ஆஹா ரோஹித் உள்ளிட்ட யாருக்குமே கிடைக்காத 2 பரிசை பெற்ற சிராஜ்.. அள்ளிக்கொடுத்த தெலுங்கானா அரசு

ஆஹா ரோஹித் உள்ளிட்ட யாருக்குமே கிடைக்காத 2 பரிசை பெற்ற சிராஜ்.. அள்ளிக்கொடுத்த தெலுங்கானா அரசு


ஐசிசி 2024  டி20 உலகக் கோப்பையை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வென்று வரலாறு படைத்தது.  வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற அந்தத் தொடரில் தோல்வியை சந்திக்காமல் அசத்திய இந்தியா இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தியது. அதனால் 17 வருடங்கள் கழித்து இந்தியா  டி20 உலகக் கோப்பை வென்றது மொத்த ரசிகர்களையும் கொண்டாட்டத்தில் ஆழ்த்தியது. 

அதே காரணத்தால் நாடு திரும்பிய இந்திய அணிக்கு மும்பையில் உள்ள கடற்கரை சாலையில் ரசிகர்கள் பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்தனர். அந்த அன்புக் கடலில் திறந்தவெளி பேருந்தில் பேரணியாக வந்து ரசிகர்களுடன் வெற்றியை கொண்டாடிய இந்திய அணியினருக்கு வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் பிசிசிஐ 125 கோடி பரிசாக வழங்கியது. இது போக மகாராஷ்டிரா அரசு இந்திய அணிக்கு 11 கோடி ரூபாயை பரிசாக அறிவித்தது. 

இந்நிலையில் தங்கள் மாநிலத்திலிருந்து சென்று இந்தியாவுக்காக டி20 உலகக் கோப்பை வெல்ல உதவிய முகமது சிராஜை தெலுங்கானா அரசு பாராட்டி கௌரவித்துள்ளது. குறிப்பாக நேற்று தெலுங்கானா மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியை சந்தித்த சிராஜ் வாழ்த்து பெற்றார். அப்போது இந்திய அணியின் ஜெர்ஸியை முதலமைச்சருக்கு முகமது சிராஜ் பரிசாக கொடுத்தார். 

அதைத் தொடர்ந்து முகமது சிராஜுக்கு ஒரு இலவச வீடு மற்றும் அரசு வேலை பரிசாக கொடுக்கப்படுவதாகவும் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி அறிவித்தார். மேலும் ஹைதராபாத் அல்லது தன்னுடைய வீட்டிற்கு அருகில் உள்ள பகுதியில் தகுதிக்கு தகுந்த அரசு வேலையை கொடுக்குமாறு சம்பந்தப்பட்ட நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி உத்தரவிட்டார். 

இந்த அறிவிப்பு தெலுங்கானா ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது. 

உண்மையில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோருக்கு கூட உலகக்கோப்பை வென்றதற்காக அரசு வேலை, வீடு போன்ற பரிசு கிடைக்கவில்லை. ஆனால் 2024 உலகக் கோப்பையில் லீக் சுற்றில் மட்டுமே விளையாடி அசத்திய சிராஜுக்கு மற்ற இந்திய வீரர்களுக்கு கிடைக்காத பரிசு கிடைத்துள்ளது என்றே சொல்லலாம். இருப்பினும் கடந்த 2023 ஆசிய கோப்பை ஃபைனலில் நெருப்பாக பந்து வீசிய சிராஜ் இலங்கையை 50 ரன்கள் சுருட்டி இந்தியா கோப்பை வெல்ல உதவினார்.

அதே போல 2023 உலகக் கோப்பையிலும் இலங்கையை 55 ரன்களுக்கு சுருட்டி இந்தியா வெற்றி பெறுவதற்கு உதவிய சிராஜ் தற்சமயத்தில் முதன்மை பவுலராக திகழ்கிறார். அதனாலேயே அவருக்கு இந்த பரிசுகளை கொடுத்து தெலுங்கானா அரசு கௌரவித்துள்ளது. இதைத் தொடர்ந்து இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிராஜ் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

crictamil


 



Post a Comment

Previous Post Next Post