Ticker

6/recent/ticker-posts

ஸஜித் கட்சிக்குள் ஊடுறுவியுள்ள சிலரால் அவரது வாக்குவங்கி சரிந்து, அநுர முன்னணிக்கு வருவாரா?


ஜனாதிபதித் தேர்தலில் ஸஜித் பிரேமதாஸவின்  பக்கம் முஸ்லிம் மக்கள் அதிகமாகச் சரிந்திருப்பதாக வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டபின்னர், மக்கள் கருத்துக்கள் வெளியாயின.

இருந்தாலும், முஸ்லிம் மக்களின் வாக்குகள் பிரதான மூன்று ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு மட்டும் பிரிந்து செல்கின்றது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

ஆரம்பத்தில் அதிகமான முஸ்லிம்கள் ஸஜித்தை ஆதரித்தமைக்கு  ராஜபக்ஷாக்கள் மற்றும் ரணில் விக்கிரமசிங்க  ஆகியோர் மீதான வெறுப்பு ஒரு காரணமாக இருந்ததெனலாம்.

இப்போது முஸ்லிம் ஆதரவாளர்களுட் சிலர் மெல்ல மெல்ல அநுரகுமாரவை நோக்கி நழுவ ஆரம்பித்துள்ளனர்.

இதற்கு முக்கிய காரணம் கடந்த காலங்களில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக துவேசக் கருத்துக்களை வெளியிட்டும், முஸ்லிம் சமூகத்துக்கு எதிராகப் பொய்ப் பிரசாரங்களை மேற்கொண்டும் வந்த சிலர், ஸஜித்தின் கட்சிக்குள் புகுந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் பதிவாகும் செய்திகளாகும்!

ஸஜித்திற்கு முஸ்லிம்களிடத்தில் இருக்கின்ற ஆதரவை இல்லாமலாக்கச் செய்வதற்காக இப்படியான செய்திகள் இணையத் தளத்தில் உலாவிடப்பட்டுள்ளதோ என்று கூட  எண்ணத் தோன்றுகின்றது!

இந்நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலகியிருந்த சம்பிக்க, மீண்டும் ஸஜித்தோடு இணைந்துள்ளார்; ஸஜித் ஜனாதிபதியானால் இவர் பிரதமராக நியமிக்கப்படலாம் என்ற செய்தியும் கசிந்துள்ளது.

"அல்-ஜிஹாத் அல்-கைதா " எனும் நூலை எழுதிய இவர், முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத கருத்துக்களை எழுத்து வடிவில் ஆவணப் படுத்தியவராவார்.
'முஸ்லிம்கள் வரலாறு இல்லாதவர்கள்' என குறிப்பிட்டுள்ள இவர், 2090ல் இலங்கை முஸ்லிம் நாடாக மாறும் என ஆரூடம்வேறு கூறியுள்ளார்.

பல முக்கிய இனவாத அமைப்புக்களை பின்புலமாக நின்று இயக்கியவராகக் கூறப்படும் இவர், ஸஜித் ஜனாதிபதியானால்,  பிரதமராகும் எண்ணத்தைக் குறி வைத்திருப்பதால், சிறுபான்மையினரின் ஆதரவு தேவை என்ற ஒரே காரணத்துக்காக இப்போது அமைதி காப்பதுபோல் தெரிகின்றது என்று முஸ்லிம் மக்கள் கருதுகின்றனர். 

முஸ்லிம்களுக்கு எதிராக பொய்ப் பிரசாரங்களில் ஈடுபட்ட நபர்களை உள்வாங்கியிருக்கும் ஸஜித்துக்குத் தமது பொன்னான வாக்குகளைக் கொடுத்து சமூகத்துரோகம் செய்யலாமா என்று முஸ்லிம் சமூக நலன்விரும்பிகள் கேள்வி எழுப்புகின்றனர்.

அத்துடன், சம்பிக்க போன்றோர் ஸஜித்துடன் இணைந்திருப்பது முஸ்லிம் சமூகத்தை சிந்திக்க வைக்க வைப்பதில் தவறிருப்பதாகவும் தெரியவில்லை!

எதிர்வரும் தேர்தலில் இலங்கை முஸ்லிம் சமூகம் ஸஜித் பிரேமதாஸவை ஆதரிப்பதைத் தவிர்ப்பது பொருத்தமானது என்று ஒருசில முஸ்லிம் சமூக நலன்விரும்பிகள் இப்போது மெல்ல மெல்ல சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றமை ஸஜித்தின் வாக்கு வங்கியில் சலனத்தை ஏற்படுத்துமா, என்ற கேள்வி எழுப்பப்படுவதோடு, இம்முறை ஜனாதிபதித் தேர்தல் ஒரு மாற்றத்துக்கான தேர்தலாக அமைய வேண்டுமென்பது நீதி, நியாயம், சமத்துவம், சமவுரிமையை ஆகியவற்றை விரும்பும் அனைவரினதும்  அவாவாகும்.
ஊழல், மோசடி, அதிகாரத் துஷ்பிரயோகம் இல்லாத ஆட்சியாளர்களினால் ஆளப்படுகின்ற ஒரு நாடாக இலங்கை வரவேண்டும்; அதற்கு ஒரு புதிய சக்தி அவசியம். அந்த சக்தி, 'தேசிய மக்கள் சக்தி'யிடம் காணப்படுவதாக மக்கள் நம்புகின்றனர். 

சுதந்திரத்துக்கப் பின் ஏழு தசாப்தத்திலும் இந்நாட்டை ஆட்சி செய்தவர்களினால் நாடும், மக்களும் எந்தவித நன்மையும் அடையவில்லை!

ஆனால், நன்மை அடைந்தவர்கள் யார் என்பதை இந்நாட்டு மக்கள் 'அரகலை' நிகழ்வுக்குப் பின்னர் நன்கு அறிந்து கொண்டனர்.

அதனால், அரசியல் மாற்றம் விரும்பும் மக்கள் இம்முறை சரியானதொரு முடிவை எடுக்காது விட்டால், இனிமேல் ஒருபோதும் எடுக்க முடியாது என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும்!

அத்தோடு, 'தேசிய மக்கள் சக்தி'யின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்காவின் தேர்தல் விஞ்ஞாபனத்திலுள்ள கோட்பாடுகளும், அவற்றை செயற்படுத்துவதற்கான வழிமுறைகளும், இந்நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் புதியதோர் அரசியல் கலாசாரத்தை உருவாக்கும் என்ற திடமான நம்பிக்கையை  மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது!

அந்த நம்பிக்கையின் அடிப்படையில் எந்தவொரு எதிர்பார்ப்புகளுமின்றி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் 'தேசிய மக்கள் சக்தி'யின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்கா மக்களால் ஆதரிக்கப்படும் சாத்தியக்கூறுகளே அதிகம் காணப்படுவதாக இதுவரை வெளியாகியுள்ள கருத்துக் கணிப்புக்கள் தெரிவிக்கின்றன!

செம்மைத்துளியான்



 Ai SONGS

 



Post a Comment

0 Comments