டைனோசர்களின் அழிவுக்கு காரணமாக அமைந்தது, 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியைத் தாக்கிய சிறுகோள் (Asteroid) ஒன்று. ஆனால் அந்த ஒரு சிறுகோள் மட்டும் பூமியைத் தாக்கவில்லை, குறுகிய கால இடைவெளியில் மற்றொரு சிறுகோளும் பூமியில் மோதியுள்ளது என்று விஞ்ஞானிகள் குழு உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த சிறுகோள் மேற்கு ஆப்பிரிக்காவின் கடற்கரைக்கு அருகில் கடலில் விழுந்துள்ளது. இதனால் அப்போது ஒரு மிகப்பெரிய பள்ளமும் ஏற்பட்டுள்ளது.
ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, இது அட்லாண்டிக் பெருங்கடலை கடந்து சென்றிருக்கக் கூடிய, குறைந்தபட்சம் 800 மீட்டர் உயரமுள்ள சுனாமியை உருவாக்கும் திறன் கொண்ட ஒரு ‘பேரழிவு நிகழ்வாக’ இருந்திருக்கும்.
“இந்த நிகழ்வு 450-500 மீட்டர் அகலம் கொண்ட நாதிர் (Nadir) என்ற பள்ளத்தை உருவாக்கியது. இந்த சிறுகோள் மணிக்கு 72,000 கிமீ வேகத்தில் பூமியில் மோதியதாக நம்பப்படுகிறது.”
‘நாதிர் பள்ளம்’
நாதிர் பள்ளத்தின் புகைப்படங்கள் எதுவும் இல்லை, ஆனால் ஆஸ்திரேலியாவில் உள்ள காஸ்ஸஸ் பிளஃப் (Gosses Bluff) பள்ளம் அதை மிகவும் ஒத்திருக்கிறது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்
ஸ்காட்லாந்தில் உள்ள ஹெரியட்-வாட் பல்கலைக் கழக முனைவர் ஊஸ்டன் நிக்கல்சன் 2022இல் நாதிர் பள்ளத்தைக் கண்டுபிடித்தார், ஆனால் அது உண்மையில் எப்படி உருவானது என்பது தெரியவில்லை.
இப்போது, நிக்கல்சனும் அவரது சகாக்களும் ‘ஒரு சிறுகோள் கடற்பரப்பில் மோதியதால்தான் இந்த 9 கி.மீ பள்ளம் ஏற்பட்டது’ என்று உறுதியாக நம்புகிறார்கள்.
ஒரு சிக்கல் என்னவென்றால், இது எப்போது நிகழ்ந்தது என்பதை விஞ்ஞானிகளால் சரியாகக் கண்டறிய முடியவில்லை. டைனோசர்களின் அழிவுக்கு முன்னரா அல்லது அதற்குப் பிறகா என்பது துல்லியமாக தெரியவில்லை.
டைனோசர்களை அழித்த அந்த சிறுகோள், தென்கிழக்கு மெக்சிகோவில் 180 கிமீ அகலம் கொண்ட சிக்சுலுப் (Chicxulub) என்ற பள்ளத்தை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு குறுகிய இடைவெளியில் பூமியைத் தாக்கிய இரு சிறுகோள்கள்
பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்தவுடன், அந்த சிறுகோள் ஒரு தீப்பந்தமாக உருமாறியிருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்
ஆப்பிரிக்க கடற்கரையில் மோதிய இந்த சிறுகோளை ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள், டைனோசர்கள் அழிந்துபோன ‘கிரெட்டேசியஸ்’ (Cretaceous) காலத்தின் இறுதியில் இந்த சிறுகோள் பூமியில் மோதியிருக்கும் என்று கூறுகிறார்கள். பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்தவுடன், அது ஒரு தீப்பந்தமாக உருமாறியிருக்கும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
“உதாரணத்திற்கு அந்த சிறுகோள் கிளாஸ்கோவை (ஸ்காட்லாந்தில் உள்ள நகரம்) தாக்குகிறது, நீங்கள் அங்கிருந்து 50 கிமீ தொலைவில் உள்ள எடின்பரோ நகரில் இருக்கிறீர்கள் என்று கற்பனை செய்து கொள்ளுங்கள். அங்கிருந்து பார்த்தால், வானத்தில் உள்ள சூரியனை விட 24 மடங்கு பெரியதாகவும், எடின்பரோவில் உள்ள அனைத்து மரங்கள் மற்றும் தாவரங்கள் தீப்பற்றி எரிய போதுமானதாகவும் அந்த நெருப்பு பந்து இருந்திருக்கும்" என்று நிக்கல்சன் விளக்குகிறார்.
