ரூல்ஸ் தெரியாமல் சொதப்பிய அமெரிக்கா.. 5 ரன்ஸ் பெனால்டியால் இந்தியாவின் வெற்றியை எளிதாக்கி பரிதாப சாதனை

ரூல்ஸ் தெரியாமல் சொதப்பிய அமெரிக்கா.. 5 ரன்ஸ் பெனால்டியால் இந்தியாவின் வெற்றியை எளிதாக்கி பரிதாப சாதனை


ஐசிசி 2024 உலகக் கோப்பையில் இந்திய கிரிக்கெட் அணி தங்களுடைய 3வது போட்டியில் அமெரிக்காவை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. ஜூன் 11ஆம் தேதி  நியூயார்க் நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அமெரிக்கா 111 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்தது. அதிகபட்சமாக நிதீஷ் குமார் 27, ஸ்டீபன் டைலர் 24 ரன்கள் எடுத்தனர். 

அதைத் தொடர்ந்து சேசிங் செய்த இந்தியாவுக்கு சூரியகுமார் யாதவ் 50*, சிவம் துபே 31* ரன்கள் அடித்து 18.2 ஓவரில் வெற்றியை பெற்றுக் கொடுத்தனர். அதனால் இந்த தொடரில் மூன்றாவது வெற்றியை பதிவு செய்த இந்தியா சூப்பர் 8 சுற்றுக்கு குரூப் ஏ பிரிவிலிருந்து முதல் அணியாக தகுதி பெற்று அசத்தியது. மறுபுறம் பேட்டிங்கில் அசத்தத் தவறிய அமெரிக்காவுக்கு அதிகபட்சமாக நேத்ராவல்கர் 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை.

முன்னதாக இந்தப் போட்டியில் அமெரிக்க அணிக்கு 5 ரன்கள் பெனால்டியாக வழங்கப்பட்டது. அதாவது வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் சமீப காலங்களாகவே நிறைய அணிகள் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்க தவறி வருகின்றன. அதற்கு அபராதம் விதித்தும் அந்த தவறு குறைவதாக தெரியவில்லை. எனவே உலகக்கோப்பையில் ஸ்டாப் க்ளாக் எனும் புதிய விதிமுறையை ஐசிசி அறிமுகப்படுத்தியது. 

அதன் படி ஒரு ஓவர் முடிந்ததும் அடுத்த 60 நொடிக்குள் அதற்கடுத்த ஓவரை பவுலிங் செய்யும் அணி வீசத் துவங்க வேண்டும். அதை செய்ய தவறும் பட்சத்தில் முதல் 2 முறையாக எச்சரிக்கையுடன் விடப்படும். அதையும் தாண்டி 3வது முறையாக அந்த தவறை செய்தால் 41.9 விதிமுறைப்படி 5 ரன்கள் பெனால்ட்டியாக வழங்கப்படும்.

அந்த நிலையில் இந்த போட்டியில் அமெரிக்கா 3 முறை 60 நொடிக்குள் அடுத்த ஓவரை துவங்கவில்லை. குறிப்பாக 15வது ஓவர் முடிந்த பின் 3வது முறையாக 16வது ஓவரை 60 நொடிகள் துவக்குவதற்கு அமெரிக்க தாமதம் படுத்தியது. அதனால் களத்தில் இருந்த நடுவர் அமெரிக்காவுக்கு 5 ரன்கள் பெனால்டி வழங்கினர். அது அந்த நேரத்தில் தடுமாற்றமாக விளையாடிய இந்திய அணிக்கு மிகப்பெரிய சாதகத்தை ஏற்படுத்தியது.

அதனால் ஸ்டாப் க்ளாக் விதிமுறையில் பெனால்டி வழங்கிய முதல் அணி என்ற பரிதாபமான சாதனையை போட்டியில் அமெரிக்கா படைத்தது. இது பற்றி போட்டியின் முடிவில் கேட்ட போது அந்த விதிமுறை பற்றி தங்களுக்கு தெரியாது என்று அமெரிக்க பயிற்சியாளர் கூறினார். அந்த வகையில் விதிமுறை தெரியாமல் இப்போட்டியில் அமெரிக்கா 5 ரன்கள் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

crictamil


 



Post a Comment

Previous Post Next Post