556 ரன்ஸ்.. பாகிஸ்தான் அபாரம்.. சூர்யகுமார் போல மாஸ் காட்ட நினைத்த இங்கிலாந்து வீரர்.. கடைசியில் ட்விஸ்ட்

556 ரன்ஸ்.. பாகிஸ்தான் அபாரம்.. சூர்யகுமார் போல மாஸ் காட்ட நினைத்த இங்கிலாந்து வீரர்.. கடைசியில் ட்விஸ்ட்

பாகிஸ்தானுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இங்கிலாந்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. அத்தொடரின் முதல் போட்டி அக்டோபர் ஏழாம் தேதி முல்தான் நகரில் துவங்கியது. அதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தானுக்கு சாய்ம் ஆயுப் 4 ரன்களில் அவுட்டானார்.

இருப்பினும் அடுத்ததாக வந்த கேப்டன் ஷான் மசூத் நங்கூரமாக விளையாடி 4 வருடங்கள் கழித்து சதமடித்து 151 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவருடன் சேர்ந்து மறுபுறம் நங்கூரமாக விளையாடிய மற்றொரு துவக்க வீரர் அப்துல்லா ஷபிக் தம்முடைய பங்கிற்கு சதமடித்து 102 ரன்கள் விளாசி அவுட்டானார். மிடில் ஆர்டரில் பாபர் அசாம் 30, முகமது ரிஸ்வான் 0 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

ஆனால் மற்றொரு வீரர் சௌத் ஷாக்கில் அரை சதமடித்து 82 ரன்கள் குவித்தார். அது போக 8வது இடத்தில் களமிறங்கிய ஆகா சல்மான் தம்முடைய பங்கிற்கு இங்கிலாந்தை பந்தாடி சதமடித்து 104* (119) ரன்கள் குவித்தார். அப்படி பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடியதால் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் 556 ரன்கள் குவித்து அவுட்டானது.

இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக ஜாக் லீச் 3, பிரைடன் கார்ஸ் 2, கஸ் அட்கின்சன் 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அதைத்தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து இரண்டாவது நாள் முடிவில் 96-1 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் ஓலி போப் டக் அவுட்டான அந்த அணிக்கு களத்தில் ஜாக் கிராவ்லி 64*, ஜோ ரூட் 32* ரன்கள் எடுத்து திருப்பி அடித்து வருகிறார்கள்.

முன்னதாக இந்தப் போட்டியில் ஜேக் லீச் வீசிய 117வது ஓவரின் 3வது பந்தில் ஆஹா சல்மான் சிக்ஸர் அடித்தார். அதை பவுண்டரி எல்லையில் இங்கிலாந்து வீரர் கிறிஸ் ஓக்ஸ் 2024 டி20 உலகக் கோப்பை ஃபைனலில் டேவிட் மில்லர் கொடுத்த கேட்ச்சை சூரியகுமார் பிடித்தது போல பந்தை தாவிப்பிடித்தார். ஆனால் பேலன்ஸ் செய்ய முடியாததால் பந்தை களத்திற்குள் தூக்கிப் போட்ட அவர் பவுண்டரிக்குள் சென்றார்.

பின்னர் மீண்டும் களத்திற்குள் தாவிய அவர் பந்தை பிடித்ததால் இங்கிலாந்து அணியினர் விக்கெட் கிடைத்ததாக கொண்டாடினர். அதை மூன்றாவது நடுவர் சோதித்த போது நேர்கோணத்தில் கேட்ச் போல நன்றாக தெரிந்தது. இருப்பினும் பின்பகுதி கோணத்தில் கிறிஸ் ஓக்ஸ் பந்தை பிடிக்கும் போது அவருடைய ஒரு கால் தரையில் இருந்தது நன்றாக தெரிந்தது. குறிப்பாக பந்தை பிடிப்பதில் கவனம் செலுத்திய அவர் காலை வேகமாக தூக்க தவறினார். அதனால் சூரியகுமார் போல கேட்ச் பிடிக்க தவறியதால் அதை நடுவர் அவுட்டில்லை என்று அறிவித்தார்.

crictamil



 



Post a Comment

Previous Post Next Post