சுயேட்சை வேட்பாளராகக் களமிறங்கி, ஐந்து வருட ஆட்சிவரம் கேட்கும் ரணில்!

சுயேட்சை வேட்பாளராகக் களமிறங்கி, ஐந்து வருட ஆட்சிவரம் கேட்கும் ரணில்!


இலங்கையின் மூத்த அரசியல்வாதியும், எட்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க, இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிடுகின்றார்.

2024 ஜூலை 30ம் திகதி ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவினருடன் இடம்பெற்ற கூட்டத்தில் பேசும்போது, நாட்டைக் கட்டியெழுப்ப முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எடுத்த சரியான தீர்மானத்திற்கு நன்றி தெரிவிப்பதாகவும், பாராளுமன்றத்துக்குள் தனக்கு 92 உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனையின் பெரும்பான்மை உறுப்பினர்கள் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோனும் உறுதிப்படுத்தியுள்ளார்.

அண்மையில் தான் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை ஒன்றில் தனக்கு ஆதரவு தந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, அதுவும் ஒரே அறிக்கையில் பல தடவைகளில் ரணில்  நன்றி செலுத்தியிருப்பதோடு, மேலும் ஐந்து வருடங்கள் தான் ஆட்சியில் நிலைத்திருக்க,  ஏனைய மன்ற உறுப்பினர்களின் ஆதரவையும் வேண்டியுள்ளார். 

"ஜனாதிபதி தேர்தல் பிரகடனத்தின் பின்னர் பல அரசியல் நாடகங்கள் அரங்கேறுகின்றன. நாட்டை வங்குரோத்து செய்த அணி, மீண்டும் ஆட்சியை பிடிக்க ஜனாதிபதி ரணில் தலைமையைப் பயன்படுத்த முற்படுகின்றது" என்று பாராளுமன்ற அங்கத்தவர் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.


தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்த திரு காமினி திசாநாயக்க 1994 அக்டோபர் 23ம் திகதி நள்ளிரவு 12.17 அளவில் கொழும்பு தொட்டலங்க பொதுச்சந்தை மைதானத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றி விட்டு, இருப்பிடம் நோக்கிச் செல்கையில் இடம் பெற்ற குண்டு வெடிப்பினால் படுகொலை செய்யப் பட்டதையடுத்து, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட ரணில் விக்கிரமசிங்க, 1993-1994, 2001-2004, 2015-2018, 2018-2019, 2022 காலப்பகுதிகளில் ஐந்து தடவைகள் பிரதமராகவும், 1994-2001, 2004-2015 காலப்பகுதிகளில் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தவராவார்.

ரணில் விக்கிரமசிங்கவின் அப்போதைய அரசியல் கூட்டணியான 'நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி' 2015 நாடாளுமன்றத் தேர்தலில் 106 இடங்களைக் கைப்பற்றியது. 

ஆட்சி அமைப்பதற்குத் தேவையான 113 என்ற அறுதிப் பெரும்பான்மை கிடைக்காமையினால் 'ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி'யின் உறுப்பினர்கள் 35 பேர்களுக்கு அமைச்சர் பதவிகளை வழங்கியதன் மூலமும், 16 உறுப்பினர்களைக் கொண்ட 'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு' 
நிபந்தனையற்ற ஆதரவை வழங்க முன் வந்ததையடுத்து ரணில் விக்கிரமசிங்க ஆட்சி அமைத்தார்.

ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச, அனுரகுமார திஸாநாயக்க, விஜயதாச ராஜபக்ச, சரத் பொன்சேகா ஆகிய ஐவரும் நல்லாட்சி அரசாங்கத்தில் வலிமையானவர்களாகச் செயற்பட்டவர்கள்.

ரணில் விக்கிரமசிங்க 'நல்லாட்சி ஐக்கிய தேசிய முன்னணி' அரசாங்கத்தின் பிரதமராகவும், சஜித் பிரேமதாச வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சராகவும்,  அனுரகுமார திஸாநாயக்க ஊழல் எதிர்ப்புக் குழுவின் தலைவராகவும், விஜயதாச ராஜபக்ச நல்லாட்சி அரசாங்கத்தின் நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சராகவும், சரத் பொன்சேகா வனவிலங்கு மற்றும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சராகவும் இருந்தனர்.

2022 ஜூலை 22ம் திகதி பதவிக்கு வந்த நமது வெளிவுறவுத்துறை அமைச்சர் அலி ஸப்ரி அவர்களின் வார்த்தைகளில் கூறுவதானால், 'நல்லாட்சி' என்பது ஒரு பஸ்ஸில் இரண்டு ஓட்டுனர்கள்!

ஆட்சிக்குள் ஏற்பட்ட போட்டி-பொறாமை- உட்பூசல் காரணமாக,  2018 அக்டோபர் 26ல் ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக்கப்பட்டார்!

