ஆப்கானிஸ்தானில் ஆபத்தான நிலையில் 32 லட்சம் குழந்தைகள் - தாலிபன் ஆட்சியில் என்ன நடக்கிறது?

ஆப்கானிஸ்தானில் ஆபத்தான நிலையில் 32 லட்சம் குழந்தைகள் - தாலிபன் ஆட்சியில் என்ன நடக்கிறது?


“உலகமே அழிந்து விட்டது போல் உணர்கிறேன். விவரிக்க முடியாத அளவுக்கு வருத்தமாக இருக்கிறது. என் கண் முன்னே என் குழந்தைகள் இறந்தது எனக்கு எப்படி இருந்திருக்கும் என்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியுமா?” என்கிறார் ஆமினா.

ஆமினா தனது ஆறு குழந்தைகளை இழந்து விட்டார். அவரின் குழந்தைகள் மூன்று வயதுக்கு மேல் உயிர் வாழவில்லை. மற்றொரு குழந்தை தற்போது உயிருக்குப் போராடி வருகிறது.

ஏழு மாத குழந்தையான பீபி ஹாஜிராவை பார்ப்பதற்கு, புதிதாகப் பிறந்த பச்சிளம் குழந்தை போல இருந்தது. கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாட்டால் அவதிப்படும் பீபி, ஆப்கானிஸ்தானின் கிழக்கு நங்கர்ஹார் மாகாணத்தில் உள்ள ஜலாலாபாத் பிராந்திய மருத்துவமனையில் உள்ள ஒரு வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

“வறுமையால் என் குழந்தைகள் இறந்து கொண்டிருக்கிறார்கள். என்னால் அவர்களுக்குக் கொடுக்க முடிந்தது எல்லாம், உலர்ந்த ரொட்டியும் தண்ணீரும் தான். அவற்றையும் வெயிலில் வைத்து தான் சூடுபடுத்துகிறேன்,” என்று வேதனையுடன் விவரித்தார் ஆமினா.

இது ஆமீனாவின் கதை மட்டும் அல்ல, ஆஃப்கானிஸ்தானின் இப்பகுதியில் பலரது நிலை இதுதான். உடனடி மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டால், ஏராளமான உயிர்கள் காப்பாற்றப்படலாம்.


ஆபத்தான நிலையில் 32 லட்சம் குழந்தைகள்

ஆஃப்கானிஸ்தானில் பீபி ஹாஜிரா உட்பட 32 லட்சம் குழந்தைகளுக்குக் கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளது. இது, பல ஆண்டுகளாக ஆஃப்கானிஸ்தான் எதிர்கொள்ளும் ஒரு பிரச்னை. 40 ஆண்டுகாலப் போர், தீவிர வறுமை போன்ற பல காரணங்களால் ஊட்டச்சத்து குறைபாடு பிரச்னை நீடிக்கிறது.

தாலிபன்கள் பொறுப்பேற்ற மூன்று ஆண்டுகளில் நிலைமை வரலாறு காணாத அளவுக்கு மோசமடைந்துள்ளது.

பாதிக்கப்பட்டுள்ள 32 லட்சம் குழந்தைகள் எப்படி இருப்பார்கள் என்பதைக் கற்பனை செய்து பார்ப்பது கடினம். எனவே, ஒரு சிறிய மருத்துவமனையில் கிடைத்த அனுபவக் கதைகள் அதிகரித்து வரும் இந்த பேரழிவைப் பற்றிய நுண்ணறிவை வழங்கும்.

ஏழு படுக்கைகளில் 18 குழந்தைகள் உள்ளனர். இந்த எண்ணிக்கை குறிப்பிட்ட பருவ காலத்தில் மட்டும் நிகழ்வது அல்ல. இங்கு எல்லா நாளும் இப்படித்தான் இருக்கிறது.

குழந்தைகளின் அழுகையோ அலறலோ கேட்கவில்லை. நாடித் துடிப்பை கண்காணிக்கும் மானிட்டரின் பீப் ஒலி மட்டுமே அறையில் கேட்கும் ஒரே சத்தம்.

பெரும்பாலான குழந்தைகள் மயக்க நிலையில் இல்லை. ஆக்ஸிஜன் மாஸ்க் அணியவில்லை. அவர்கள் விழித்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் நகரவோ அல்லது அழுவதற்கோ தெம்பு இல்லாமல் மிகவும் பலவீனமாக உள்ளனர்.

