ரணகளத்தில் ஒரு குதூகலம்.. எம்எஸ் தோனியின் சாதனையை உடைத்த பாபர் அசாம்.. புதிய உலக சாதனை

ரணகளத்தில் ஒரு குதூகலம்.. எம்எஸ் தோனியின் சாதனையை உடைத்த பாபர் அசாம்.. புதிய உலக சாதனை


ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அயர்லாந்தை 3 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோற்கடித்தது. ஜூன் 16ஆம் தேதி ஃப்ளோரிடாவில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து 20 ஓவரில் 106/9 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக டிலானி 31, ஜோஸ்பா லிட்டில் 22* ரன்கள் எடுத்தனர். 

பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக முகமது அமீர், இமாத் வசிம் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். அதைத்தொடர்ந்து 107 ரன்களை துரத்திய பாகிஸ்தானுக்கு ரிஸ்வான் 17, ஆயுப் 17, பக்கார் ஜமான் 5, உஸ்மான் கான் 2, சடாப் கான் 0, இமாத் வாசிம் 4 ரன்களில் அவுட்டாகி மிகப்பெரிய பின்னடைவையும் அழுத்தத்தையும் ஏற்படுத்தினர்.

அதனால் 62/6 என தடுமாறிய பாகிஸ்தானின் வெற்றி கேள்விக்குறியான போது கேப்டன் பாபர் அசாம் நங்கூரமாக விளையாடி 32* ரன்கள் எடுத்தார். அவருடன் அப்பாஸ் அப்ரிடி 17, சாகின் அப்ரிடி 13* ரன்கள் எடுத்ததால் 18.5 ஓவரில் 111/7 ரன்கள் எடுத்த பாகிஸ்தான் போராடி வென்றது. அதன் காரணமாக அயர்லாந்து சார்பில் அதிகபட்சமாக பேரி மெகார்த்தி 3 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை. 

முன்னதாக இந்த தொடரில் அமெரிக்காவிடம் அவமான தோல்வியை பதிவு செய்த பாகிஸ்தான் பரம எதிரி இந்தியாவிடம் 119 ரன்களை சேசிங் செய்ய முடியாமல் 6 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாப தோல்வியை சந்தித்தது. அதனால் கனடாவுக்கு எதிரான போட்டியில் வென்றும் லீக் சுற்றுடன் ஏற்கனவே பாகிஸ்தான் வெளியேறி விட்டது. இருப்பினும் இப்போட்டியில் ஆறுதல் வெற்றியை பதிவு செய்த பாகிஸ்தான் குரூப் ஏ பிரிவின் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை பிடிக்கும் அவமானத்தை தவிர்த்தது.

அந்த வகையில் இந்த உலகக் கோப்பை பாகிஸ்தானுக்கு வேதனையாகவும் ரணகளமாகவும் அமைந்தது என்றே சொல்லலாம். இருப்பினும் இப்போட்டியில் அடித்த 32* ரன்களையும் சேர்த்து டி20 உலகக் கோப்பையில் பாபர் அசாம் கேப்டனாக 549 ரன்கள் குவித்துள்ளார். இதன் வாயிலாக டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த கேப்டன் என்ற இந்தியாவின் எம்எஸ் தோனி சாதனையை உடைத்த பாபர் அசாம் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

இதற்கு முன் 2007 முதல் 2016 வரை விளையாடிய ஜாம்பவான் எம்எஸ் தோனி இந்தியாவுக்காக 529 ரன்கள் எடுத்ததே முந்தைய சாதனையாகும். தற்போது அவருக்கு அடுத்தபடியாக நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் 527 ரன்களுடன் 3வது இடத்தில் உள்ளார். அந்த வகையில் சோதனையாக முடிந்த 2024 டி20 உலகக் கோப்பையில் பாபர் அசாம் படைத்துள்ள இந்த வெற்றிக்கு உதவாத சாதனை பாகிஸ்தான் ரசிகர்களிடம் குறைந்தபட்சம் குதூகலத்தை ஏற்படுத்தும் என்றால் மிகையாகாது.

crictamil


 



Post a Comment

Previous Post Next Post