எதிர்கால இலங்கையை சீர்படுத்த தேர்தல் களத்தில் குதித்துள்ள அநுரகுமார!

எதிர்கால இலங்கையை சீர்படுத்த தேர்தல் களத்தில் குதித்துள்ள அநுரகுமார!


இலங்கையின் முதலாவது ஜனாதிபதித் தேர்தல் 1982ம் ஆண்டு ஒக்தோபர் 20ம் திகதி நடந்தது. ஆறு வேட்பாளர்கள் போட்டியிட்ட இத்தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் ரோஹண விஜேவீர போட்டியிட்ட சந்தர்ப்பம், அக்கட்சியின் முதல் தேர்தல் அனுபவமாகக் கொள்ளப்படுகின்றது.

பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று ஜே. ஆர். ஜயவர்தன ஜனாதிபதியான இத்தேர்தலில்,  ரோஹண விஜேவீர  273,428 வாக்குகள் பெற்றதன் மூலம், குமார் பொன்னம்பலம், கொல்வின் ஆர்.டி. சில்வா, வாசுதேவ நாணயக்கார ஆகிய மூவரையும் பின்னுக்குத் தள்ளி மூன்றாம் இடத்திற்கு வந்தார். ஜே.வீ.பீ. கட்சியின் எழுச்சி இத்திருப்புமுனையிலிருந்து தான் ஆரம்பமானது.


1983 கறுப்பு ஜூலை வன்செயல்களை அடுத்து, J.R. ஜெயவர்தன அரசாங்கத்தினால் ஜே.வீ.பீ. தடைசெய்யப்பட்டதற்குப் பிறகு, இக்கட்சி தேர்தலில் மீண்டும் 1994ம் ஆண்டில் போட்டியிட முனைந்தது!

1994ம் ஆண்டு நவம்பரில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையிலான பொதுஜன முன்னணியின் வேட்பாளர் திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு எதிராக ஜே.வி.பி. அதன் பிரதான உறுப்பினர்களுள் ஒருவரான நிஹால் கலப்பதியைக் களமிறக்கியது.

இருந்தபோதிலும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிப் பதவிமுறையை ஒழிப்பதாக மக்களுக்கு வாக்குறுதியளித்ததன் காரணமாக ஜே.வீ.பீ.  திருமதி குமாரதுங்கவை ஆதரிக்கத் தீர்மானத்ததையடுத்து கலப்பதி போட்டியிலிருந்து விலகியபோதிலும், அவரின் நியமனப்பத்திரம்  வாபஸ் பெறப்படாதால், அவரது பெயரும் சி்ன்னமும் வாக்குச் சீட்டில் இடம்பெற்றிருந்தது; அதனால் அவருக்கு 22749 வாக்குகள் கிடைத்திருந்தன.

அதன் பிறகு, 1999 டிஸம்பரில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் தனது இரண்டாவது பதவிக் காலத்துக்கான மக்கள் ஆணையைக் கேட்ட திருமதி குமாரதுங்கவை எதிர்த்து ஜே.வீ.பீ. வேட்பாளராகப் போட்டியிட்ட நந்தன குணதிலக 344173 வாக்குகள் மட்டுமே பெற்றார்.

2005ம் ஆண்டு நவம்பர் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஜே.வீ.பீ. கட்சியானது, சுதந்திரக் கட்சி தலைமையிலான, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளரான மஹிந்த ராஜபக்‌ஷவையும், 2010ம் ஆண்டு ஜனவரியில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு எதிராகக் களமிறங்கிய எதிரணியின் பொதுவேட்பாளரான, முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவையும், அதேபோன்று, 2015ம் ஆண்டு ஜனவரியில் நடந்த  ஜனாதிபதித் தேர்தலில் புதிதாக மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு எதிராகக் களமிறக்கப்பட்ட, எதிரணியின் பொதுவேட்பாளரான மைத்திரிபால சிறிசேனாவையும் ஆதரித்தது!

ஜே.வீ.பீ., கடந்த காலத்தில் அனைத்து முதலாளித்துவக் கட்சிகளுடன் இணைந்து, அரசாங்கங்க கூட்டணிகளில் நுழைந்ததால் பொதுவாகவும்,  2009 மே மாதம் முடிவடைந்த 26 ஆண்டுகால தமிழர்-விரோத இனவாதப் போரில் முன்னணியில் செயல்பட்டதாலும் தமிழ் மக்களால் விமர்சிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அநுரகுமார திஸாநாயக்க, 2009க்குப் பின்னரான ராஜபக்‌ஷ யுகத்தில், ஊழலையும் இனவாதத்தையும், அடக்குமுறையையும் கண்டித்து வந்திருந்தாலும், அடிப்படையில் “யுத்த வெற்றி”க்கு அவரும் அவரது கட்சியும் ஆதரவானவர்களாவர்.

