Ticker

6/recent/ticker-posts

கதை சொல்லும் கரப்பான் பூச்சி!


தலைப்பைப் பார்த்ததும்; என்ன இது, கரப்பான் பூச்சி கதை சொல்கிறதா, என்று நினைத்துவிட வேண்டாம். கதை சொன்னது யாரோ; கதைக்குள் வந்து நுழைந்து கொண்டதுதான்  கரப்பான் பூச்சி! 

அதனைத் தட்டி விடுவதும், தட்டிக்கொடுப்பதும் அவரவர் மனநிலையைப் பொருத்தது!

இரண்டு முக்கிய விடயங்கள் இந்தக் கட்டுரைக்குள் உள்வாங்கப்படுகின்றன.  

முதலாவது, மரணப் படுக்கையிலிருக்கும் ஒரு குடும்ப அங்கத்தினர் சம்பந்தப்பட்ட இக்கட்டான சூழ்நிலை; மருத்துவரின் ஆலோசனைக்கும், குடும்பத்தினரின் செயல்பாடுகளுக்குமிடையே உள்ள முரண்பாடுகளும், குடும்பத்தவர் சிலரின் உள்நோக்கமானது மருத்துவ வழிகாட்டுதலைப் பின்பற்றுவதன் முக்கியத்துவத்தைக் கேள்விக்கு உள்ளாக்கியமையுமாகும்!

ஒரு குடும்ப உறுப்பினரின் இறுதி நாட்களில் அவருக்கு உதவ முயற்சிக்கும் நல்லுள்ளம் படைத்த ஒருவர், தான் தெளிவு பெறுவதற்காக மருத்துவரிடமிருந்து அறிந்து கொண்டவை, குடும்பத்தவரின் கூற்றிலிருந்தும் முரண்படுவதை உணர்கின்றார். நோயாளி சில நாட்களே உயிர் வாழ்வார்; இறுதி நாட்களில் நோயாளியை எவ்வாறு பராமரிப்பது என்பது குறித்து மருத்துவரின் ஆலோசனை தெளிவாக இருந்தபோதிலும், அந்த அறிவுரைகள் ஏதோ சிலபல காரணங்களால் புறக்கணிக்கின்றன.

இது விடயத்தில் அமைதியாக இருக்க முடியாமல்,  அந்த ஒருவர் மருத்துவரின் ஆலோசனையைச் சுட்டிக் காட்டியபோது, செயற்பாட்டில் சிக்கலைத் தூண்டிவிட்டதாக, குற்றம் சாட்டப்பட்டு, அந்த ஒருவரை வெந்நீரில் இறக்கியது போன்ற சூழ்நிலை ஏற்படச் செய்துவிட்டதால்,  இது அவரின் மனம் சிதைந்து போகின்றது!

இரண்டாவதாக,  "சுய வளர்ச்சிக்கான கரப்பான் பூச்சிக் கோட்பாடு" என்ற தலைப்பில் முகநூலில் பதிவாயிருந்த கதையும், அதன் தலைப்பும் நகைச்சுவையாக இருந்தபோதிலும், கதை ஆழமான 
படிப்பினையைக் கொண்டுள்ளதை உணர முடிந்ததாகும்!

உணவகமொன்றில், திடீரென்று எங்கிருந்தோ பறந்து வந்த கரப்பான் பூச்சியொன்று  ஒரு பெண்மணியின் தலைமீது அமர்ந்தபோது, அவள் பயத்தால் கத்த ஆரம்பித்தாள். பீதியடைந்த முகத்துடனும், நடுங்கும் குரலுடனும், அதனை அகற்றுவதற்கு தனது இரு கரங்களாலும் தீவிரமாக முயன்றாள். அவளோடு அங்கு அமர்ந்திருந்த மற்றவர்களும் பீதியடைந்ததால், எதிர்வினை அனைவருக்கும் தொற்றிக் கொண்டது!
ஒருவாறு அந்தப் பெண்மணி, கரப்பான் பூச்சியைத் தட்டிவிட்டபோது அது அங்கிருந்து பறந்து சென்று மற்றொரு பெண்மணியின் தோள்மீது விழுகின்றது. இப்போது, நாடகம் அங்கிருந்த மற்றொரு பெண்மணியால் தொடரப்படுகின்றது!

அவர்களைக் காப்பாற்ற விரைந்து வந்த பணியாள் மீதும் அந்தக் கரப்பான் பூச்சி தொற்றிக் கொள்கின்றது!