பீபி ஹாஜிராவுடன் படுக்கையைப் பகிர்ந்து கொண்டு, ஊதா நிற ஆடை அணிந்து, தன் சிறிய கையால் முகத்தை மூடிக் கொண்டிருக்கிறார், மூன்று வயது சனா.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரது தாயார் தனது இளைய சகோதரியைப் பிரசவித்த போது இறந்து விட்டார். எனவே அவரது அத்தை லைலா அவரை கவனித்துக் கொள்கிறார்.
படக்குறிப்பு,குழந்தை அஸ்மாவின் உடல் 'செப்டிக் ஷாக்’ என்னும் ஆபத்தான நிலையை அடைந்துவிட்டது. அவர் இறந்துவிட்டார்

லைலா என்னை அழைத்து ஏழு விரல்களை உயர்த்திக் காண்பித்தார். அது அவர் இழந்த குழந்தைகளின் எண்ணிக்கை.

பக்கத்துப் படுக்கையில் இருந்த மூன்று வயது குழந்தை இல்ஹாம் வயதுக்கு ஏற்ற வளர்ச்சியில் இல்லை. குழந்தையின் கைகள், கால்கள் மற்றும் முகத்தில் தோல் உரிந்திருக்கிறது.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, அவரது சகோதரி இரண்டு வயதாக இருக்கையில் இறந்துவிட்டார்.

ஒரு வயதே ஆன அஸ்மாவைப் பார்க்க வேதனையாக இருந்தது. அந்தக் குழந்தையின் நீண்ட இமைகள் கொண்ட அழகான பழுப்பு நிறக் கண்கள் எங்கோ வெறித்துப் பார்த்து கொண்டிருந்தன. சிறிய முகத்தின் பெரும்பகுதியை மூடியிருக்கும் ஆக்ஸிஜன் மாஸ்க் உதவியுடன் சுவாசிக்கும் போது குழந்தை கண்களை சிமிட்டுகிறது.

அஸ்மாவின் அருகே நிற்கும் மருத்துவர் சிக்கந்தர் கானி, தலையை அசைத்தபடி, "அஸ்மா உயிர் பிழைப்பாள் என்று தோன்றவில்லை," என்று கூறினார். அஸ்மாவின் சிறிய உடல் செப்டிக் ஷாக் என்னும் ஆபத்தான நிலையை எட்டியது.

சோகமான சூழ்நிலைகள் இருந்தபோதிலும், அந்த அறையில் இருந்த செவிலியர்கள் மற்றும் தாய்மார்கள் எல்லாவற்றையும் ஏற்று கொண்டு, தங்கள் வேலையைச் செய்கின்றனர். குழந்தைகளுக்கு உணவளிக்கிறார்கள், அழும் போது அவர்களை அமைதிப்படுத்துகிறார்கள்.

அஸ்மாவின் தாய் நசிபா கதறி அழுகிறார். அவரது முக்காடைத் தூக்கி தன் மகளுக்கு முத்தமிடக் கீழே சாய்ந்தார்.

“என் உடலில் சதை உருகுவது போல் உணர்கிறேன். என் குழந்தை இப்படி கஷ்டப்படுவதை என்னால் தாங்க முடியவில்லை,” என்று அழுகிறார். நசிபா ஏற்கனவே மூன்று குழந்தைகளை இழந்துள்ளார். “என் கணவர் கூலித்தொழிலாளி. அவருக்கு வேலை கிடைக்கும் போது மட்டுமே உணவு இருக்கும்,” என்கிறார்.

அஸ்மா எந்த நேரத்திலும் இதயச் செயலிழப்புக்கு ஆளாகலாம் என்று மருத்துவர் கானி கூறுகிறார். நாங்கள் அந்த அறையை விட்டு வெளியேறிய ஒரு மணி நேரத்திற்குள் அஸ்மா இறந்துவிட்டார்.

ஏன் இந்த நிலை?

மருத்துவமனையில் கடந்த ஆறு மாதங்களில் 700 குழந்தைகள் இறந்துள்ளனர். ஒரு நாளைக்கு மூன்றுக்கும் மேல் இறக்கின்றனர் என்று நங்கர்ஹரில் உள்ள தலிபானின் பொது சுகாதாரத் துறை எங்களிடம் கூறியது.

