அரசின் அதிரடி மாற்றங்கள்-12

அரசின் அதிரடி மாற்றங்கள்-12


ஈஸ்டர் தாக்குதல்
ஜனாதிபதி அநுரகுமார, ஈஸ்டர் தாக்குதலில் காயமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுடன் கடந்த 2024 10.06 அன்று நீர்க்கொழும்பு, கட்டுவாபிட்டிய சென். செபஸ்தியன் தேவாலயத்தில் கலந்துரையாடியதோடு, கட்டுவாபிட்டிய தேவாலயத்தில் ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக அமைக்கப்பட்டிருக்கும் நினைவுத் தூபிக்கும் மலர் அஞ்சலி செலுத்தினார்.

இந்நாட்டில் அண்மைய காலத்தின் மிக மோசமான அழிவு 2019 ஏப்ரல் 21ம் திகதி நிகழ்ந்தது என்றும் அந்த விடயங்கள் புதையுண்டு அழிவதற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என்றும் உறுதியளித்த அவர், ஜனாதிபதி தேர்தலில் மக்கள் தனக்கு வாக்களித்ததன் பின்னணியில் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான நீதியும் நியாயமும் நிலைநாட்டப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்ததாக நம்புவதாகவும் கூறினார்.

இந்நாட்டு மக்களின் நோக்கங்களும், எதிர்பார்ப்புக்களும், தான் கொண்டிருக்கும் நோக்கங்கள் மற்றும் எதிர்பார்ப்புக்களுக்கு மாறுபட்டவை அல்லவெனவும், ஈஸ்டர் தாக்குதல் குறித்து மக்கள் எதிர்பார்க்கும் நீதியும் நியாயமும் நிலைநாட்டப்படவுள்ளதாகவும், அதற்கான முன்னெடுப்புக்கள் தற்போதும் ஆரம்பிக்கப்பட்டுள்ளயாகவும் கூறினார்.

அடுத்தபடியாக, 274க்கும் மேற்பட்டவர்களின் உயிர்களை பறித்த மற்றும் பெருமளவானவர்களை காயத்துக்குள்ளாக்கிய அழிவினால் பாதிக்கப்பட்டவர்கள்,  தமது அன்புக்குரியவர்கள் மீது கொண்டிருக்கும் அன்புக்கான நீதியை நிலைநாட்ட வேண்டியதன் அவசியம் என்பதையும் வலியுறுத்தினார்.

இலங்கையின் சாதகமான 
அணுகுமுறைக்கு IMF பாராட்டு:

அரசாங்கத்தின் எதிர்கால செயற்திட்டம் குறித்து ஆராய்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்டக் குழுவொன்று கடந்த 2024.10.02 அன்று இலங்கைக்கு விஜயம் செய்தது. திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் 2.9 பில்லியன் டொலர் நீட்டிக்கப்பட்ட நிதி வசதியின் நான்காவது தவணையைப் பெறுவது பற்றி ஆராய்வதே இந்த விஜயத்தின் நோக்கமாக இருந்தது.

இலங்கை தொடர்பான சாதகமான அணுகுமுறையை அதிகரித்து தற்போதைய அரசாங்கத்தின் கீழ் நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய சீர்திருத்தங்கள் தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் பாராட்டுத் தெரிவித்தனர்.

பொருளாதார ஸ்தீரத்தன்மைக்கான இலங்கையின் அர்ப்பணிப்பு மற்றும் சர்வதேசத்தின் தொடர்ச்சியான ஆதரவை நோக்கி ஒரு தீர்க்கமான முன்னெடுப்பு பற்றியும் இங்கு கோடிட்டுக் காட்டப்பட்டது.

சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஷ்ட தூதுக் குழு தலைவர் Dr. பீட்டர் ப்ரூவர், வதிவிடப் பிரதிநிதி கலாநிதி சர்வத் ஜஹான் மற்றும் பொருளாதார நிபுணர் மானவி அபேவிக்ரம ஆகியோர் இடம்பிடித்ததோடு இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி, ஹர்சன சூரியப்பெரும, பொருளாதாரக் கொள்கைப் பேரவையின் தலைவரும் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான Dr அனில் ஜெயந்த, பொருளாதாரக் கொள்கை தொடர்பான பேரவையின் பிரதான உறுப்பினர்களான சுனில் ஹந்துந்நெத்தி, பேராசிரியர் சீதா பண்டார ரணதுங்க, சுனில் கமகே, ஜனாதிபதி சிரேஷ்ட ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ, கலாநிதி நந்தசிறி கிஹிம்பியஹெட்டி, பேராசிரியர் ஓ.ஜி.தயாரத்ன பண்டா, அமரசேன அத்துகோரள ஆகியோர் கலந்துகொண்டனர்.

நூற்றாண்டு கனவு நனவாகியுள்ளது.

"நாம் கண்ட நூற்றாண்டு கனவு நனவாகியுள்ளது” என அநுர குமார திசநாயக பேசியுள்ளார்.

மாற்றம் வேண்டி, புதியவருக்கு வாய்ப்புக் கொடுத்துள்ள மக்களின் தீர்ப்பு இதுவென்றாலும், அம்மக்களின் தேவைகள், எதிர்பார்ப்புகளையும் தீர்க்க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இப்புதிய அரசு என்னென்ன முன்னெடுப்புகளை மேற்கொள்ளும் என்ற எதிர்பார்ப்புகளும் எழுந்துள்ளன. அண்டை நாடுகளும் புதிய அரசின் நடவடிக்கைகளை உற்று நோக்கிய வண்ணம் உள்ளதாக தகவல் வெளியாகிறது.




 



Post a Comment

Previous Post Next Post