அவர் சுதாகரித்துக் கொண்டவராக, உறுதியாக நின்று, தனது சட்டையின் மேல் நின்றிருந்த கரப்பான் பூச்சியை சற்று நேரம் உற்றுக் கவனித்தார்; போதுமான நம்பிக்கையை வரவழைத்துக் கொண்டு, அதைப் பிடித்தெடுத்து உணவகத்திற்கு வெளியே வீசி எறிந்தார்.

'கப்பச்சோனா' பருகிக் கொண்டு, இதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மற்றொரு மனிதனின்  மனதின் சில எண்ணங்கள் திரண்டு வந்து, அந்த மனிதனை சிந்திக்க வைக்கின்றது!

கரப்பான் பூச்சி அவர்களின் நடத்தைக்கு காரணமா?பணியாள் எந்தக் குழப்பமும் இல்லாமல், அதை மிக அருமையாகக் கையாண்டாரே!

இங்கு பிரச்சினை கரப்பான் பூச்சியல்ல, கரப்பான் பூச்சியினால் ஏற்பட்ட தொந்தரவை அந்த பெண் மணிகளால் சமாளித்துக் கொள்ள முடியாமல் போனதுதான்!

தந்தையோ, முதலாளியோ, மனைவியோ ஒருவனைத் தொந்தரவு செய்வதில்லை, அவர்கள் கூச்சலிடுவதால் ஏற்படும் இடையூறுகளும், அதனைக் கையாளத் தெரியாத  இயலாமையுமே அவனைத் தொந்தரவு செய்கின்றது.

ஒருவனைத் தொந்தரவு செய்வது சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்களல்ல; போக்குவரத்து நெரிசலால் ஏற்படும் இடையூறுகளைக் கையாள முடியாத அவனது இயலாமையே!

பிரச்சனையை விட, பிரச்சனைக்கான எதிர்வினைதான்  வாழ்க்கையில் குழப்பத்தை உருவாக்குகிறது என்பதுதான் இந்தக் கதையிலிருந்து கற்றுக்கொண்ட பாடம்!

ஒருவன் வாழ்க்கையில் எதிர்வினையாற்றக்கூடாது; எப்போதும் பதிலளிக்க வேண்டும். இங்கு பெண்கள் எதிர்வினையாற்றினர்;  அதேசமயம் பணியாள் பதிலளித்தார்; பிரச்சினை முடிவுக்கும் 
வந்தது!

எதிர்வினைகள் எப்போதும் உள்ளுணர்வாக இருக்கும்; அதே சமயம் பதில்களே எப்போதும் சிந்தித்துச் செயல்பட வைக்கும்!

புரிந்துகொள்ள ஒரு அழகான வழி..!

ஒருவன் மகிழ்ச்சியாக இருப்பது வாழ்க்கையில் எல்லாம் சரியாக இருப்பதாலல்ல; அவனது வாழ்க்கையில் எல்லாவற்றிலும் அவனது அணுகுமுறை சரியாக உள்ளதால்தான்!

கரப்பான் பூச்சியால் உணவகத்தில் ஏற்பட்ட குழப்பமான சூழ்நிலை;  பீதியின் நடுவே, பணியாள் அமைதியுடன், அதனைப் பிடித்து அப்புறப் படுத்துவதன் மூலம் சீராக்கப்படுகின்றது!

இங்குள்ள முக்கிய விடயம், நமக்கு என்ன நடக்கிறது என்பதல்ல;நாம் எப்படி நடந்துகொள்கிறோம் என்பதுதான்!

ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் அடிக்கடி உறவுகள் வடிகட்டப்படுவதைக் காண்கிறோம்; அவற்றில் சில உறவுகள் நச்சுத்தன்மையுடையதாக இருக்கலாம்; சொந்த உறவுகளுக்குள்ளும் கூட! இவர்களால் ஏற்படும்  உணர்ச்சிக் கொந்தளிப்பைத் தாங்க மறுத்துவிடலாகாது. 

உறுதியான எல்லைகளை அமைப்பதன் மூலம், எதிர்பார்ப்புக்களை விட, நமது மன நலத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். நச்சு உறவுகளிலிருந்து விடுபட இத்தகைய கடுமையான நடவடிக்கைகள் தேவைதானா?
இது மனித உணர்ச்சிகளின் சிக்கலான மோதலுக்கப் பயப்படுகின்ற தன்மையாகும். நியாயத்திற்குப் பங்கம் ஏற்பட்டுவிடுமோ என்ற  பயத்தின் காரணத்தால், நாம் தவறாக நடத்தப்படுவதை பொறுத்துக்கொள்கிறோம்!

இருப்பினும், நமது மன ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை கொடுப்பது சுயநலமல்ல;  அது சுய பாதுகாப்பு!