உலக வங்கி மற்றும் யுனிசெஃப் நிதியுதவி மூலம் இந்த மருத்துவச் சேவையைத் தொடர்ந்து நடத்தாமல் இருந்திருந்தால் இன்னும் பல உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கும்.

2021-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை, முந்தைய அரசாங்கத்திற்கு நேரடியாக வழங்கப்பட்ட சர்வதேச நிதிகள் ஆஃப்கானிஸ்தானில் உள்ள அனைத்துப் பொதுச் சுகாதார சேவைகளுக்கும் நிதியளித்தன. தாலிபன்கள் பொறுப்பேற்றதும், அவர்களுக்கு எதிரான சர்வதேசத் தடைகள் காரணமாக நிதி நிறுத்தப்பட்டது.

இது சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்தியது. தற்காலிக அவசரகால நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவி முகமைகள் முன்வந்தன. ஆனால் இது நிரந்தர தீர்வாக இருக்காது. இப்போது, வேறு பல சம்பவங்களால் உலகம் திசைதிருப்பப்பட்டுள்ளது. எனவே ஆஃப்கானிஸ்தானுக்கான நிதி சுருங்கிவிட்டது.

அதேபோல, தாலிபன் அரசாங்கத்தின் கொள்கைகள், குறிப்பாகப் பெண்கள் மீதான கட்டுப்பாடுகளால் நன்கொடையாளர்கள் நிதி வழங்கத் தயங்குகின்றனர்.

“வறுமை மற்றும் ஊட்டச்சத்துச் குறைபாட்டுப் பிரச்னைகள் எங்களைத் தொடர்ந்து வருகின்றன. இது வெள்ளம் மற்றும் காலநிலை மாற்றம் போன்ற இயற்கைப் பேரழிவுகளால் மேலும் மோசமாகிவிட்டது. சர்வதேசச் சமூகம் மனிதாபிமான உதவிகளை அதிகரிக்க வேண்டும். அரசியல் மற்றும் உள் பிரச்னைகளுடன் அதைச் சேர்த்துப் பார்க்கக் கூடாது,” என்று தாலிபன் அரசாங்கத்தின் துணை செய்தித் தொடர்பாளர் ஹம்துல்லா ஃபிட்ராத் பிபிசியிடம் தெரிவித்தார்.

வேகமாக மோசமடைந்து வரும் நிலைமை

கடந்த மூன்று வருடங்களாக நாட்டில் உள்ள ஐந்துக்கும் மேற்பட்டச் சுகாதார நிலையங்களுக்குச் சென்றுள்ளோம். நிலைமை வேகமாக மோசமடைந்து வருவதைக் கண்டோம். சில மருத்துவமனைகளுக்குச் சென்றபோது, குழந்தைகள் இறப்பதை நேரில் கண்டிருக்கிறோம். அதே சமயம் அது, முறையான சிகிச்சை குழந்தைகளைக் காப்பாற்றும் என்பதற்கான சான்றாகவும் இருந்தது.

நாங்கள் மருத்துவமனைக்குச் சென்றபோது பலவீனமான நிலையில் இருந்த பீபி ஹாஜிரா, இப்போது மிகவும் நன்றாக இருக்கிறார், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார் என்று மருத்துவர் கானி எங்களிடம் தொலைபேசியில் தெரிவித்தார்.

“எங்களிடம் அதிக மருந்துகள், வசதிகள் மற்றும் பணியாளர்கள் இருந்தால் இன்னும் அதிகமான குழந்தைகளைக் காப்பாற்ற முடியும். எங்கள் ஊழியர்களிடம் அர்ப்பணிப்பு உள்ளது. நாங்கள் அயராது உழைக்கிறோம், மேலும் பலவற்றைச் செய்ய தயாராக இருக்கிறோம்,” என்று அவர் கூறினார்.

“எனக்கும் குழந்தைகள் இருக்கிறார்கள். இங்கு ஒவ்வொரு குழந்தையும் இறக்கும் போது நாங்களும் மன உளைச்சலுக்கு ஆளாகிறோம். பெற்றோரின் வலி எப்படி இருக்கும் என்பதை நான் அறிவேன்,” என்கிறார் அவர்.

