந்த இவர்  மூன்றரை வயதிருக்கும் போதே இவரது தந்தையார் காலமாகிவிட்டார்.

தனது ஆரம்பக் கல்வியை தெமட்டகொடை தமிழ் மகா வித்தியாலயத்தில் கற்ற இவர்,  அங்கு தமிழை கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்த திருவாளர்களான ஆ. பொன்னுத்துரை, பண்டிதர் சிவலிங்கம் ஆகியோரிடம்  தமிழ் மொழியை  பிசகின்றிக் கற்றுத் தேர்ந்தார். 

எதிர்காலத்தில் இவர் சர்வதேசப் புகழ்பெற்ற தமிழ் அறிவிப்பாளராவதற்கும், வானொலி, மேடை நாடக, மற்றும் திரைப்பட நடிகராவதற்கும் ஆரம்ப காலத்தில் இவர் நல்லாசான்களிடம் பெற்றுக் கொண்ட கல்வியும், பயிற்சிகளுமே காரணமாக அமைந்தன. 

பாடசாலையில் படிக்கின்ற காலத்திலேயே  நாடகங்களில் நடிக்க ஆரம்பித்த இவர், 1960ம் ஆண்டில் கொழும்பு விவேகானந்தா சபை மண்டபத்தில், 'வீரபாண்டிய கட்டபொம்மன்' நாடகத்தில் நடித்து, ஈழத்து நாடகக் கலைஞர் லடிஸ் வீரமணியின் பாராட்டைப் பெற்றார்.

அப்துல் ஹமீத் தனது சிறுவயதில் இலங்கை வானொலியின் சிறுவர் மலர் நிகழ்ச்சிகளிலும், பின்னர் வ. ஆ. இராசையாவின் நிகழ்ச்சித் தயாரிப்பிலான  இளைஞர் மன்ற நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார்.

இக்காலகட்டத்திலேயே இவருக்கு வானொலி இளைஞர் மன்றத்திற்கும், கல்விச் சேவை நிகழ்ச்சிக்குமான நாடகம், மற்றும் உரைச்சித்திரம், தயாரிக்கவும், குரல் கொடுக்கவும் வாய்ப்புகள் வந்தன. அதனால் இவர் தனது பதினெட்டு வயதிலேயே வானொலி அறிவிப்பாளராக நியமனம் பெற்றார்.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நீண்டகாலமாக அறிவிப்பாளராக பணியாற்றி வந்த இவருடன் திரு எஸ். நடராஜசிவம், திரு ஜோக்கிம் பெர்னாண்டோ, திரு இருதய ஆனந்தராஜ், திருமதி ராஜேஸ்வரி சண்முகம் ஆகியோரும் பணியாற்றினர்.

கவிஞர் எம்.ஸி.எம். ஸுபைர் அவர்கள்,  1974ம் ஆண்டில்,  வானொலியில் "மருதமலர்" நிகழ்ச்சியைத் தயாரித்து வழங்கிக் கொண்டிருந்த காலத்தில், நிகழ்ச்சியில்  கலந்துகொள்ளச் சென்ற வேளைகளில், வானொலி நிலையத்தில் வைத்து B.H.அப்துல் ஹமீத் அவர்களைச் சந்திக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. 

வானொலி நிலையத்தில் அப்துல் ஹமீத் அவர்கள்  செய்தி வாசிப்பாளராக மட்டுமன்றி நேர்முக வர்ணணையாளர்,  நிகழ்ச்சித் தயாரிப்பாளர், வானொலி நாடக கலைஞர் போன்ற பல்துறைகளிலும் காலூன்றி நின்றார்.

இலங்கை வானொலியின் வர்த்தக சேவையில் அறிவிப்பாளராக இருந்த காலத்தில் தேசியசேவையிலும் இவர் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி, நேயர்களின் அபிமானத்தைப் பெற்றார். 

