அரசின் அதிரடி மாற்றங்கள்- 3

அரசின் அதிரடி மாற்றங்கள்- 3


29 வாகனங்களைக் காணவில்லை!

ஜனாதிபதி அலுவலகத்தில் பாவனைக்கிருந்த 833 வாகனங்களில் 29 வாகனங்களைக் காணவில்லை! சில வாகனங்கள் யார் நிறுத்தியது என்று தெரியாது

கடந்த அரசாங்கங்களினால் பயன்படுத்தப்பட்ட சொகுசு வாகனங்களை அத்தியாவசிய சேவைகளுக்காக ஒதுக்குமாறு புதிய ஜனாதிபதி பணிப்புரை வழங்கியுள்ளார்.

மேல் மாகாண  ஆளுநர் ஹனிப் யூசூப்:

இலங்கையின் வர்த்தக துறையில் முக்கிய பிரமுகரரன ஹனிப் யூசூப்பை மேல் மாகாண ஆளுநராக ஜனாதிபதி அனுரகுமார நியமித்துள்ளார்.

அடுத்த வருடத்திற்கான எரிபொருள் பெற்றுக்கொள்வதில் புதிய அரசின் கவனம்:

இந்த நாட்டில் நுகர்வுக்கு போதுமான எரிபொருள் கையிருப்பு உள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் அதிகாரிகள், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு அறிவித்தனர்.

மக்களுக்குத் தடையின்றி எரிபொருளை வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் வினைத்திறனுடன் முன்னெடுப்பதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, அடுத்த வருடத்திற்குத் தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்வதில் கவனம் செலுத்துமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

சூரிய சக்தி பெனல்களை பிரிவெனாக்களுக்கு வழங்க ஏற்பாடு:

இந்திய உதவித்திட்டத்தின் கீழ் மின்சக்தி அமைச்சிற்குக் கிடைத்துள்ள சூரிய சக்தி பெனல்களை விரைவில் பிரிவெனாக்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரைவிடுத்த ஜனாதிபதி, சூரிய சக்தி பெனல்களை வழங்குவதற்கான திட்டமொன்றைத் தயாரிப்பதன் முக்கியத்து வத்தையும் எடுத்துரைத்தார்.

வெளிநாட்டு உதவி அடிப்படையில் மேற்கொள்ளப்படும் திட்டங்களை விரைவுபடுத்த நடவடிக்கை:

ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் கடனுதவிகளின் அடிப்படையில் செயல்படுத்தப்படும் திட்டங்களைத் துரிதப்படுத்துவதன் அவசியத்தை தெளிவுபடுத்திய ஜனாதிபதி, வெளிநாட்டு உதவியின் கீழ் செயற்படுத்தப்படும் திட்டங்களுக்கு மூன்று மாதங்களுக்குள் ஒப்புதல் வழங்க ஒரு குழுவை நியமிக்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். இதன் மூலம் வெளிநாட்டு உதவியின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் திட்டங்களை விரைவுபடுத்த முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கிராமிய அபிவிருத்தித் திட்டங்கள்:

கிராமிய அபிவிருத்தித் திட்டங்களை விரைவுபடுத்தி கிராமங்களை அபிவிருத்திக்கான வகையிலான முறைமையொன்றை ஏற்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, இதனூடாக பொருளாதாரத்தை விரைவாக பலப்படுத்த முடியும் என்று தெரிவித்துள்ளார். 

ரணிலுக்கு நன்றி தெரிவிப்பு:

எரிபொருளையும் பணத்தையும் சேமித்து வைத்து சென்றமைக்கு முன்னாள் ஜனாதிபதிக்கு புதிய ஜனாதிபதி நன்றி தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தை சீர்குலைக்கும் நோக்கில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செயற்படவில்லை எனவும், அதற்காக அவருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்பதை தேசிய செயற்குழு உறுப்பினர் சத்துரங்க அபேசிங்கவும்  தெரிவித்துள்ளார்.

இந்த வருடத்தின் எதிர்வரும் காலப்பகுதிக்கு தேவையான ஏற்பாடுகள் அரசாங்கத்திடம் உள்ளதாகவும், தெரண தனியார் தொலைக் காட்சியில் இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது சத்துரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.

வியக்க வைக்கும் வரலாற்றுப் பதிவு:

2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் 3.16 வீத வாக்குகளைப் பெற்ற அநுர 2024ல் 50 வீதத்துக்கு மேல் வாக்குகளை இலகுவாக பெற்று இலங்கையின் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார்.

3 வீதம் 50 வீதமான மாறுதல் என்பது சாதாரண விடயமல்; இது ஒரு வியக்க வைக்கும் வரலாற்றுப் பதிவு மட்டுமல்லாது மிகப்பெரும் சாதனையுமாகும்!

SLRC க்கு புதிய தலைவர்:

SLRC முன்னாள் திணைக்களத் தலைவரும், திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பு தொழில்நுட்பத் துறையின் குறிப்பிடத்தக்க நிறுவனர்களுள் ஒருவருமான கலாநிதி செனேஷ் திஸாநாயக்க பண்டார அவர்கள் இலங்கைத் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் துறையில் தீவிரமாகப் பங்காற்றி வருபவருமான இவர்,  இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக  நியமிக்கப்பட்டுள்ளார். 

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக களனிப் பல்கலைக்கழகத்தின் நாடகம், சினிமா மற்றும் தொலைக்காட்சித் துறையைச் சேர்ந்த கலாநிதி உதித கயாஷான் குணசேகர நியமிக்கப்பட்டார்.

புதிய பதில் பொலிஸ்மா அதிபர்:

பதில் பொலிஸ்மா அதிபராக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவை நியமித்துள்ளார். 

சபாநாயகர், துணை சபாநாயகர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் தவிர, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நியமிக்கப்பட்டிருந்த அனைத்து போலீஸ் மெய்ப்பாதுகாவலர்களும் உடனடியாக திரும்பப் பெறப்பட்டுள்ளனர்.

உர நிவாரணம் 25,000/- ஆக உயர்வு:

2024/25 பெரும்போகத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் உர நிவாரணத்தை ஒக்டோபர் 01 முதல்  ஹெக்டயாருக்கு 15,000 இருந்து 25000 வரை அதிகரிக்குமாறு திறைசேரிக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

வெளிநாடுகளிலிருந்து வரவழைக்கப்படவுள்ள அதிகாரிகள்!

கடந்த கால ஆட்சியிலிருந்த அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் அரசாங்கத்துக்கு நெருக்கமான முக்கியஸ்தர்களின் குடும்ப உறுப்பினர்கள் வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களில் முக்கிய பதவிகளில் அமர்த்தப்பட்டிருந்தனர்.

இவர்களைத் திருப்பி அழைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அத்துடன், அரசியல் செல்வாக்கின் அடிப்படையில் எந்தவொரு நியமனத்தையும் வழங்குவதில்லை என்ற நிலைப்பாட்டில் இப்போது அநுர அரசு உள்ளது.

எதிர்வரும் நாட்களில் அந்த இடங்களுக்கு இராஜதந்திர துறையில் அனுபவம் வாய்ந்தவர்கள் நியமிக்கப்படுவர்.

மீனவ சமூகத்திற்கு மானியம்:

ஒக்டோபர் 01ம் திகதி நடைமுறைக்கு வரும் வகையில் மீனவ சமூகத்திற்கு எரிபொருள் மானியத்தை வழங்குமாறு திறைசேரிக்கு புதிய ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.



 Ai SONGS

 



Post a Comment

Previous Post Next Post