பிரித்தானியாவில் தொடரும் கலவரங்கள்! முஸ்லிம்களும், மசூதிகளும் இலக்கு வைப்பு; தமிழர் கடைகள் உடைப்பு!

பிரித்தானியாவில் தொடரும் கலவரங்கள்! முஸ்லிம்களும், மசூதிகளும் இலக்கு வைப்பு; தமிழர் கடைகள் உடைப்பு!


இப்போதைய சூழ்நிலையில், பிரித்தானியாவுக்குச் செல்ல வேண்டாமென கனடா, சுவிட்சர்லாந்து, மலேசியா, அவுஸ்திரேலியா. நைஜீரியா, மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகள் தத்தமது குடிமக்களை எச்சரிக்கும் நிலை உருவாகியுள்ளது.

பிரித்தானியாவின் சில தீவிர வலதுசாரிக் குழுக்கள் ஏற்கனவே, அரசியல்வாதிகள், புலம் பெயர்ந்தோர் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்கள் மீது வெறுப்பை மட்டுமே அள்ளிக் கொட்டிக் கொண்டிருந்த நிலையில், இப்போது அந்த வெறுப்பு வெடித்து, தஞ்சக் கோரிக்கை மையங்கள் மற்றும் குடியேற்றவாசிகளுக்கு உதவும் சட்ட நிறுவனங்களை இலக்கு வைத்து தீவிர வலதுசாரி குழுக்கள் நாடெங்கும் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. 

இதனால், புலிடக்கோரிக்கையாளர்களும், புலம் பெயர்ந்தோர் சமுதாயங்களைச் சேர்ந்தவர்களும் பயந்து வீடுகளுக்குள் பதுங்கும் நிலையை ஏற்பட்டுத்தியுள்ளது.  

சவுத்போர்ட் பகுதியில் கடந்த ஜூலை 29ம் திகதி நடந்த கொடூரக் கத்திக்குத்து சம்பவம் ஒன்றின்போது, சிறுவர்களுக்கான கோடைகால முகாம் ஒன்றில் கலந்து கொண்ட, முறையே 6,7,9 வயதுகள் கொண்ட பெபே ​​கிங்,  எல்சி டாட் ஸ்டான்காம்ப், மற்றும் ஆலிஸ் டாசில்வா அகுயார் என்ற மூன்று சிறுவர்கள் பரிதாபமாக கொல்லப்பட்டனர்.
அலெக்ஸ் றுடாகுபானா (Axel Rudakubana)என்ற ருவண்டா பெற்றோருக்குப் பிறந்த 17 வயது சிறுவன் நடத்திய இந்த வன்முறைத் தாக்குதல் சம்பவத்தில் எட்டு சிறுவர்கள் காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், அவர்களுள் ஐந்து பேர் மிகவும் மோசமான உடல்நிலை காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வடகிழக்கு பிரிட்டனின் சவுத்போர்ட் பகுதியில் ஒரு நடனப் பள்ளி சிறுமிகள் மூவரே இவ்வாறு கத்தியால் குத்திக் கொல்லப்பட்டனர்.

இதனைச்  செய்தது ஒரு இஸ்லாமியர் என்றும், அவர் இங்கிலாந்தில் அகதியாகக் குடியேறியவர் என்றும், அவர் ஓர் மசூதிக்குள் தஞ்சம் புகுந்திருப்பதாகவும் பொய்த் தகவல்கள் பரப்பப் பட்டுள்ளன.

வடமேற்கு இங்கிலாந்தில் உள்ள கடலோர நகரமான சவுத்போட்டில் நடந்த விருந்தின்போது, கத்திக்குத்து சம்பவத்தில் ஈடுபட்டவர் தொடர்பில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டதால், இக்கலவரம் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.

இத்தாக்குதலில் ஈடுபட்டவர் இங்கிலாந்துக்கு வந்துள்ள ஒரு அகதி என்ற பொய்யான தகவல்களைத் தீவிர வலதுசாரிகள் சமூக ஊடகங்களில் பரப்பியதன் விளைவாகவே  இந்தக் கலவரங்கள் வெடித்தன.

இங்கிலாந்தில் 2009ம் ஆண்டில் தொடங்கப் பட்டுள்ளன, "இங்கிலீஷ் டிஃபென்ஸ் லீக்" என்ற இஸ்லாமிய எதிர்ப்பு அமைப்பே இந்த வன்முறைக்குப் பின்னால் இருப்பதாக காவல்துறை நம்புகிறது.

இப்போராட்டம், ஆங்காங்கே வன்முறையாக மாறி, ஒட்டுமொத்த பிரித்தானியாவிலும் கலவரங்களாக வெடிக்கலாயின.

இதனையடுத்து நாட்டில் பல்வேறு மசூதிகள் சூறையாடப்பட்டன. குறிப்பாக பெல்ஃபாஸ்ட், வடக்கு அயர்லாந்து பகுதிகளில் பதட்டமான சூழல் நிலவியது. ஒரு சுப்பர் மார்க்கெட் தீக்கிரையாக்கப்பட்டது.  காவல்துறை மீதும்   பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன; கல்வீச்சு சம்பவங்களும் நடந்தன.

