புரோகோனிஷ் குமாரி ரெங்க்மா-24

புரோகோனிஷ் குமாரி ரெங்க்மா-24


“நூறு வருடங்களுக்கு முன்பு ஒருகாலத்தில் அவுஸ்திரேலியப் பகுதியிலிலிருந்து சிறு வள்ளம் ஒன்றில் ஒரு கூட்டம் அமேசான் நதிக்கு உல்லாசப் பிரயாணம் வந்துள்ளது.

நதிக்கரையில் இறங்கி தமது கூடாரங்களை அமைத்து உணவு சமைத்துக் கொண்டிருந்தபோது,  குழந்தை  ஒன்று காணாமற்போயுள்ளது.

எங்கு தேடியும் குழந்தை கிடைக்கவில்லை. 

மற்றவர்கள் குழந்தையைக் காட்டினுள் தேட, அவர்களுள் ஒருவர் படகொன்றில் சென்று அவுஸ்திரேலியாப் போலீசாருக்கு அறிவித்ததும், ஆதிக்குடியினர் ஒருவரை பொலிசார் அமேசான் பகுதிக்குக் கூட்டி வந்துள்ளனர். 

அவர் வேறுயாருமல்ல, எனது பூட்டன். அவர் குழந்தை கடைசியாக இருந்த இடத்தைக் கேட்டறிந்தபோது, அந்த இடத்திலிருந்து குழந்தை நடந்து சென்றதற்கான எந்தக்காலடி அடையாளமும் தென்படவில்லை.

காரணம், அது இலையுதிர் காலம். தரையோ ஈரமாகி இறுகிப் போயிருந்தது. நிலத்தில் புளுதி இருக்கவில்லை. அதனால் காலடி எதுவுமே அந்தப்பகுதியில் தென்படவில்லை.

எனினும் பூட்டன் மூச்சை அடக்கிக் கொண்டு குழந்தை கடைசியாக இருந்த இடத்தில் குப்புறப் படுத்துள்ளார். 

பின் அங்குமிங்குமாகச் சிலதூரம் முகர்ந்து பார்த்துவிட்டு, அப்பக்கமும் இப்பக்கமும் எழுந்து ஓடி, இறுதியில் ஒரு பாதையைக் கண்டு பிடித்து அவ்வழியே நடந்து சென்றுள்ளார். 

பொலிசாரும் குழந்தையின் பெற்றோரும் அவரைப்பின் தொடர்ந்துள்ளனர். நெடுந்தூரம் நடந்துசென்ற பிறகு ஏதோ முறிந்து விழுந்திருந்த மரக்கிளை தென்பட்டுள்ளதாம். அவர் காட்டிய திசையில் பார்வையைச் செலுத்திய பொலிசாரும் பெற்றோரும் அதிசயித்துள்ளனர். 

காரணம் அங்கே ஒரு புதருக்குள் அந்தக் குழந்தை துவண்டு கிடந்துள்ளது.  தொடர்ந்து அவர் ஓடிச்சென்று அந்தக் குழந்தையின் வாயில் தன் மூக்கை வைத்துவிட்டு மறுகணம் எழுந்துபோய் காட்டின் நாலாபுறத்திலும் தேடி ஏதோ ஒரு காட்டுக்காயை எடுத்துவந்து, அங்கிருந்தவர்களிடம் கொடுத்துள்ளார்.

ஈற்றில் அந்தக் குழந்தை முறிந்து விழுந்திருந்த மரக்கிளையிலிருந்த நஞ்சுக்காயைச் சாப்பிட்டதால் மயக்கமடைந்துள்ளது என்பதைப் புரிந்துகொண்டனராம். பூட்டன் தேடிக்கொண்டு வந்து குழந்தைக்குக்கொடுத்த வேறொரு வகையான மூலிகைக்காய் குழந்தையைச் சுயநினைவுக்குக் கொண்டு வந்துள்ளதாம். குழந்தை பிழைத்துக் கொண்டது.”

அதனை எடுத்துக்கொண்டு பூட்டனைக் காட்டில் நிர்க்கதியாக விட்டுவிட்டு அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனராம்!” என்று கூறி முடித்தாள் ரெங்க்மா.

அவளிடமிருந்த அறிவுகூர்மை, தூரவிலகியிருந்தவளை 
நெருங்கி அழைக்கவைத்தது. அவனை நெருங்கிய அவள்,

“எனது தந்தையின் பரம்பரையினர் நீண்ட தூரத்திலிருக்கும் எந்தப் பொருளின் மீதும் குறி தவறாமல் அம்பு எய்வதில் விண்ணர்கள். காலடியைப் பார்த்தே என்னமிருகம் என்பதையும், அதன் வயது, அளவு, உடலின் பருமன், அது செல்லும்வேகம், அது பசியுடனிருக்கிறதா,ஓய்வெடுக்கிறதா என்பவற்றையெல்லாம் சொல்லிவிடுவார்கள். இவர்கள் வேட்டையாடச் செல்லும்போது தமது மோப்ப  சக்தியையும் பார்வைக் கூர்மையையும் நன்கு பயன்படுத்திக் கொள்வார்கள்”என்று கதைக்கு முடிவுரை கூறிமுடித்தாள் ரெங்க்மா.

தூரத்தே செக்கச் சிவந்த சூரியன் மெதுவாக மறைந்து கொண்டிருந்தது; அவர்களும் எழுந்து கொண்டார்கள்!

வனத்துக்கு வெளியே அழகான ஓர் உலகம் இருப்பதாகவும் அங்கு ஒருமுறை தான் சென்றுவந்த விபரத்தையும் அவன் அவளிடம் கூறினான். 
எப்போதாவது ஒருநாள் அவளையும் அங்கு அழைத்துப் போவதாக உறுதிமொழி கொடுத்தபடி அவர்கள் நடந்து கொண்டிருக்கும்போது, தூரத்திலிருந்து இரண்டு கண்கள் நோக்கிக்கொண்டிருந்ததை அவர்கள் அறியவில்லை!  

(தொடரும்)



 



Post a Comment

Previous Post Next Post