உளறல் மன்னனாகிவிட்ட ஜோ அமெரிக்கத் தேர்தலில் களமிறக்கப்படுவாரா?

உளறல் மன்னனாகிவிட்ட ஜோ அமெரிக்கத் தேர்தலில் களமிறக்கப்படுவாரா?


எதிர்வரும் நவம்பர் 5ம் தேதி அமெரிக்காவில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது.

சுப்பர் செவ்வாயின்போது ட்ரம்ப், குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரானார். 

நீதிமன்றத்தில், குற்றவாளியாகக் கண்டறியப்பட்ட முதல் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியாக மற்றும் ஒரு குற்றவாளியாகிய முதல் பிரதான கட்சி வேட்பாளர் இவராவார்.

ஜோ பைடனும், டிரம்ப்பும் இரண்டாவது முறை ஜனாதிபதியாவதற்குக் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளனர்.

ட்ரம்ப்,  ஜனாதிபதி ஜோ பைடனுடன் புள்ளியியல் அடிப்படையில் உச்சத்தில் இருப்பதாகவும், தேர்தலை தீர்மானிக்கும் பல முக்கிய மாநிலங்களில் முன்னிலையில் இருப்பதாகவும் கருத்துக் கணிப்புக்கள் தெரிவிக்கின்றன.  

இந்நிலையில், அமெரிக்காவின் பென்ஸில்வேனியாவில்
நடைபெற்ற தேர்தல் பேரணியின்போது, டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிப்  பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அவரின் வலது காதருகே தோட்டா ஒன்று தாக்கிய நிலையில், பாதுகாப்புப் படையினர்  அவரைப் பாதுகாப்பாகக் கொண்டு சென்ற பின்னர், காயமடைந்த டொனால்ட் ட்ரம்ப் சிகிச்சையின் பின்,  வைத்தியசாலையிலிருந்து வெளியேறி விட்டார்.
டொனால்ட் ட்ரம்பை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் அவரின் ஆதரவாளர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், படுகாயமடைந்த இருவரின் உடல்நிலையும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் ஆல்லிஜெனி பொது மருத்துவமனையின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

டொனால்ட் ட்ரம்ப் நின்று கொண்டிருந்த மேடையில் இருந்து 130 மீற்றர் தொலைவில் அமைந்துள்ள ஒரு உற்பத்தியாலையின் கூரையிலிருந்து இந்த துப்பாக்கிதாரி  சுட்டுள்ளார். ​​  துப்பாக்கிதாரியை பார்த்த பேரணியில் பங்கேற்றவர்களில் ஒருவர், பாதுகாப்பு அதிகாரிகளிடம் இது தொடர்பில் கூறிய போதும் அவர்கள் அதனைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர்,  தோமஸ் மேத்யூ க்ரூக்ஸ் என்ற 20 வயது இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக நியூயோர்க் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

டொனால்ட் டிரம்ப் பிரசாரப் பேரணி நடாத்திய இடத்திலிருந்து 40 மைல் தெற்கேயுள்ள பெத்தேல் பூங்கா என்ற கிராமத்தில் வசிப்பவர் இவர் என்றும் குறித்த செய்திச் சேவை கூறுகிறது.

ரகசிய சேவையின் ஸ்னைப்பர்களால் இளைஞன் சுட்டுக் கொல்லப்பட்டு, தொடர்ந்து நடர்ந்த தேடுதலின்போது, ​​அவரது உடலுக்கருகில் காணப்பட்ட துப்பாக்கி மற்றும் சில தஸ்தாவேஜுகளைக் கொண்டு இளைஞன் இனங்காணப் பட்டுள்ளார்.

இதேவேளை அமெரிக்க ஜனாதிபதிகள் மற்றும்  வேட்பாளர்கள் சுடப்படுவது இது முதல் தடவையல்ல; இதற்கு முன்னர் அமெரிக்காவில் இதுபோன்று பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

1865ல் ஆபிரகாம் லிங்கன், 1901ல் வில்லியம் மெக்கின்லே, 1912ல் தியோடர் ரூஸ்வெல்ட், 1933ல் பிராங்க்ளின் டி ரூஸ்வெல்ட், 1963ல் கென்னடி மற்றும் ராபர்ட் எப்.கென்னடி, 1972ல் ஜார்ஜ் வாலஸ், 1975ல் ஜார்ஜ் போர்ட், 1981ல் ரொனால்டு ரீகன் போன்றோர்களும் வரலாற்றில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

நவம்பர் 5ம் தேதி நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசு கட்சி வேட்பாளர்கள் நேருக்கு நேர் மோத உள்ள நிலையில், ஜனநாயக கட்சி வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோ பைடனும், குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் களமிறங்கவுள்ளதாக இருந்தபோதிலும், அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் நேரடி தொலைக்காட்சி விவாதத்தில் மோதியதையடுத்து, ஜோ பைடன் களமிறக்கப்படலாம் என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. 

CNN ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கியுள்ள ஜோவையும், ட்ரம்பையும் வைத்து இரண்டு நேரடி விவாதங்களை நடத்தியது.
முதல் விவாதம் நடைபெற்றபோது, இருவரும் கைகுலுக்கிக் கொள்ளவில்லை;  அமைதியாகத் தொடங்கிய விவாதம் ஒரு கட்டத்தில் உக்கிரமடைந்தது. இருவரும் தனிப்பட்ட தாக்குதலில் இறங்கினர். பைடன் பேசும்போது அவ்வப்போது உளறினார்! 

விலைவாசி உயர்வு, பொருளியல், அமெரிக்கர்களுக்கான சமூகப் பாதுகாப்பு, உக்ரேன்- பாலஸ்தீனப் போர்கள், பருவநிலை மாற்றம் முதலிய அம்சங்கள் குறித்து அவர்கள் விவாதித்தபோதிலும், பைடனின் பேச்சில் உளறல்களையும், அர்த்தமற்ற பதில்களையுமே பார்க்க முடிந்தது.

அதனால், பைடனின் கட்சி வேறொருவரை களமிறங்கினாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. அது ஒருபோதும் கமலா ஹரீஸாக இருக்க வாய்ப்பில்லை; சிலவேளை மிச்செலாக இருக்க அதிக வாய்ப்பு உள்ளதாக ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டு வருகின்றனர்!
ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்பிற்கு எதிராக ஜோ பைடன் போட்டியிடகூடாது என பெரும்பான்மையான ஜனநாயக கட்சியினர் கருதுகின்ற நிலையில், பைடனுக்குப் பதிலாக மிச்செல் ஒபாமா போட்டியிட வேண்டுமென கட்சியினரில் அதிகமானோர் விரும்புவதாகக் கருத்துக்கணிப்பிலிருந்து தெரிய வந்துள்ளது!

செம்மைத்துளியான்



 



Post a Comment

Previous Post Next Post