மனுஷனா நீ.. கடைசி வரை நாட் அவுட்.. 4 சிக்ஸ், 25 பவுண்டரி.. 222 ரன்களை விளாசிய சர்ஃபராஸ் கான்!

மனுஷனா நீ.. கடைசி வரை நாட் அவுட்.. 4 சிக்ஸ், 25 பவுண்டரி.. 222 ரன்களை விளாசிய சர்ஃபராஸ் கான்!


லக்னோ: இராணி கோப்பையில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 537 ரன்கள் குவித்துள்ளது. சிறப்பாக ஆடிய இளம் நட்சத்திர வீரரான சர்ஃபராஸ் கான் 286 பந்துகளில் 4 சிக்ஸ், 25 பவுண்டரி உட்பட 222 ரன்களை விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்துள்ளார்.

இராணி கோப்பையில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியை எதிர்த்து மும்பை அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய மும்பை அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 237 ரன்களை குவித்தது. தொடர்ந்து நடந்த 2வது நாள் ஆட்டத்தில் சிறப்பாக ஆடிய ரஹானே 97 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் தனுஷ் கோட்டியானுடன் இணைந்து சர்ஃபராஸ் கான் பொளந்து கட்டினார்.

149 பந்துகளில் சதத்தை எட்டிய சர்ஃபராஸ் கான், அதன்பின் அதிரடிக்கு திரும்பினார். ஸ்பின்னர்களை பவுண்டரியும், சிக்சருமாய் வெளுத்து கட்டிய அவர், 203 பந்துகளில் 150 ரன்களை கடந்தார். இதனால் மும்பை அணியின் ஸ்கோர் 400 ரன்களை கடந்தது. பின்னர் கியரை மாற்றிய சர்ஃபராஸ் கான் 253 பந்துகளில் இரட்டை சதத்தை எட்டினார். 2வது நாள் முடிவில் மும்பை அணி 536 ரன்கள் எடுத்து 9 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

சிறப்பாக ஆடிய சர்ஃபராஸ் கான் 221 ரன்களுடன் களத்தில் இருந்தார். இந்த நிலையில் 3வது நாள் ஆட்டம் தொடங்கியது. இன்றைய நாளின் 3வது ஓவரிலேயே ஜுனத் கான் ஆட்டமிழக்க, மும்பை அணி முதல் இன்னிங்ஸில் 537 ரன்களை குவித்து ஆல் அவுட்டாகியது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த சர்ஃபராஸ் கான் 286 பந்துகளில் 4 சிக்ஸ், 25 பவுண்டரி உட்பட 222 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி தரப்பில் முகேஷ் குமார் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். லக்னோ பிட்ச் பேட்ஸ்மேன்களுக்கு உதவி செய்த பட்சத்தில், மும்பை அணி முதல் இன்னிங்ஸிலேயே பிரம்மாண்ட ஸ்கோரை பதிவு செய்துள்ளது. இந்தப் போட்டியில் இரட்டை சதம் விளாசியதன் மூலமாக சர்ஃபராஸ் கான், கிட்டத்தட்ட நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் இடத்தை உறுதி செய்துவிட்டதாகவே பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் சர்ஃபராஸ் கான் சதம் அடித்த பின் அவரின் ஆட்டம் வேறு லெவலுக்கு சென்றதையும் பார்க்க முடிந்தது. சாதாரணமாக சதமடித்த பின் வீரர்கள் சோர்வில் சில தேவையில்லாத ஷாட்களை விளையாடி ஆட்டமிழந்து வெளியேறுவார்கள். ஆனால் சர்ஃபராஸ் கான் சதத்தை பெரிய ஸ்கோராக மாற்றக் கூடியவராக இருக்கிறார்.

இதனால் வரும் காலத்தில் இந்திய அணியின் மிடில் ஆர்டரில் முக்கியமான வீரராக இருப்பார் என்று பார்க்கப்படுகிறது. கேஎல் ராகுல், விராட் கோலி உள்ளிட்ட வீரர்களுக்கு நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் ஏதேனும் ஒரு போட்டியில் ஓய்வு கொடுக்கப்பட்டால், நிச்சயம் அந்த இடத்தில் சர்ஃபராஸ் கான் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கலாம்.


mykhel



 



Post a Comment

Previous Post Next Post