சில்லையூர் செல்வராசனின் 'றோமியோ ஜூலியற்' கவிதை நாடகம், எஸ். ராம்தாஸின் 'கோமாளிகள்' கவிஞர் அம்பியின் 'யாழ்பாடி', நடிகர் திலகம் சிவாஜி கணேசனால் பாராட்டுப் பெற்ற 'ஒரு வீடு கோவிலாகிறது',  எம். அஷ்ரப்கானின் ' அனிச்ச மலர்கள்', 'சக்கரங்கள், கே. எஸ். பாலச்சந்திரனின் 'கிராமத்துக் கனவுகள்' போன்ற நாடகங்களை இவர் அக்காலத்தில் வானொலியில் தொகுத்து வழங்கினார். 

"பாட்டுக்கு பாட்டு" என்ற  வேடிக்கை வினோத நிகழ்ச்சியை  வானொலியில் முதன் முதலாக இவரே அறிமுகப்படுத்தினார். இந்நிகழ்ச்சி அக்காலத்தில் தென்னிந்தியாவிலும் அதிக வரவேற்பை பெற்றமை குறிப்பிடத்தக்கது. 

தொலைக்காட்சி இல்லாதிருந்த அக்காலத்தில் பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகவும் பிரபல்யம் பெற்றமைக்கு அதன் தொகுப்பாளர் பி.எச் அப்துல் ஹமீத் அவர்களின் கணீரென்ற குரலும், அவரது தெளிவான தூயதமிழ் உச்சரிப்பும்தான் காரணமென்று கூறலாம். 

தொலைக்காட்சி வந்ததும் இவர் அதற்குள்ளேயும் உள்வாங்கப்பட்டு இலங்கை நேயர்கள் மட்டுமன்றி, இந்திய நேயர்கள் மத்தியிலும் பிரபல்யம் பெற்றார்.

மிகச்சிறந்த குரல் வளத்தைக் கொண்டுள்ள இவர், எழுத்தாளர், பாடலாசிரியர், தொகுப்பாளர், மேடைப் பேச்சாளர்,  நாடக நடிகர் எனப் பல்வேறு துறைகளிலும் திறமைகளைக் கொண்டவராக இன்றுவரை பலருக்கும் முன் உதாரணமாக வாழ்ந்து வருகிறார்.

ஒரு மொழியில் தொகுத்து வழங்குகிறோம் என்றால், அதன் அடித்தளத்தை செம்மையாக கற்றுணர்ந்து வேற்றுமொழிக் கலப்பில்லாமல் தெளிவாகப் பயன்படுத்த வேண்டும். ஏனைய மொழிகலந்து தமிழ் மொழி பிரயோகிக்கப் படுவதை அப்துல் ஹமீத் அவர்கள் ஒருபோதும் விரும்பியதில்லை. 

வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளராகத் தனது கலையுலக வாழ்க்கையைத் தொடங்கிய இவர், உலகம் முழுவதிலும் பரந்து வாழும்  தமிழ்பேசும் மக்களின் அன்பிற்குரியவராக இன்றும் இருந்து வருகிறார்.
இன்றும் கூட இவர் தமிழ்பேசும் மக்கள் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளுக்கும், இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, துபாய், குவைத் போன்ற நாடுகளுக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அவ்வப்போது அழைக்கப்படுவது  இவரது மொழிப் பற்றையும், குரல்வளத்தையும் மக்கள் எவ்வளவுக்கு நேசிக்கின்றார்கள்  என்பதையே காட்டுகின்றது!

தனது 75வது பிறந்தநாளையும் கொண்டாடிவிட்ட காந்தக் குரல் மன்னன் திருவாளர்  அப்துல் ஹமீத் நல்லாரோக்கியத்தடன் நீடூழி  வாழ "வேட்டை"யின் மூலம் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்!

 ஐ. ஏ. ஸத்தார்


 



Post a Comment

Previous Post Next Post