இதனால் காற்றில் மிகவும் வலுவான ஒரு வெடிப்பு (Air burst) ஏற்பட்டிருக்கும் என்றும், அதைத் தொடர்ந்து 7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தை ஒத்த ஒரு நில அதிர்வும் ஏற்பட்டிருக்கும் என கருதப்படுகிறது.
கடலுக்கு அடியில் இருந்து பெருமளவிலான நீர் வெளியேறி, பின்னர் பெரும் அலைகளாக கீழே மோதி, தனித்துவமான தடங்களை உருவாக்கியது.
இரண்டு பெரிய சிறுகோள்கள் நமது கிரகத்தை இவ்வளவு குறுகிய கால இடைவெளியில் தாக்குவது அசாதாரணமானது.
இந்த இரண்டு சிறுகோள்களும் குறுகிய கால இடைவெளியில் பூமியில் மோதியது ஏன் என்பது ஆராய்ச்சியாளர்களுக்குத் தெரியவில்லை.
இதுபோன்ற நிகழ்வு மீண்டும் நடக்குமா?
ஏறக்குறைய இதே அளவிலான ஒரு நிகழ்வை மனிதகுலம் 1908 ஆம் ஆண்டு கண்டது. சைபீரியாவின் வளிமண்டலத்தில் 50 மீட்டர் சிறுகோள் ஒன்று நுழைந்தது, துங்குஸ்கா நிகழ்வு (Tunguska event) என்று அழைக்கப்படுகிறது.
தற்போது பூமிக்கு மிக அருகில் ‘பென்னு’ (Bennu) எனும் மிகவும் ஆபத்தான சிறுகோள் ஒன்று சுற்றி வருகிறது. நாதிர் பள்ளத்தாக்கை உருவாக்கிய சிறுகோள் ஏறக்குறைய பென்னுவின் அளவைக் ஒத்திருக்கும்.
நாசாவின் கூற்றுப்படி, 2182ஆம் ஆண்டில் செப்டம்பர் 24ஆம் தேதி பென்னு சிறுகோள் பூமியுடன் மோதக்கூடும். ஆனால் இதற்கான வாய்ப்பு என்பது 2,700இல் 1 சதவீதம் மட்டுமே.
மனித வரலாற்றில் இந்த அளவிலான சிறுகோள் தாக்கம் இருந்ததில்லை. இந்த நிகழ்வுகளை புரிந்து கொள்ள விஞ்ஞானிகள் பூமியில் உள்ள பள்ளங்கள் அல்லது பிற கிரகங்களில் உள்ள பள்ளங்களின் படங்களை ஆய்வு செய்ய வேண்டியுள்ளது.
நாதிர் பள்ளத்தை நன்கு புரிந்து கொள்ள, நிக்கல்சனும் அவரது குழுவினரும் டிஜிஎஸ் (TGS) என்ற புவி இயற்பியல் நிறுவனத்தில் இருந்து பெறப்பட்ட உயர் தெளிவுத்திறன் (Resolution) கொண்ட 3டி தரவை ஆய்வு செய்தனர்.
பெரும்பாலான பள்ளங்கள் அரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளன, ஆனால் இந்த நாதிர் பள்ளம் சேதமில்லாமல் இருப்பது, விஞ்ஞானிகள் பாறைகளை ஆழமாக ஆராய அனுமதிக்கிறது.
"இது போன்ற சிறுகோள் மோதியதால் ஏற்பட்ட ஒரு பள்ளத்தின் உட்புறத்தை நாம் பார்ப்பது இதுவே முதல் முறை. இது மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது," என்று நிக்கல்சன் கூறுகிறார்.
பூமியில் வெறும் 20 கடல் பள்ளங்கள் உள்ளன, அவற்றில் எதுவுமே இதுபோன்ற முழுமையான ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்படவில்லை என்றும் நிக்கல்சன் கூறுகிறார்.
நிக்கல்சன் மற்றும் அவரது குழுவின் ஆராய்ச்சி முடிவுகள் ‘நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் எர்த் & என்விரான்மென்ட்’ அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளன.
ஜார்ஜினா ரன்னார்ட்
பதவி,அறிவியல் நிருபர், பிபிசி நியூஸ்
bbctamil
0 Comments