இதனை ரணில் விக்கிரமசிங்க அரசியல் அமைப்புச் சட்டத்திற்குப் புறம்பானது எனக்கூறி பதவி விலக மறுத்ததினால் அரசியலமைப்பு நெருக்கடிக்குள்ளானது.

ரணில் விக்கிரமசிங்கவைப் பதவி விலக்கியது அரசியலமைப்புக்கு முரணானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதையடுத்து, 2018 டிஸம்பர் 16ம் திகதி விக்கிரமசிங்க மீண்டும் பிரதமரானார்.

இந்த 52 நாட்கள் தான் ஆட்சியிலிருந்த காலத்தில், தனது ஆதரவாளர்களுக்குத்  தேவையான அனைத்துக் கைங்கரியங்களையும் சிறப்புறச் செய்து முடித்துக் கொண்டார் மஹிந்த ராஜபக்ஷ!

2019ல் ஜனாதிபதித் தேர்தலில் கோத்தாபய ராசபக்ஷ அமோக வெற்றி அடைந்ததையடுத்து, ரணில் விக்கிரமசிங்க 2019 நவம்பர் 20ம் திகதி தனது பிரதமர் பதவியைத் துறந்தார்.

அதன் பின்னர், 2020 நாடாளுமன்றத் தேர்தலில் இவர் போட்டியிட்டபோதிலும், இவரையும் இவரது கட்சியையும் இலங்கை மக்கள் முற்றுமுழுதாக நிராகரித்ததினால், இவரது கட்சியிலிருந்து, -இவர் உட்பட- எவருமே நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகவில்லை! வரலாற்றில் பழைமையான ஒரு பெருங்கட்சிக்கு இவ்வாறானதொரு நிலைஏற்பட்டது இதுவே முதற் தடவையாகும். 

இருப்பினும், இவர் கட்சிக்கு உள்ளேயும், வெளியேயும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்ட பின்னர் கட்சிக்குக் கிடைத்த ஒரேயொரு 'தேசியப்பட்டியல்' ஆசனம் மூலம், 2021 ஜூன் 23ம் திகதி நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து கொண்டமை,  இவரது முதலாவது பேரதிர்ஷ்டம் என்றே கூறவேண்டும்!

2022ம் ஆண்டில் நாட்டில் இடம்பெற்ற பெரும் பொருளாதார நெருக்கடியையடுத்து ராஜபக்ஷ குடும்ப ஆட்சிக்கு எதிராக இடம்பெற்ற போராட்டங்களின் விளைவாக மஹிந்த ராஜபக்ஷ 2022 மே 9ம் திகதி பிரதமர் பதவியிலிருந்து விலகிக் கொண்டதும், 2022 மே 12ம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இவரைப் பிரதமராக நியமனம் செய்தது இவரது இரண்டாவது அதிர்ஷ்டமாகும்!

2022 ஜூலை 9ம் திகதி ஜனாதிபதி மாளிகை 'அரகலய' போராட்டக்காரர்களால் கைப்பற்றப் பட்டதும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமறைவானார்; அன்றிரவே  ரணில் விக்கிரமசிங்கவின் கொள்ளுப்பிட்டி வீடும் தீக்கிரையாக்கப்பட்டது. 2022 ஜூலை 13ம் திகதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளி ஏறியதையடுத்து, ரணில் விக்கிரமசிங்க பதில் ஜனாதிபதியாக்கப்பட்டது இவரின் மூன்றாவது பேரதிர்ஷ்டமாகும்!

2022 ஜூலை 14ம் திகதி கோட்டாபய ராஜபக்ஷ உத்யோகபூர்வமாகத் தனது ஜனாதிபதிப் பதவியிலிருந்து விலகியதையடுத்து, பிரதமர் பதவியிலிருந்த ரணில் விக்கிரமசிங்க, 2022 ஜூலை 14ம் திகதி இடைக்கால ஜனாதிபதியானார்.

2022 ஜூலை 20ம் திகதி, 225 நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பில் ரணில் விக்கிரமசிங்க, 134 வாக்குகள் பெற்று எட்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக உத்யோகபூர்வமாகத் நியமனம் பெற்றார். 

2 வருடங்கள், 4 மாதங்கள், 4 நாட்கள் ஆட்சி வரம் பெற்றதால், இவரது பதவிக்காலம் 2024 நவம்பர் 18ம் திகதியுடன் முடிவுறப்போகின்றது!

