கிரவுட்ஸ்ட்ரைக்: அமெரிக்கா உள்பட பெரும்பாலான நாடுகள் பாதிக்கப்பட்டாலும் சீனா மட்டும் தப்பியது எப்படி?

கிரவுட்ஸ்ட்ரைக்: அமெரிக்கா உள்பட பெரும்பாலான நாடுகள் பாதிக்கப்பட்டாலும் சீனா மட்டும் தப்பியது எப்படி?


கடந்த வெள்ளிக்கிழமை உலகத்தின் பெரும்பகுதி ‘ப்ளூ ஸ்க்ரீன் எரர்’ காரணமாக போராடிய நிலையில், அதிலிருந்து பெருமளவு தப்பித்த ஒரு நாடு சீனா.

அதற்கு காரணம் மிக எளிது. கிரவுட்ஸ்டிரைக் மென்பொருள் அங்கு அவ்வளவாக பயன்படுத்தப்படுவதில்லை.

பெய்ஜிங் சைபர்-பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்குவதாக அமெரிக்கா கூறிவந்த நிலையில், அமெரிக்காவிடம் இருந்து வெகுசில சீன நிறுவனங்கள் மட்டுமே மென்பொருளை வாங்குகின்றன.

உலகின் மற்ற பகுதிகளை போன்று சீனா, மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தை நம்பி இருக்கவில்லை.

பெரும்பாலும் அலிபாபா, டென்சென்ட் மற்றும் ஹவாய் போன்ற உள்நாட்டு நிறுவனங்களே தகவல் தொழில்நுட்ப சேவை வழங்கும் நிறுவனங்களாக உள்ளன.

எனவே, சீனாவில் செயல்படும் வெளிநாட்டு நிறுவனங்கள் மட்டுமே இத்தகைய தகவல் தொழில்நுட்ப செயலிழப்பால் பாதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. உதாரணமாக, சீன நகரங்களில் உள்ள ஷெரட்டன், மேரியட், ஹயாத் போன்ற சர்வதேச உணவகங்களில் அறையை பதிவு செய்ய முடியவில்லை என, சீன சமூக ஊடக தளங்களில் சில பயனாளர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

சீனா மீதான மற்ற நாடுகளின் தடைகள்

சீனாவில் சமீப ஆண்டுகளாக அரசு அமைப்புகள், வணிகங்கள், உள் கட்டமைப்பு ஆபரேட்டர்கள் வெளிநாட்டு ஐ.டி. அமைப்புகளுக்கு பதிலாக உள்நாட்டு தகவல் தொழில்நுட்ப அமைப்புகளை அதிகமாக மாற்றிவருகின்றனர். இதனை சில ஆய்வாளர்கள் “ஸ்ப்ளிண்டர்நெட்” (இணையத்தை பிளவுபடுத்துவது) என அழைக்கின்றனர்.

“வெளிநாட்டு தொழில்நுட்ப அமைப்புகளை கையாள்வதில் சீனாவின் திறமையான நிர்வாகத்திற்கான ஆதாரமாக இது உள்ளது” என, சிங்கப்பூரை சேர்ந்த சைபர் பாதுகாப்பு நிபுணர் ஜோஷ் கென்னடி ஒயிட் கூறுகிறார்.

“21வயாநெட் (21Vianet) எனும் உள்நாட்டு நிறுவனத்துடன் இணைந்து சீனாவில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் இயங்கிவருகிறது. சீனாவில் மைக்ரோசாஃப்ட் சேவையை தன்னிச்சையாக அந்நிறுவனம் நிர்வகிக்கிறது. இந்த ஏற்பாட்டின் மூலம் சீனாவின் அத்தியாவசிய சேவைகளான வங்கி மற்றும் விமான போக்குவரத்து சேவைகளில் வெளிப்புற காரணிகளால் தடங்கல் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.”

வெளிநாட்டு அமைப்புகளை சாந்திருக்காமல் அவற்றை தடுப்பது தேச பாதுகாப்பை வலுப்படுத்தும் நடவடிக்கையாக சீனா பார்க்கிறது.