BBC செய்திகளின் தகவல்படி வன்முறை வெடித்ததிலிருந்து இதுவரை 400 பேருக்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 100 பேருக்கு அதிகமானோர் விசாரணைக்கு உட்படுத்தப் பட்டுள்ளனர். 


இந்த நிலையில், வன்முறை தொடர்பாக பிரித்தானியாவின் புதிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், 'கோப்ரா' அவசர ஆலோசனைக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தார்.

பிரித்தானியாவில் சுமார் 12 மிக முக்கிய நகரங்களில் பெரும் கலவரம் ஏற்பட்டுள்ளது. இதனை அடக்க பொலிசார் ஈடுபடுத்தப் பட்டனர்.  குறிப்பிட்ட இனவாத அமைப்பு இந்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தவுடன், இது கலவரமாக மாறியுள்ளது.

கடைகளை சூறையாடுவது , வாகனங்களை எரிப்பது மட்டுமன்றி, "பிரித்தானியா வெள்ளையின ஆங்கிலேயர்களுக்கே சொந்தம்" என்றும் கோஷம் எழுப்பி வருகின்றனர்.

தமது பிரதேசத்தில் உள்ள வேற்றின மக்களின் சொத்துக்களையும் இவர்கள் நாசம் செய்து வருகிறார்கள். குறிப்பாக சில தமிழர்களின் கடைகள் கூட எரிக்கப்பட்டுள்ளன; வூல்-விச் மற்றும்  பெக்ஹம்  போன்ற இடங்களில்  தமிழருக்குச் சொந்தமான கடைகளும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.

டவுனிங் தெருவில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை பொலிஸார் கட்டுப்படுத்த முற்பட்ட நிலையில் அப்பகுதியிலும் பாரிய கலவரம் மூண்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வீதிகளில் திரண்ட போராட்டக்காரர்கள் பொலிஸாருடன் மோதலில் ஈடுபட்டுள்ளதுடன் இதனால் அப்பகுதியில் பரபரப்புநிலை ஏற்பட்டுள்ளது.

புகலிடக் கோரிக்கையாளர் தங்கியிருந்த ஹோட்டல்களை இலக்கு வைத்து தீவிர வலது சாரிக் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து பிரித்தானியாவின் பல நகரங்களில் போராட்டங்களும் முன்னெடுக்கப் பட்டுள்ளன.

13 வருடங்களுக்கு பின்னர் ஐக்கிய இராச்சியம் மோசமான கலவரங்களை தற்போது எதிர்கொண்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் மோதல்களில் ஈடுபட்ட நூற்றுக் கணக்கானோர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், கலவரத்தில் ஈடுபட்ட அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என பிரித்தானிய பிரதமர் சேர் கேர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.

அகதிகள் குடியேற்றத்திற்கு எதிரான உள்ளூர் மக்களின் போராட்டம் இப்பொழுது சவுத்போர்ட், ரூதர்ஹம் உள்பட பல்வேறு நகரங்களிலும் பரவி வருகிறது. குறித்த பிரதேசங்களில் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்கும், போலீசாருக்குமிடையே மோதல் ஏற்பட்ட மோதல்களில் 10 போலீசார் காயமடைந்துள்ளனா்.

பிரித்தானியாவில் நாடு தழுவிய நிலையில் கலவரங்கள் வெடித்துள்ள நிலையில், பொலிஸார் வீடு வீடாக சென்று ஆர்ப்பாட்டக்காரர்களைக் கைது செய்தும் வருகின்றனர்.

பிரித்தானிய நகரங்களில், தீவிர வலது சாரிகளின் கலவரங்களைக் கட்டுப்படுத்த 6000 சிறப்புப் போலீஸ் படையைத் தயார் நிலையில் அரசு வைத்துள்ளது.

அத்துடன் கலவரக்காரர்களை அடைப்பதற்காக 500 சிறைச்சாலை இருப்பிடங்களை கூடுதலாக விடுவித்திருப்பதாக பிரித்தானிய நீதி அமைச்சர் ஹெய்டி எலெக்ஸாந்தர் (Heidi Alexander) BBC ரேடியோவுக்குத் தெரிவித்துள்ளார். 

பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் மீண்டும் நேற்றிரவு அவசர 'கோப்ரா' கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இது உள்நாட்டு அமைதியின்மை, வெள்ளம் போன்ற அவசர சூழ்நிலைகளை கையாளுவதற்கான ஒன்று கூடல் இடமாகும்.  

பிரித்தானியாவில் புதிய அரசாங்கம் அமைந்த குறுகிய காலத்துக்கள் கூட்டப்படும் இரண்டாவது 'கோப்ரா' இதுவென்பது குறிப்பிடத்தக்கது!

ஆக மொத்தத்தில், காலாகாலமாய் வெறுப்பை சேமித்துவைத்திருந்து, வன்முறைக்காகக் காத்திருந்த ஒரு கூட்டம், கலவரத்தைக் கட்டவிழ்த்து விட்டதால், உலக அரங்கில் மொத்த பிரித்தானியாவும் அவமானத்தில் தலைகுனிந்து நிற்கிறது!

செம்மைத்துளியான்



 



Post a Comment

Previous Post Next Post