சவால் விட்ட வங்கதேசத்தை.. 11.5 ஓவரிலேயே நொறுக்கிய இந்தியா.. 2016ஐ மிஞ்சி மிகப்பெரிய சாதனை வெற்றி

சவால் விட்ட வங்கதேசத்தை.. 11.5 ஓவரிலேயே நொறுக்கிய இந்தியா.. 2016ஐ மிஞ்சி மிகப்பெரிய சாதனை வெற்றி

இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் அக்டோபர் ஆறாம் தேதி துவங்கியது. குஜராத் மாநிலம் குவாலியரில் இரவு 7 மணிக்கு தொடங்கிய அத்தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய வங்கதேசத்திற்கு துவக்க வீரர்கள் லிட்டன் தாஸ் 4, பர்வேஸ் ஹொசைன் 8 ரன்களில் அர்ஷ்தீப் வேகத்தில் அவுட்டானார்கள்.

அடுத்ததாக வந்த ஹ்ரிடாய் 12, முகமதுல்லா 1, ஜாகிர் அலி 8 ரன்களில் சீரான இடைவெளிகளில் ஆட்டமிழந்தனர். அதனால் 57-5 என தடுமாறிய வங்கதேசத்திற்கு நிதானமாக விளையாட முயற்சித்த கேப்டன் சாண்டோ 27 ரன்களில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் சுழலில் சிக்கினார். இறுதியில் நம்பிக்கை நட்சத்திரம் மெஹதி ஹசன் 35* ரன்கள் எடுத்தும் 19.5 ஓவரில் வங்கதேசம் 127 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

பந்து வீச்சில் அசத்திய இந்திய அணிக்கு 3 வருடங்கள் கழித்து விளையாடிய தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி 3, அர்ஷ்தீப் சிங் விக்கெட்டுகள் எடுத்தனர். அவர்களுடன் ஹர்திக் பாண்டியா, அறிமுக வீரர் மயங் யாதவ், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். அதைத்தொடர்ந்து 128 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு அதிரடியாக விளையாடி அபிஷேக் ஷர்மா 16 (7) ரன்களில் ரன் அவுட்டாகி ஏமாற்றத்துடன் சென்றார்.

இருப்பினும் அடுத்து வந்த கேப்டன் சூரியகுமார் யாதவ் தம்முடைய ஸ்டைலில் அதிரடியாக 2 பவுண்டரி 3 சிக்சருடன் 29 (14) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதே போல மறுபுறம் துவக்க வீரராக வாய்ப்பு பெற்று அதிரடியாக விளையாடிய சஞ்சு சாம்சன் தம்முடைய பங்கிற்கு 6 பவுண்டரியுடன் 29 (19) ரன்கள் குவித்து வெற்றியை உறுதி செய்து அவுட்டானார்.

இறுதியில் ஹர்திக் பாண்டியா அதிரடியாக 5 பவுண்டரி 2 சிக்ஸருடன் 39* (16), நிதிஷ் ரெட்டி 16* (15) ரன்கள் எடுத்ததால் 11.5 ஓவரிலேயே 132-3 ரன்கள் எடுத்த இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது. அதனால் 1 – 0 (3) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்ற இந்தியா தங்களை உலகின் நம்பர் ஒன் அணி என்பதையும் நிரூபித்துள்ளது.

குறிப்பாக டெஸ்ட் தொடரில் தோற்றாலும் டி20 தொடரில் இந்தியாவை வீழ்த்துவோம் என்று வங்கதேச கேப்டன் நஜ்முல் சாண்டோ சவால் விடுத்திருந்தார். ஆனால் அவருடைய தலைமையிலான வங்கதேசத்தை முதல் போட்டியிலேயே அடித்து நொறுக்கிய இந்தியா 49 பந்துகள் மீதம் வைத்து வென்றுள்ளது.

இதனால் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100க்கும் மேற்பட்ட ரன்கள் இலக்கை சேசிங் செய்த போட்டியில் அதிக பந்துகளை மீதம் வைத்து இந்தியா தங்களுடைய மிகப்பெரிய சாதனை வெற்றிஎவு பெற்றுள்ளது. இதற்கு முன் கடந்த 2016ஆம் ஆண்டு ஹராரே நகரில் ஜிம்பாப்வே அணிக்கு 100 ரன்களை சேசிங் செய்யும் போது எதிராக 41 பந்துகள் மீதும் வைத்து வென்றதே முந்தைய சாதனையாகும்.

crictamil


 



Post a Comment

Previous Post Next Post