வீட்டில் அமைதி நிலவ வேண்டும் எனவும் எப்பொழுதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் எனவும் நினைப்பவர்கள் குடும்பத்தில் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். அப்பொழுதுதான் வீட்டில் சுமுகமான உறவு நிலை நீடிக்கும். அதற்கு நாம் செய்ய வேண்டியவை என்ன என்பதை இப்பதிவில் காண்போம்.
மதிப்பு கொடுங்கள்:
இப்பொழுதெல்லாம் திருமணமாகிவிட்டால் புதுமணத் தம்பதிகள், ‘வாடா, போடா, நீ, அவன், இவன் என்றும் கணவரின் பெயரைச் சொல்லி மனைவி அழைப்பது சகஜமாகிவிட்டது. இது பல பெரியவர்களுக்குப் பிடிப்பதில்லை. சொன்னால் தவறாக ஆகிவிடும் என்ற பயந்து கொண்டும் பம்மிக் கொண்டும் இருக்கிறார்கள். சிலர் வெளிப்படையாகவே மருமகளிடம் கூறி விடுவதும் உண்டு. ‘என் எதிரில் இதுபோல் என் மகனை வாடா போடா, அவன் இவன் என்று பேசாதே. தனியாக இருக்கும்பொழுது எப்படி வேண்டுமானாலும் பேசிக்கொள். பலர் முன்னிலையில் கொஞ்சம் மதிப்பு கொடுத்து பேசினால் உனக்கும் அதனால் கௌரவம் ஏற்படும். எங்களைப் போன்ற பெரியவர்களுக்கும் அது துன்பமாக இருக்காது’ என்று கூறுவதைக் கேட்க முடிகிறது.
ஆதலால் இதுபோன்ற விஷயங்களில் எல்லாம் கொஞ்சம் கவனம் செலுத்தினால் உறவுக்குள் விரிசல் வராமல் தடுக்கலாம். குழந்தைகளும், ‘அம்மா அப்பாவை பேசுவது போல்தான் நாமும் பேச வேண்டும்’ என்று எண்ணி சில குழந்தைகள் அப்பாவையே வாடா போடா என்பதையும் காண முடிகிறது. ஆதலால் இதை சற்று கவனத்தில் கொள்வது நல்லதுதான். குழந்தை வளர்ப்புக்கு இது மிகவும் அவசியமானதும் கூட.
விமர்சனம் வேண்டாம்:
எல்லோரிடமும் ஏதாவது ஒரு குறை இருக்கும். அந்தக் குறையை அவர்களால் மாற்றிக்கொள்ள முடியவில்லை என்றால் அதுதான் அவர்களின் இயல்பென்று அப்படியே ஏற்றுக்கொண்டு இருக்கப் பழகிக் கொண்டால் குற்றம், குறைகள் எல்லாம் காணாமல் போய்விடும். பளிச்சென்று அவர்களிடம் இருக்கும் நல்ல குணத்தை பிடித்துக்கொள்ள முயற்சி செய்தால் எப்பொழுதுமே இன்பமாக இருக்கலாம். ஆதலால் அதிகமான விமர்சனத்தை கைவிடுவது நல்லது.
எடை போடாதீர்கள்:
ஒருவர் நன்றாக வரையலாம், மற்றொருவர் நன்றாக சமைப்பார், சிலர் ஆடுவர், பாடுவர், எழுதுவர். ஆதலால் ஒரு விஷயத்தில் திறமையாக இல்லாதவர்கள் வேறு ஏதோ ஒன்றில் மிகப்பெரிய அளவில் சாதிக்கும் திறமை பெற்று இருக்கலாம். ஆதலால் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் வைத்து எவரையும் எடை போட்டு, இவர் எதற்கும் லாயக்கற்றவர் என்று ஒதுக்குவதைத் தவிர்ப்பது நல்லது.
புரிதல் அவசியம்:
அடுத்தவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்களோ என கவலையும் குழப்பமும் அடைந்து யார் எதை சொன்னாலும் அப்படியே பொறுத்துக் கொள்கிறேன் என்று கேட்டுக்கொண்டு போவதும் தவறுதான். இந்த எண்ணம் நம்மை முன்னேற விடாமல் தடுக்கலாம். ஆதலால் யார் எதைச் சொன்னாலும் எதற்காக அப்படிச் சொல்கிறார்கள் என்பதை விபரமாகக் கேட்டுத் தெரிந்து கொண்டு நடந்தால் உறவு மேன்மை அடையும். மேலும், ஒருவரைப் பற்றி ஒருவர் புரிந்து கொள்வதற்கு நல்ல சந்தர்ப்பமாகவும் அது அமையும்.
தன்னைப்போல் பிறரையும் நேசிப்பது:
நாமும் சில நேரங்களில் தவறுகள் செய்கிறோம். கோபப்படுகிறோம். குடும்பத்துக்காக பல விஷயங்களை விட்டுக்கொடுக்கிறோம். இப்படித்தான் எல்லோரும் இருப்பார்கள் என்பதை உணர்ந்து கொண்டால் எவரையும் அவரின் தவறுகளுக்காக வருந்த விட மாட்டோம். தன்னைப்போல்தான் அவர்களும் என்று நேசிக்க ஆரம்பிப்போம். ஆதலால் நம் கோணத்திலிருந்து அவர்களைப் பார்க்காமல் அவர்கள் கோணத்தில் இருந்தும் அவர்களைப் பார்க்க கற்றுக்கொள்வது மிக மிக அவசியம்.
kalkionline
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments