புரோகோனிஷ் குமாரி ரெங்க்மா-20

புரோகோனிஷ் குமாரி ரெங்க்மா-20


வெளியுலக மனிதர்கள் கூட்டத்தில் இரண்டரக் கலந்துவிட்ட செரோக்கி நகரிலுள்ள உணவகங்கள், ஆடையணி விற்பனை நிலையங்கள், சினிமா அரங்கு, பூங்காவனம், இசைக் கச்சேரிகள் போன்ற சகல இடங்களுக்கும் இர்வினோடு போய் வருவான்! அவை ஒவ்வொன்றிலும் புதுப்புது அனுபவங்களை அவன் பெற்றுக் கொள்ளலானான்!

அவன் எப்போதும் தம் பழங்குடி சமூகத்தை நினைத்து வருந்திக் கொள்வதுண்டு! இந்த சமூகத்தை வெளியுலக மனிதர்களது நிலைக்குக் கொண்டுவர வழிகள் ஏதும் உண்டா என்ற கேள்வி அவனுக்குள் தொக்கி நிற்கும்!

வெளியுலகில் அலைந்து திரிந்த பின் செரோக்கியை மைதானத்துக்கு வெளியே அழைத்துவந்து,  மரவேர்களுக் கிடையில் ஒழித்து வைத்திருக்கும் பழங்குடி ஆடையை அணிவித்து, வனப்பகுதிக்குள் வழியனுப்பி வைப்பதை, இன்று வரை இர்வின் வழக்கமாக்கிக் கொண்டுள்ளான்!

இர்வின்  தான் வகுப்பறையில் கற்றவைகளை அவ்வப் போது செரோக்கிக்கும் சொல்லிக் கொடுப்பான். அதனாலேயே செரோக்கி ஆங்கிலம் பேசவும், மற்றவர் பேசுவதைப் புரிந்து கொள்ளவும் பழகிக்  கொண்டதோடு வெளியுலகம் பற்றியும் நன்றாகப் புரிந்து கொண்டான்!

இவ்வாறுதான் வெளியுலகும் - வனவுலகும் சேர்வது போன்று, அவர்களது நட்பும் ஒருசேரத் தொடர்ந்தது!

“ஹபிங்டன் இர்வின்”, பல்கலைக்கழகத் தேர்வை முடித்துக் கொண்டு தனது மேற்படிப்பு ஆய்வுக்காக “அமேசன்நதிக் கரை வாழ் பழங்குடிகள்” என்ற தலைப்பைத் தேர்ந் தெடுத்தான். 

தான் வனத்துக்குள் செல்வதற்கும், அங்குள்ள புதுமையான தகவல்களைத் திரட்டிக் கொள்வதற்கும் செரோக்கியின் உதவியைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையே அந்தத் தலைப்பை அவன் தேர்ந்தெடுக்க முக்கிய காரணமாக அமைந்தது!

அவனது நம்பிக்கைக்கு எவ்விதத்திலும் கலங்கம் ஏற்படாவண்ணம் அவ்வப்போது இர்வினை வனத்திற்கு அழைத்து வந்து, அவனுக்குத் தேவையான தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கு செரோக்கியும், அவனுடன் சேர்ந்து ரெங்க்மாவும் சளைக்காமல் உதவி வந்தனர்!

இர்வினுக்கென்று பழங்குடி ஆடை, அணிகளைத் தன் குகைக்குள் இரகசியமாக வைத்திருந்து அவற்றை அணிவித்தே வனத்துக்குள் அழைத்துச் செல்வான். 

வனப்பிரதேசப் பழங்குடிக் கிராமங்களுக்குள் நடமாடுகின்ற போதெல்லாம் வெளியுலகத்தான் என்று இர்வினை வனவாசிகள் ஒருபோதும் அடையாளம் கண்டு கொள்வதேயில்லை.

அந்தளவுக்கு அவனது முகத்தில் சாயங்கள் பூசி ஒரு வனவாசியாகவே அவனை ஒப்பனை செய்து விடுவதில் செரோக்கியும், ரெங்க்மாவும் திறமை கொண்டிருந்தனர்!

வெளியுலக மனிதர்களை நெருங்க விடாமல் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதில் பழங்குடி மக்கள் உறுதியாக இருக்கின்றனர் என்பதை செரோக்கி அறியாமலில்லை!

இர்வினோடிணைந்து வெளியுலகைக் காண்பதில் தான் மாத்திரமே தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்த செரோக்கிக்கு, அவ்வப்போது ரெங்க்மாவையும் அழைத்து வந்து காட்ட வேண்டும் என்ற எண்ணமும், விற்பனை நிலையங்களில், கண்ணாடிக் கூண்டுக்குள் அலங்கார ஆடைகள் உடுத்திய பொம்மைகளைக் காண்கின்ற போதெல்லாம் ரெங்க்மாவையும் அவ்வாறு அணிவித்து மகிழ்விக்க வேண்டுமென்ற நினைப்பும்  அவனுக்குள் வந்துபோகும்! 

எப்போதாவது ஒருநாள் ரெங்க்மாவை நகருக்கு அழைத்து வந்து - தான் நகருக்குள் சென்றுவந்த இடங்களுக் கெல்லாம் அழைத்துச்சென்று அவளைக் குசிப்படுத்த வேண்டுமென்று நினைத்துக் கொள்வான்!

(தொடரும்)


 



Post a Comment

Previous Post Next Post