1983ம் ஆண்டு வன்செயலைத் தொடர்ந்து,  தமிழர்களுக்கு அங்கீகாரத்தை வழங்கும் வகையில் இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கும், ஜே.ஆர்.ஜெயவர்தனவுக்கும் இடையில் மாகாண சபைகளை உருவாக்கு வதற்கான ஒப்பந்தம் 1987ம் ஆண்டு கைச்சாத்திடப்பட்டது.

தமிழர்களுக்கான காணி, போலீஸ் அதிகாரங்களை மாகாணங்களுக்கு உள்வாங்கும் வகையில் வடக்கு, கிழக்கை இணைத்து மொத்தமாக 9 மாகாணங்கள் இந்த ஒப்பந்தத்தினூடாக உருவாக்கப்பட்டன.


இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் இலங்கை முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன ஆகியோருக்குமிடையில் 1987ம் ஆண்டு ஜுலை மாதம் 29ம் தேதி இந்த 13வது திருத்தச்சட்ட உடன்படிக்கை அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்ளும் வகையில் கைச்சாத்திடப்பட்டது.

இந்த மாகாண சபை முறையினூடாக, காணி மற்றும் போலீஸ் அதிகாரங்கள் மாகாண சபை வசமாகின்றன. எனினும், மத்திய அரசாங்கம் இன்று வரை மாகாண சபைகளுக்கு அந்த அதிகாரங்களை வழங்காதிருக்கின்றது.

இலங்கையில் தமிழ் மொழி பேசும் சமூகம், நாட்டின் ஏனைய பகுதிகளில் கலந்து காணப்படுகின்ற போதிலும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பெரும்பான்மை சமூகமாக வாழ்ந்து வருகின்றனர்.

எனினும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தனித்தனி மாகாணங்களாக இருக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி 2006ம் ஆண்டு இலங்கை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இதன்படி, அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவினால், வடக்கு கிழக்கு இணைப்புச் சட்டமானது, சட்டவிரோதமானது என உயர்நீதிமன்றம் 2007ம் ஆண்டு தீர்ப்பு வழங்கி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இரண்டாக பிரித்து உத்தரவு பிறப்பித்தது.

அரசியலமைப்பிலுள்ள மாகாண சபை முறைமையை அமல்படுத்துமாறு தமிழர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வந்தபோதிலும், இன்று வரை அதனை நடைமுறைப்படுத்துவதற்கான அனுமதியை வழங்க மத்திய அரசாங்கம் தவிர்த்து வருகின்றது.

வரலாற்று ரீதியாக அரசமைப்புச் சட்டத்தின் 13வது திருத்தத்தை, ஜே.வி.பி. எதிர்த்தே வந்திருக்கின்றது; அது இந்தியாவால் திணிக்கப்பட்ட தீர்வு என்பதால் வந்த எதிர்ப்பல்ல. மாறாக அது, “சிங்கள-பௌத்த” தேசியவாதத்தை ஜே.வி.பி தீவிரமாக முன்னிறுத்திய காலகட்டத்தில், இந்த அதிகாரப் பகிர்வும் ஊறு விளைவிக்கின்றன என்ற அடிப்படையில் எழுந்த எதிர்ப்புத்தான்.

மத்திய அரசின் வேலைப்பளுவைக் குறைத்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதுதான் இந்த 13வது அரசியலமைப்பின் அடிப்படைக் கொள்கையாகும். இலங்கையில் வாழுகின்ற ஒட்டுமொத்த சிறுபான்மை மக்களுக்கும் 13வது அரசியலமைப்பு அவசியம் என்று எதிர்பார்க்கின்ற நிலையில், இதுபற்றிய தேசிய மக்கள் சக்தியின் கருத்தில் தெளிவற்ற நிலை காணப்படுவதாகக் கூறப்படுகின்றது!