எரியும் நெருப்பிலிருந்து நம்மை விலக்கிக் கொள்ள நாம் தயங்க மாட்டோம்! நம் நல்வாழ்வை அச்சுறுத்தும் நச்சு உறவுகளிலிருந்து தூர விலக்கிக் கொள்வதும் அவ்வாறான ஒன்றுதான். இது விரோதமானதல்ல;  அது சுய அன்பின் செயல். 

இது நம் வாழ்க்கையைக் கட்டுப்படுத்துவது மற்றும் எதிர்மறையால் நுகரப்பட மறுப்பது பற்றியது.  

இது நச்சுத்தன்மையின் கட்டுக்களிலிருந்து விடுபட்டு, குணப்படுத்துதல் மற்றும் வளர்ச்சிக்கான இடத்தை உருவாக்குவது பற்றிய கோட்பாடே!

முடிவில், நமது செயல்கள், நம் வாழ்க்கையில் யாரை அனுமதிக்கிறோம் என்பதைத் தெரிவுசெய்யவும், நம் நல்வாழ்வு பற்றிய முடிவை எடுப்பதற்கு நமக்குத்தான் அதிகாரமுள்ளது என்பதை உணர்த்துவதுமாகும்!

எல்லைகளை அமைப்பதன் மூலமும், நமது மன ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிப்பதன் மூலமும், அன்பு, நேர்மறை மற்றும் உள்ளமைதி நிறைந்த பிரகாசமான, ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு வழி வகுக்கலாம்!

மனநிம்மதி வெளியிலிருந்து பெற்றுக் கொள்ளப்படக் கூடியதல்ல; அது தமக்குள்ளேயே உருவாக வேண்டும். அதற்கு ஏற்ற வகையில் எண்ணங்களையும்,  மனப்பாங்குகளையும், நடத்தைகளையும் மாற்றிக்கொள்ள வேண்டும்.
பிறருடைய நடத்தைகளும், வார்த்தைகளும் எமது மன அமைதியைக் கெடுக்க ஒரு போதும் இடம் கொடுக்கக் கூடாது! அதனால், எமது மன அமைதியைக் கெடுக்கும் செய்திகளைச் சுமந்துகொண்டு வருபவர்களைத் தவிர்த்துக் கொள்வது அவசியம்!

குடும்பத்திலிருந்தும், சமூகத்திலிருந்தும் எமை நோக்கி வீசப்படும் நோவினை செய்கின்ற அல்லது மனதைப் பாதிக்கின்ற வார்த்தைகளை நாம் புறக்கணித்து மறந்துவிட வேண்டும்;   அவற்றை ஒருபோதும் உள்ளத்தில் சுமந்து திரியக்கூடாது!

நிம்மதியான நித்திரை முக்கியம்; தேவையற்ற எந்தத் தகவலும் எம் மூளைக்குள் நுழைந்து விடாமல் தடுத்துக் கொள்வது மிக அவசியம்; அப்போதுதான் நிம்மதியாக நித்திரை கொள்ள முடியும்!

மற்றவர் மனதை வார்த்தைகளால் நோவினை செய்வதிலும், அதனை மீட்கவைத்து மனத்துன்பம் அனுபவிக்க வைப்பதிலும் சிலர் ஏதோ ஒருவகையில் சுயதிருப்தி காணவும், அதனை  மற்றவர் உள ஆரோக்கியத்தைக் கெடுக்கும் விடயமாகப்  பயன்படுத்த முனைவதும் உலகில் சர்வசாதாரணமாக நடக்கும் விடயமாகும். இதனை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. 

வினைவிதைத்தவன் வினை அறுத்துத்தானாக வேண்டும்!

எமக்கு மன நிம்மதியை வேறு எவரும் தர முடியாது; அதனை நாமாகத்தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும். எனவே மன நிம்மதியைப் பெரும் செல்வமாகக் கருதி, அதனைப் பேணிப் பாதுகாத்து சந்தோஷமாக வாழ்வோம்!

வைத்தியர் கைவிட்டுவிட்டார்  என்பதைப் புறந்தள்ளுங்கள்; இறப்பு என்பது இயற்கை சார்ந்த விடயம்; அதுவரைக்கும் மனிதன் வாழ்ந்துதான் ஆக வேண்டும்! 

மனிதர்களாகப் பிறந்த ஒவ்வொருவருமே இறப்பிற்காக வாழ்க்கையின் இறுதி நொடி வரை காத்திருக்க வேண்டியது கட்டாயமாகும்!

செம்மைத்துளியான்.


 



Post a Comment

0 Comments