இது, 2019-ஆம் ஆண்டில் சீன தொழில்நுட்ப நிறுவனமான ஹவாயை சில மேற்கு நாடுகள் தடை செய்தன. அது 2023-ஆம் ஆண்டில் சீனாவின் டிக்டாக் செயலியை தடை செய்த பிரிட்டனின் நடவடிக்கையை போன்றதாகும்.

அப்போதிருந்து, அமெரிக்க வணிகங்கள் சீன தொழில்நுட்பத்தில் முதலீடு செய்வதைத் தடுக்கவும், அதிநவீன செமி கன்டக்டர் சிப் தொழில்நுட்பத்தை சீனாவிற்கு விற்பதை சட்டவிரோதமாக்கவும் அமெரிக்காவால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. தேச பாதுகாப்புக்காக இத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக அமெரிக்க அரசாங்கம் தெரிவித்தது.

அமெரிக்காவை விமர்சித்த சீனா

சீன அரசு சார்பு ஊடகமான குளோபல் டைம்ஸில் சனிக்கிழமை வெளியான தலையங்கத்தில், சீன தொழில்நுட்பம் மீதான இத்தகைய கட்டுப்பாடுகள் குறித்து மேலோட்டமாக குறிப்பிடப்பட்டிருந்தன.

“சில நாடுகள் பாதுகாப்பு குறித்து தொடர்ச்சியாக பேசி வருகின்றன, பாதுகாப்பு என்ற கருத்தை பொதுமைப்படுத்துகின்றன. ஆனால், உண்மையான பாதுகாப்பு பிரச்னையை புறக்கணித்துவிட்டன, இது முரணாக உள்ளது,” என அந்த தலையங்கம் கூறுகிறது.

இங்குள்ள வாதம் என்னவென்றால், உலகளாவிய தொழில்நுட்பத்தை யார் பயன்படுத்தலாம் மற்றும் அதை எவ்வாறு பயன்படுத்தலாம் என்ற விதிமுறைகளை அமெரிக்கா கட்டளையிட முயற்சிக்கிறது. ஆனால் அதன் சொந்த நிறுவனம் ஒன்றை சரியாக கவனிக்காததால் உலகளாவிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதுதான்.

தகவல் தொழில்நுட்பத்தை “ஏகபோக உரிமை” கொண்டாடும் சர்வதேச நிறுவனங்களையும் ‘தி குளோபல் டைம்ஸ்’ விமர்சித்தது: “இணைய பாதுகாப்புக்காக பெரிய நிறுவனங்களை மட்டுமே நம்பியிருக்குமாறு சில நாடுகள் வாதிடுவது, நிர்வாக முடிவுகளை உள்ளடக்கிய பகிர்வுக்கு மட்டும் தடையாக இல்லாமல், புதிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களையும் அறிமுகப்படுத்தும்.” என்கிறது அந்த தலையங்கம்.

'மைக்ரோசாஃப்டுக்கு நன்றி'

மேற்கத்திய தொழில்நுட்பத்தை நகலெடுப்பதாகவோ அல்லது திருடுவதாகவோ சீனா அடிக்கடி குற்றம் சாட்டப்படுவதால், "பகிர்வு" என்ற சொல், அறிவுசார் சொத்து பற்றிய விவாதத்தின் ஒரு குறிப்பாக இருக்கலாம். திறந்த உலகளாவிய தொழில்நுட்ப சந்தைக்காக வாதிடும் சீனா, உள்நாட்டு சூழலை இன்னும் இறுக்கமாக கட்டுப்படுத்துகின்றது.

எனினும், சீனாவில் எதுவுமே பாதிக்கப்படவில்லை என கூற முடியாது. வாரத்தின் இறுதி வேலை நாளை முன்கூட்டியே முடித்து வைத்ததற்கு அமெரிக்க மென்பொருள் நிறுவனத்திற்கு சில பணியாளர்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

‘ப்ளூ எரர்’ திரையின் படங்களை சீன சமூக ஊடக தளமான வெய்போவில் (Weibo) பகிர்ந்துள்ள பயனாளர்கள், “முன்கூட்டியே விடுமுறை அளித்ததற்காக மைக்ரோசாஃப்டுக்கு நன்றி” (Thank you Microsoft for an early vacation) என்ற ஹேஷ்டேகை டிரெண்ட் செய்துள்ளனர்.

bbc



 



Post a Comment

Previous Post Next Post