ஜே.வி.பி.யால் 2015ம் ஆண்டில் தேசிய மக்கள் சக்தி உருவாக்கப்பட்டது. கல்வியாளர்கள், தொழிலறிஞர்கள், சில கலைஞர்கள், சிறு வணிகர்கள் மற்றும் சிவில் சமூகக் குழுக்கள் என அழைக்கப்படுபவை, பௌத்த பிக்குகள், ஜே.வி.பி. மற்றும் அதனுடன் இணைந்த அமைப்புக்கள் உட்பட பல அமைப்புகளின் கூட்டணியாக இது உருவானது.

இறுதியாக,  2019ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டபாய ராஜபக்‌ஷவை எதிர்த்து, ஜே.வீ.பீ.யின் புதிய பதிப்பான தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளராக அநுரகுமார திஸாநாயக்க போட்டியிட்டு, 418,553  வாக்குகளைப் பெற்று, மூவரைப் பின்தள்ளச் செய்து மூன்றாம் இடத்திற்கு வந்தார்.
இலங்கையில் தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் ஐந்து மாவட்டங்களையும், மலையகத்தின் நுவரெலியாமாவட்டத்தையும் தவிர்ந்த ஏனைய 16 மாவட்டங்களிலும் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று, கோட்டாபே ராஜபக்ஷ ஜனாதிபதியாகி, இரண்டு வருடங்கள் கூட நிறைவேறாத நிலையில், காலிமுகத் திடல் 'அரகலய' அமைப்பால் அவர் பதவியிழக்கச் செய்யப்பட்டார். 

நாடாளுமன்றத் தேர்தல்களைப் பொறுத்தவரை, ஜே.வீ.பீ. முதற்தடவையாக 1994 ஆகஸ்ட் தேர்தலில் போட்டியிட்டு மொத்தம் 90,078 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தையும்,  2000ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் 518774 வாக்குகளைப் பெற்று பத்து ஆசனங்களையும், 2001ம் ஆண்டு டிஸம்பரில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், 815353 வாக்குகளைப் பெற்று 16 ஆசனங்களைக் கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கதொரு விடயமாகும்!

1994ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில்  1.13 சதவீத வாக்குகளையும்,  2000ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில்  6.0 சதவீத வாக்குகளையும்,  2001ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் 9.0 சதவீத வாக்குகளையும் பெற்று, படிப்படியாக மக்கள் மனதைக் கவர்ந்து தேர்தல்களில் முன்னேற்றம் கண்டுவந்த தேசிய மக்கள் சக்தி; அதன் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, 2019ம் ஆண்டைய ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை   எதிர்த்துப் போட்டியிட்டபோது, 3.16 சதவீத வாக்குகளைப் பெற்று தேர்தல் களத்தில் அமோக முன்னேற்றம் கண்டு வந்தவர்.

அவர் இம்முறையும் ஜனாதிபதித் தேர்தலில்  களமிறக்கப் பட்டுள்ள நிலையில், ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச, விஜயதாச ராஜபக்ச, சரத் பொன்சேகா ஆகிய நல்லாட்சி அரசாங்கத்தில் வலிமையானவர்களாகச் செயற்பட்டவர்களையும் எதிர்த்துப் போட்டியிடுகின்றார். 

ரணில் விக்கிரமசிங்க நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமராகவும், சஜித் பிரேமதாச வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சராகவும்,  விஜயதாச ராஜபக்ச, நல்லாட்சி அரசாங்கத்தின் நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சராகவும், சரத் பொன்சேகா நல்லாட்சி அரசாங்கத்தின் வனவிலங்கு மற்றும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சராகவும் இருந்தவர்கள்.

நல்லாட்சி அரசாங்கத்தில்  ஊழல் எதிர்ப்புக் குழுவின் தலைவராக செயல்பட்ட  அனுரகுமார திஸாநாயக்க மேற்குறிப்பிட்ட நால்வருக்கும் சவாலாக இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கியுள்ளார். 
இப்போது வயது 56 ஆகின்ற நிலையில் உள்ள இவர், 1990ம் ஆண்டில் தனது இளைஞர் காலத்தில், சோசலிஸ அமைப்பில் இணைந்து செயல்பட்டுள்ளார்.

1992ம் ஆண்டில் களனி பல்கலைக் கழகத்தில் பயின்றுள்ள இவர், 1997ம் ஆண்டில் சோசலிஸ இளைஞர் அமைப்பின் தேசிய அமைப்பாளராகவும், மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய செயற்குழு உறுப்பினராக நியமனம் பெற்று, 2000ம் ஆண்டில் முதன்முறையாக நாடாளுமன்றத்துக்குத் தெரிவுசெய்யப்பட்டார்.