குழந்தைகளைக் காப்பாற்ற போராட்டம்

இறப்பு எண்ணிக்கை அதிகமாவதற்கு ஊட்டச்சத்துக் குறைபாடு மட்டுமே காரணம் அல்ல. தடுக்கக் கூடிய மற்றும் குணப்படுத்தக் கூடிய பிற நோய்களும் குழந்தைகளைக் கொல்கின்றன. ஊட்டச்சத்துக் குறைபாடு வார்டுக்கு அடுத்துள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில், ஆறு மாத குழந்தை உம்ரா கடுமையான நிமோனியாவுடன் போராடுகிறார்.

ஒரு செவிலியர் அந்த குழந்தையின் உடலில் டிரிப்ஸ் ஏற்ற முற்பட்டபோது, குழந்தை சத்தமாக அழுதது. உம்ராவின் தாயார் அவளருகில் அமர்ந்திருக்கிறார், அவரது முகத்தில் கண்ணீர் வழிகிறது.

"அவளுக்குப் பதில் நான் வலியை அனுபவிக்க விரும்புகிறேன். அவளுக்குப் பதில் நான் இறக்க விரும்புகிறேன். எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது,” என்று அவர் கூறுகிறார்.

நாங்கள் மருத்துவமனைக்குச் சென்று வந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, உம்ரா இறந்துவிட்டார்.

மருத்துவமனைக்குச் சென்ற குழந்தைகளின் கதைகள் இவை. எண்ணற்ற குழந்தைகள் மருத்துவமனைக்குக் கூடச் செல்ல முடியாத சூழலில் உள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை தேவைப்படும் ஐந்து குழந்தைகளில் ஒரு குழந்தை மட்டுமே ஜலாலாபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற முடியும்.

மருத்துவ வசதியின் மீதான அழுத்தம் மிகவும் தீவிரமானது. அஸ்மா இறந்ததால் காலியான படுக்கைக்கு மூன்று மாத ஆலியா மாற்றப்பட்டார்.

என்ன நடக்கிறது என்பதை நிதானமாக யோசிக்க அறையில் இருந்த யாருக்கும் நேரம் இல்லை. தீவிர நோய்வாய்ப்பட்ட மற்றொரு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம்.

பாகிஸ்தானால் வெளியேற்றப்பட்ட அகதிகளின் நிலை

ஜலாலாபாத் மருத்துவமனை, ஐந்து மாகாணங்களின் மக்களுக்காக இயங்குகிறது. தாலிபன் அரசாங்கக் கணக்கின்படி இந்த மாகாணங்களில் தோராயமாக 50 லட்சம் மக்கள் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இப்போது அந்த மருத்துவமனை மீதான அழுத்தம் மேலும் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு பிற்பகுதியில் இருந்து பாகிஸ்தானால் வலுக்கட்டாயமாக நாடு கடத்தப்பட்ட 7 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆப்கானிய அகதிகளில் பெரும்பாலானோர் தொடர்ந்து நங்கர்ஹாரில் தங்கியுள்ளனர்.

மருத்துவமனையைச் சுற்றியுள்ள சமூகங்கள் மத்தியில், ஐ.நா-வால் இந்த ஆண்டு வெளியிடப்பட்ட மற்றொரு ஆபத்தான புள்ளிவிவரத்தின் பிரதிபலிப்பையும் நாங்கள் கண்டோம். ஆப்கானிஸ்தானில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 45% பேர் வளர்ச்சி குன்றியவர்கள்.

ரொபினாவின் இரண்டு வயது மகன் முகமதுவால் தற்போது வரை நிற்க முடியவில்லை. அவர் இருக்க வேண்டியதை விட மிகவும் உயரம் குறைவாக இருக்கிறார்.

“அடுத்த மூன்று முதல் ஆறு மாதங்களுக்கு முகமது சிகிச்சை பெற்றால், அவர் நன்றாக இருப்பார் என்று மருத்துவர் என்னிடம் கூறினார். ஆனால் எங்களால் உணவு கூட வாங்க முடியாது. சிகிச்சைக்கு எப்படிப் பணம் செலுத்துவது?" என்கிறார் ரொபினா.

அவர் குடும்பத்துடன் கடந்த ஆண்டு பாகிஸ்தானை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. இப்போது ஜலாலாபாத்தில் இருந்து மண் பாதையில் சிறிது தூரத்தில் ஷேக் மிஸ்ரி என்ற பகுதியில் தூசி நிறைந்த, வறண்ட குடியிருப்பில் வசிக்க வேண்டியிருக்கிறது.

