கேரளா - வயநாடு நிலச்சரிவின் பலி எண்ணிக்கை 405!

கேரளா - வயநாடு நிலச்சரிவின் பலி எண்ணிக்கை 405!


கேரளா - வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் ஒரு வாரம் கழிந்யுவிட்ட நிலையில்,  இன்றும் தொடர்கின்றன.

இதுவரையில் 405 பேர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதேநேரம், மேலும் 240 பேருக்கம் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர். அவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தியாவின் கேரளா மாநிலம், வயநாட்டில் கடந்த ஜூலை மாதம்  29ம் திகதி கொட்டித்தீர்ந்த கனமழை காரணமாக வயநாடு மாவட்டத்தில் மலைப்பகுதியில் அமைந்துள்ள  முண்டக்கை, சூரல்மாலா, அட்டமாலா மற்றும் நூல்புழா போன்ற குக்கிராமங்களைத் தாக்கி மண் சரிவை ஏற்படுத்தியதில் பெண்கள், குழந்தைகள் உட்பட பலர் உயிரிழந்தனர். இம்மாநிலத்தில் பல பகுதிகளில்  நிலச்சரிவுகள் ஏற்பட்டு, கட்டடங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. பல கட்டடங்கள் மண்ணில் புதைத்தன.

நள்ளிரவு வேளையில் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்த போது, அடுத்தத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டதில் பலநூறு குடும்பங்களை சேர்ந்தவர்கள் மண்ணில் புதைந்து போயினர். 
கட்டட இடிபாடுகள், மணல் குவியல்களுக்குள் சிக்கியவர்களை மீட்கும் முயற்சிகள் நடைபெற்று வரும் நிலையில் இன்று வெளியான அறிவிப்பில் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 405 பேர் பலியானதாகவும், தொடர்ந்து அங்கு மீட்பு மற்றும் நிவாரண பணிகள் நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

உயினுடன் காப்பாற்றப்பட்ட 200த்திற்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வீடுகள் இடிந்து விழுந்தும், மரங்கள் வேறோடு சாய்ந்தும், தொடர் கனமழை போன்ற காரணங்களால் மீட்பு பணிகள் இன்னமும் முடிவுக்கு வராத சூழல் நிலவுகிறது.

மேலும், நிலச்சரிவில் புதைந்தவர்களை தேடுவதற்கு தெர்மல் ஸ்கேனர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன்போது, சேறு, சகதிகளில் யாரேனும் சிக்கி இருந்தால் அதனை ஸ்கேனர் காட்டிக் கொடுக்கும். 

நிலச்சரிவில் உயிரிழந்தவர்கள் உடல் பாகங்கள் சிதைந்து இருப்பது, மண்ணோடு மண்ணாக பலர் புதைந்து உயிர்போனது, உறக்கத்தில் பலர் உயிரைவிட்டது என வயநாடு முழுக்க மரண ஓலம் இப்போதும் ஒலித்துக் கொண்டுதான் இருக்கின்றது. இந்நிலையில், இந்த இயற்கை அசம்பாவிதம் தேசிய பேரிடராக அறிவிக்கப் பட்டுள்ளது.

தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர், கேரள பொலிஸார் தீயணைப்பு படையினர் ஆகியோருடன் இராணுவம் கடற்படை விமானப்படை ஆகிய முப்படை வீரர்களும் களமிறங்கி மீட்பு பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
வயநாடு பகுதியில் ஏற்பட்ட பாரிய நிலச்சரிவில் சிக்கி இரண்டு இலங்கை தமிழர்களும் உயிரிழந்துள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலச்சரிவில் தங்கள் சொத்துக்களை இழந்து நூலிழையில் உயிர் பிழைத்தவர்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. 

அந்த வகையில் இதுவரை உயிர் பிழைத்தவர்கள் சுமார் 200 பேருக்கு தனிநபர் மனநல ஆலோசனைகளும்,  42 குழுக்களுக்கு பொது மனநல ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளன.

முதல்வர் பினராய் விஜயன் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், பேரிடரில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

விஜயன் கூறுகையில், "மாவட்டத்தின் முண்டக்கை, சூரல்மலை பகுதிகளில் உள்ள காட்சிகள் பேரழிவை ஏற்படுத்துகின்றன. இவ்விரு பகுதிகளும் முற்றாக அழிந்துள்ளன" எனவும் குறிப்பிட்டார்.

பேரிடர் வலயத்தில் இருந்து முடிந்தவரை பலரை மீட்கும் முயற்சிகள் சிறப்பாக நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
“இரண்டு நாள் மீட்புப் பணியில், 1,592 பேர் மீட்கப்பட்டனர். குறுகிய காலத்தில் பலரைக் காப்பாற்ற ஒருங்கிணைந்த மற்றும் விரிவான பணியின் சாதனை இது” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

அதே சமயம் நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதையுண்ட மக்களை தேடும் பணி மேலும் தொடர்ந்து வருவதால் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது.


செம்மைத்துளியான்



 



Post a Comment

Previous Post Next Post