அநுரகுமார, 2004ல் அன்றைய ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகித்ததால், அக்கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றியபோது விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சராகப் பதவி வகித்தவராவார்.

2008ல், மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்றக் குழுத்தலைவராகத் தெரிவுசெய்யப்பட்ட இவர், 2014ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 2ம் திகதி நடைபெற்ற மக்கள் விடுதலை முன்னணியின், ஏழாவது தேசிய மாநாட்டின்போது, அக்கட்சியின் தலைவராகவும் ஆனார்.

"இலங்கையானது முன்னெப்போதுமில்லாத நிலையில் பொருளாதார சவால்களை எதிர்கொண்டுள்ள நிலையில், முன்னோக்கிச் செல்லும் அதன் பாதை எளிதானதல்ல; ஆனாலும் ஐக்கியத்துடன் புதியதொரு தொடக்கத்தை எம்மால் உருவாக்க முடியும்.  இலங்கை புத்துயிர் பெறுவதற்கு, தேசிய மறுமலர்ச்சிக்கான ஒரு கூட்டு முயற்சியில் என்னுடன் சேர உங்களை அழைக்கிறேன்" என்ற தொனிப் பொருளுடன் அநுரகுமார இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வரத்தை நாடி நிற்கின்றார்!

ஒருமைப்பாட்டுடனும், அசைக்க முடியாத அர்ப்பணிப்புடனும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டிய முக்கியமான பணியில் தன்னுடன் இணைவதன் மூலம் நாட்டில் இன்பகரமான ஒரு மாற்றத்தை உருவாக்க முடியும் என்பது அவரின் நம்பிக்கையாகும்.

நல்லாட்சியின் தோல்வியும், தொடராக இடம்பெற்ற சிறுபான்மையினர் மீதான அடக்குமுறைகளும், நாட்டில் நிலவிவரும் பொருளாதார பாதிப்புகள் உட்பட இன்னபல காரணிகளும் அநுரகுமார மீதான மக்கள் ஆதரவை அதிகரிக்க வைத்துள்ளது!

பேரினவாதக் கட்சிகளைப் பொறுத்தவரை தேசிய மக்கள் சக்தி ஓரளவேனும் சிறுபான்மை இனத்தவருக்கு பாதகமற்ற கட்சி என்பதில் பலருக்கு மாற்றுக் கருத்தில்லை. அதேபோன்று ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க மீதும் அவர்களுக்கு நம்பிக்கை உண்டு.

பெரும்பான்மை சிங்கள மக்களின் வாக்குகள் மூன்று அல்லது அதற்கு மேலாகப் பிரிகின்றபோது, சிறுபான்மையினரின் 25 சதவீதம் அனுரகுமாரவுக்கு அளிக்கப்படும் நிலை இருந்தால் மட்டுமே இவர் ஜனாதிபதியாகலாம்!

ஏழு தமிழர் கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு வேட்பாளரைக் களமிறக்கவுள்ளது. இதனால் அரனுரகுமாரவுக்குக் கிடைக்கவுள்ள தமிழ் மக்களின் வாக்குகளில் பெரும் சரிவு ஏற்படலாம்; இது அநுரகுமாரவின் ஜனாதிபதிக் கனவுக்கு ஒரு சவாலாகவும் இருக்கப் போகின்றது!

அரசியல் ஆய்வாளர்களால் இதுவரை களத்தில் முன்னணியில் நிற்பதாக ஹேஷ்யம் கூறப்பட்டு வரும் அநுரகுமார திஸாநாயகா ஜனாதிபதியானால், கடந்த சில வருடங்களாக சீர்கெட்டுப்போன நிலைக்கு வந்துவிட்ட ஸ்ரீலங்காவை சீர்படுத்திக் காட்டுவதற்கு முனைப்புடன் செயல்படுவார் என்பது பெருமைப் படத்தக்கதொரு விடயமாகும்!

புதியதொரு விடியலை எதிர்நோக்கிக் காத்து நிற்கும் ஸ்ரீலங்காவின் தவப்புதல்வர்களான வாக்காளப் பெருமக்களின் கரங்களில்தான் அவர் ஜனாதிபதியாகும் ' இலக்கு' தங்கி நிற்கின்றது!

பொறுத்திருந்துதான் பார்ப்போமே!

செம்மைத்துளியான்




 



Post a Comment

Previous Post Next Post