ஜனாதிபதிப் பதவிக்காலம் முடிவடைவதற்கு ஒரு மாதத்திற்கு குறையாத மற்றும் இரண்டு மாதங்களுக்கு முன்னர் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதியாகும்; அதன்படி, 2024 ஆண்டிற்கான ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 21ம் திகதி நடைபெறவுள்ளது; ரணில் விக்ரமசிங்கவும் சுயேட்சை வேட்பாளராகக் கட்டுப்பணம் செலுத்திவிட்டார்! அவர் தனது கட்சி மூலம் கட்டுப்பணம் செலுத்தி, தேர்தலுக்குள் நுழையாதது இலங்கைவாழ் வாக்காளப் பெருமக்களுக்கு ஒரு புதிராகவே இருக்கின்றது! அவரது சாணக்கியத்தனத்தை ஒருபோதும் மக்களால் புரிந்துகொள்ள முடிவதில்லை!
அதலபாதாளம் சென்றிருந்த நாட்டை அதே புத்தி சாதுரியத்தாலும், அரசியல் சாணக்கியத் தனத்தினாலும், சர்வதேசத்தின்மீது தனக்கிருந்த செல்வாக்கினாலும் மீட்டெடுத்தார். இதனை நன்கு புரிந்து கொண்ட இலங்கைவாழ் வர்த்தக சமூகம் இன்றும் அவர் பின்னால் இருக்கின்றது; ஆனால் நாட்டை அதலபாதாளம் வரை கொண்டு சென்றவர்களை அவர் தன்னோடு இணைத்துக் கொண்டிருப்பதுதான், நாட்டு மக்கள் அவரை ஓரக்கண் கொண்டு பார்க்க வைக்கின்றது!

பணம் சம்பாதிக்க வேண்டும்; சொத்து சேர்க்க வேண்டும் என்பது அவரது நோக்கமல்ல! தான் பதவியில் இருக்க வேண்டும்; தன்னால் முடிந்ததை தனது தாய்நாட்டுக்கச் செய்ய வேண்டும் என்பதே அவரின் நோக்காக இருக்கின்றது!

அதிர்ஷ்டத்தின் மேல் அதிர்ஷ்டம் பெற்றபோதிலும் இப்போது அவர் தேர்தல் களத்திற்கு வந்துவிட்டார்; மக்கள் வரம் நாடி நிற்கின்றார். 

நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரைத் தனது ஆதரவாளர்களாக இணைத்துக் கொண்டு, மேலும் ஐந்தாண்டுகள் பதவியில் இருப்பதற்கான மக்கள் வரத்தை நாடி நிற்கின்றார்.

கொழும்பு மக்களின் ஆதரவு - குறிப்பாக வர்த்தகர்களின் ஆதரவு அவரின் பக்கம் இருப்பதாக கருத்துக் கணிப்புக்கள் கூறுகின்றன.

சுமார் 18 பேர்கள் களத்தில் குதிக்கும் இம்முறைத் தேர்தலில் வழமைபோல் மும்முனைப் போட்டி ஒன்றுதான் நடக்கப் போகின்றது. 

பெரும்பான்மை இன மக்களின் வாக்குகளே ரணில், சஜித், அநுர ஆகிய மூவரில் ஒருவரை வெற்றிபெறச் செய்கின்ற முதற்தேர்வாக இருக்கப் போகின்றது.

இந்த மூவரில் எவர் 50 சதவீதமான பெரும்பான்மை இன மக்களின் வாக்குகளைப் பெற்றாலும், கிடைக்கப் போகின்ற ஆகக் கூடுதல் சிறுபான்மைச் சமூகங்களின் வாக்குகள் பெற்றுக் கொள்ளப்பட்டவரே ஜனாதிபதியாகும் வாய்ப்பு அதிகமாக உள்ளது!

ரணிலுக்கும், அவரை ஜனாதிபதியாக்கிய அவரது அநுசரணையாளர்களுக்கும் இப்போதுள்ள ஒரே சவால் தேசிய மக்கள் சக்தியின் வாக்குப் பலத்தையும், மக்கள் ஆதரவையும் இல்லாமலாக்குவதாகும்.

இந்த வாக்கு வங்கி அரசியல் நாடகத்தை வாக்காளப் பெருமக்கள் எந்த வகையில் எடுத்துக் கொள்ளப் போகின்றார்கள் என்பது ஒரு கேள்விக்குறிதான்! 
இம்முறை தேர்தலில் அனைத்து வாக்கெடுப்பு மாவட்டங்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ள வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கை 17,140,354 என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட இலங்கையின் ஜனாதிபதிப் பதவியை இம்முறை நிர்ணயிக்கப் போவது, பெரும்பான்மைச் சமூகத்தினரின் வாக்குப் பலம் மட்டுமல்லாது, சிறுபான்மைச் சமூகத்தினரின் வாக்குகளும் சேர்ந்த, புதிதாக வாக்காளர் பட்டியலுக்குள் நுழைந்துள்ள, 10 இலட்சம் இளைஞர்களின் வாக்குப் பலமுமே! இந்த இளைஞர்கள் பெரும்பாலும் 'அரகலை'க்குள் இருந்தவர்களாகவும் இருக்கக் கூடும். அதனால்தான் மும்முனைப் போட்டி வேட்பாளர்கள் இளைய பரம்பரையை திருப்திப் படுத்துவதில் அதிக ஈடுபாடு கொள்ள வேண்டியுள்ளது!

செம்மைத்துளியான்


 



Post a Comment

Previous Post Next Post