Ticker

6/recent/ticker-posts

வேலைக்காக விண்ணப்பித்த பெண்ணுக்கு 48 ஆண்டுக்கு பிறகு கிடைத்த பதில் - என்ன தெரியுமா?


தனது கனவு வேலைக்கான விண்ணப்பத்திற்கு ஏன் இன்னும் பதில் வரவில்லை என்று 48 ஆண்டுகளாக யோசித்து கொண்டிருந்த பெண் ஒருவர் அதற்கான காரணத்தை இறுதியாக கண்டுபிடித்துள்ளார்.

பிரிட்டனின் லிங்கன்ஷரில் உள்ள கெட்னி ஹில் பகுதியில் 70 வயதான டிஸி ஹாட்சன் வசித்து வருகிறார். தனது தபால் பெட்டியை அவர் திறந்து பார்த்த போது, 1976-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மோட்டார் சைக்கிள் ஸ்டண்ட் ரைடர் வேலைக்காக அவர் விண்ணபித்து இருந்த கடிதம் இருந்தது.

இத்தனை ஆண்டுகளாக இந்த கடிதம், தபால் அலுவலகத்தில் உள்ள டிராயருக்கு பின்னால் சிக்கி இருந்தது. அதை தபால் நிலையம் கண்டறிந்து டிஸி ஹாட்சனுக்கு தற்போது அனுப்பி உள்ளது.

இந்த வேலை அவருக்கு கிடைக்காமல் இருந்த போதிலும், இதற்காக அவர் சோர்வு அடையாமல், வேறு வேலை தேடினார். அதில் ஒரு வேலை கிடைத்து, அவர் உலகம் முழுவதும் பயணித்து ஒரு துணிச்சலான வாழ்க்கையை வாழ்ந்தார்.

இந்த கடிதம் திருப்பி கிடைத்ததை ஒரு அற்புதமான நிகழ்வு என்று அவர் விவரிக்கின்றார்.

"இவ்வளவு நாளாக எனக்கு ஏன் அந்த வேலையைப் பற்றி பதில் வரவில்லை என்று யோசித்துக்கொண்டிருந்தேன். இப்போது அதற்கான பதில் கிடைத்துவிட்டது", என்று டிஸி ஹாட்சன் கூறுகிறார்.

அந்த கடிதத்தின் மேல் கையால் எழுதப்பட்ட குறிப்பு ஒன்று இருந்தது.

அதில், "ஸ்டெயின்ஸ் தபால் அலுவலகத்தால் தாமதமாக டெலிவரி செய்யப்பட்டுள்ளது. அலுவலகத்தில் உள்ள ஒரு டிராவின் பின்னால் இந்த கடிதம் கண்டுபிடிக்கப்பட்டது. வெறும் சுமார் 50 வருடங்கள் மட்டும் தாமதமாகிவிட்டது", என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

டிஸி ஹாட்சனுக்கு இந்த கடிதத்தை யார் திருப்பி அனுப்பினார்கள், எப்படி அது அவரிடம் வந்து சேர்ந்தது என்பது தெரியவில்லை.

"நான் கிட்டதட்ட 50 முறை எனது வீட்டை மாற்றியுள்ளேன், மேலும் நான்கு அல்லது ஐந்து முறை வெவ்வேறு நாடுகளுக்கு இடம் பெயர்ந்துள்ளேன், ஆனாலும் என்னை எவ்வாறு கண்டுபிடித்தார்கள் என்பது மர்மமாகவே இருக்கிறது", என்று அவர் கூறினார்.

"இத்தனை ஆண்டுகள் கழித்து அதை எனக்கு திருப்பி அனுப்பியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது"

"நான் லண்டனில் உள்ள எனது வீட்டில் அமர்ந்து இந்த கடிதத்தை டைப் செய்தது எனக்கு மிகவும் தெளிவாக நினைவிருக்கிறது".

"ஒவ்வொரு நாளும் இந்த வேலை விண்ணப்பத்திற்கு பதில் வரும் என்று ஆவலுடன் தபால் பெட்டியில் தேடி பார்ப்பேன். ஆனால் அங்கு எதுவும் இல்லாததால், நான் மிகவும் ஏமாற்றமடைந்தேன். ஏனென்றால் நான் ஒரு மோட்டார் சைக்கிளில் ஸ்டண்ட் ரைடராக இருக்க மிகவும் விரும்பினேன்".

இந்த விண்ணப்பத்திற்கான பதில் வராமல் இருந்தபோதிலும் டிஸி ஹாட்சன் தொடர்ந்து மற்ற வேலைகளுக்கு முயற்சி செய்துகொண்டிருந்தார்.

"நான் ஸ்டண்ட் ரைடர் வேலைக்காக விண்ணப்பிக்கும்போது, விளம்பரம் செய்பவர்களுக்கு நான் பெண் என்று தெரியாமல் இருக்க வேண்டும் என்பதில் நான் மிகவும் கவனமாக இருந்தேன், இல்லையென்றால் வேலைக்கான நேர்காணலுக்கு கூட அழைப்பு வராது நினைத்தேன்", என்று தனது தொழில் வாழ்க்கையை டிஸி ஹாட்சன் நினைவு கூர்கிறார்.

அவர் ஆப்பிரிக்காவுக்குச் சென்று, அங்கு பாம்புகளை கையாளுபவராகவும், குதிரைகளை மேய்ப்பாளராக பணிபுரிந்தார். மேலும் அவர் விமானங்களை ஓட்ட கற்றுக்கொண்டு விமானியாகவும், விமான பயிற்றுநராகவும் பணிபுரிந்தார்.
"இந்த தொழில் செய்வதால் எலும்பு முறிவு ஏற்படுவது எனக்கு பழக்கமாகிவிட்டது. அதனால் எத்தனை எலும்பு உடைந்தாலும் அதை நான் பொருட்படுத்துவதில்லை என்று நான் விண்ணப்பதில் அவர்களிடம் சொல்லி இருக்கிறேன்".

"இவ்வளவு காலத்திற்குப் பிறகு அந்த கடிதத்தை திரும்பப் பெறுவது நம்பமுடியாததாகத இருக்கிறது".

"என்னால் எனது இளமை காலத்துடன் பேச முடிந்தால், அவளிடம் சென்று நான் செய்த அனைத்தையும் செய்ய வேண்டும் என்று கூறுவேன். சில எலும்பு முறிவுகள் ஏற்பட்டு இருந்தாலும், சிறப்பான வாழ்க்கை எனக்கு அமைந்தது" என்கிறார் அவர்.

எழுதியவர்,ஜேக் சக்கர்மேன்
பதவி,பிபிசி செய்திகள்
bbctamil



 Ai SONGS

 



Post a Comment

0 Comments