வயநாடு நிலச்சரிவில் உயிரை பொருட்படுத்தாமல் உதவும் பெண்கள் - யார் இந்த சிங்கப்பெண்கள் தெரியுமா?

வயநாடு நிலச்சரிவில் உயிரை பொருட்படுத்தாமல் உதவும் பெண்கள் - யார் இந்த சிங்கப்பெண்கள் தெரியுமா?


நிலச்சரிவால் உருக்குலைந்த வயநாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உயிரையும் பொருட்படுத்தாமல் உதவி செய்து, இரண்டு பெண்கள் கவனம் ஈர்த்துள்ளனர்.

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ருத்ரதாண்டவம் ஆடிய நிலச்சரிவால் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாட்டையே உலுக்கிய கோர சம்பவத்தில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், மீட்புப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளார் பெண் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மரியம்மா. பணிகளுக்கு இடையே நியூஸ் 18 தமிழ்நாடு செய்திகளுக்குப் பேட்டியளித்த அவர், உடல்களை ஆம்புலன்ஸில் கொண்டு செல்லும்போது ஜீரணிக்க முடியாத சோகத்தை வருவதாக தெரிவித்தார்.

இதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 15 ஆண்டுகளுக்கு முன்பு குழந்தைகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தபோது இருந்த இடம், தற்போது காணாமல் போய்விட்டதாக வேதனை தெரிவித்தார்.

அதேபோல் உயிரையும் பொருட்படுத்தாமல் மீட்புப் பணியில் ஈடுபட்ட மற்றொருவர் செவிலியர் சபீனா. கூடலூரைச் சேர்ந்த சபீனா,
வயநாடு சூரல் மலையில் ஆற்று வெள்ளத்தின் நடுவே ஜிப் லைன் மூலம் துணிச்சலாக சென்று 35 பேருக்கு முதலுதவி அளித்து அவர்களின் உயிரை காப்பாற்றியுள்ளார்.

இந்த இரு சிங்கப் பெண்களைப் போலவே கண்ணுக்குத் தெரியாத இன்னும் பல பெண்களின் சேவைகளுடனும்தான் மீண்டு வருகிறது வயநாடு!

இதனிடைய சூரல்மலையில் நிலச்சரிவு ஏற்பட்ட அன்று, பாதுகாப்பான இடத்தை நோக்கி காயங்களுடன் சுஜாதா என்பவர் தனது பேத்தியுடன் காபி தோட்டம் வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்களை யானைக்கூட்டம் ஒன்று வழி மறித்துள்ளது. 2 மணி நேரம் வழிவிடாமல் நின்ற யானைகள், சுஜாதாவையும் அவரின் பேத்தியையும் தாக்காமல் பின்னர் வழி விட்டு விலகிச் சென்றன. இந்த சம்வத்தை அவர்கள் கூறியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

news18



 



Post a Comment

Previous Post Next Post