"என் குழந்தை மாற்றுத்திறனாளி ஆகிவிடுமோ, அவனால் நடக்கவே முடியாதோ என்று நான் பயப்படுகிறேன்," என்று ராபினா கூறுகிறார்.

“பாகிஸ்தானிலும் எங்கள் வாழ்க்கை கடினமாகவே இருந்தது. ஆனால் நாங்கள் சம்பாதிக்க எங்களுக்கு ஒரு வேலை இருந்தது. இங்கு கூலித்தொழிலாளியான என் கணவருக்கு அரிதாகவே வேலை கிடைக்கிறது. நாங்கள் பாகிஸ்தானில் இருந்திருந்தால் என் குழந்தைக்குச் சிகிச்சை அளித்திருக்கலாம்,” என்கிறார் அவர்.

படக்குறிப்பு,உதவி முகமைகள் கொடுத்த உணவுப் பொட்டலங்கள் உண்மையில் அவரது இளைய மகன் முஜீபின் உடல் நிலை முன்னேற்றம் அடைய உதவியதாக சர்தார் குல் கூறுகிறார்

எதிர்காலம் குறித்த கவலை

யுனிசெஃப் அமைப்பின் கூற்றுப்படி, வளர்ச்சி குன்றினால் கடுமையான மீள முடியாத உடல் மற்றும் அறிவாற்றல் பாதிப்பு ஏற்படலாம். அதன் விளைவுகள் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும். அடுத்த தலைமுறையை கூட பாதிக்கும்.

"ஆஃப்கானிஸ்தான் ஏற்கனவே பொருளாதார ரீதியாகப் போராடி வருகிறது. நமது வருங்காலச் சந்ததியினரின் பெரும் பகுதியினர் உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ மாற்றுத் திறனாளியாக இருந்தால், நமது சமூகம் அவர்களுக்கு எப்படி உதவ முடியும்?” என்று மருத்துவர் கானி கேட்கிறார்.

மிகவும் தாமதமாகிவிடும் முன்பே சிகிச்சை அளித்தால், முகமதுவை நிரந்தர பிரச்னையிலிருந்து காப்பாற்ற முடியும்.

ஆனால் ஆஃப்கானிஸ்தானில் உதவி முகமைகளால் நடத்தப்படும் சமூக ஊட்டச்சத்துத் திட்டங்கள் அதிகளவிலான தடைகளைக் கண்டுள்ளன. பல திட்டங்கள் தேவையான நிதியில் கால் பகுதியை மட்டுமே பெற்றுள்ளன.

ஷேக் மிஸ்ரிக்கு அருகே, ஊட்டச்சத்துக் குறைபாடு அல்லது வளர்ச்சி குன்றிய குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களைச் சந்தித்தோம்.

சர்தார் குல் என்பவருக்கு ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள இரண்டு குழந்தைகள் உள்ளனர். மூன்று வயது உமர், மற்றும் எட்டு மாத முஜீப். பிரகாசமான கண்கள் கொண்ட அந்தக் குழந்தையை அவர் மடியில் வைத்திருந்தார்.

“ஒரு மாதத்திற்கு முன்பு முஜீப்பின் எடை 3 கிலோவுக்கும் குறைவாக இருந்தது. ஒரு உதவி நிறுவனத்தில் அவரைப் பதிவு செய்ய முடிந்ததும், நாங்கள் உணவுப் பொட்டலங்களைப் பெற ஆரம்பித்தோம். அவை உண்மையில் அவருக்கு உதவியுள்ளன,” என்கிறார் சர்தார் குல்.

முஜீப் இப்போது 6 கிலோ எடையுடன் இருக்கிறார். இன்னும் 2 கிலோ எடை குறைவாக உள்ளது. ஆனால் அவரது நிலைமை கணிசமாக மேம்பட்டுள்ளது.

சரியான நேரத்தில் உதவுவது குழந்தைகளை இறப்பு மற்றும் இயலாமையிலிருந்து காப்பாற்ற உதவும் என்பதற்கு இது ஒரு சான்று.

bbctamil


 Ai SONGS

 



Post a Comment

Previous Post Next Post