கண்டி மாவட்டத்திற்கு நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தை தேசிய மக்கள் சக்தி பெற்றுக்கொள்வதன் மூலம் சமூகத்தின் தேவைகளை வினைத்திறனுடன் நிவர்த்தி செய்துகொள்ள முடியும் என்று பலரும் இப்போது நினைத்து வருகின்றனர். காரணம், தற்போதைய அரசியல் சூழலில், அநுரகுமார திஸாநாயக்கவின் தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கண்டியில் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தைப் பெறுவதற்காக இரண்டு முஸ்லிம்கள் களமிறக்கப் பட்டுள்ளமையாகும்.
வேறு பல கட்சிகளிலிருந்தும், சுயேட்சையாகவும் பலர் களமிறங்கியிருந்தாலும், ஜனாதிபதி தேசிய மக்கள் சக்தியிலிருந்து வந்தவர் என்பதால், வாக்காளப் பெருமக்கள் அக்கட்சிக்கே தமது வாக்குகளைப் போட்டுவிடுவார்கள் என்று தப்புக் கணக்குப் போட்டு வருகின்றனர்.
ஆனால், எதிர்கால நாடாளுமன்றத்துக்குள் எதிர்க்கட்சி, பலம்மிக்க ஒன்றாக அமைய வேண்டுமென்று எதிர்மறையாகச் சிந்திக்கும் வாக்காளப் பெருமக்களும் கணிசமாக உள்ளனர் என்பதனை களமிறங்கியுள்ள புத்தம் புதிய வேட்பாளர்கள் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. அத்துடன் வாக்காளர்களைக் குறைமதிப்பீடு செய்து விடக்கூடாது!
புதிய ஜனாதிபதி சொன்னதை செய்து விடுவார் என்ற பதட்டமும், அவர் சொன்னதை செய்துவிடக் கூடாது என்ற எதிர்பார்ப்பும் கொண்ட பலரிடத்தில் மேலோங்கியிருக்கிறது.
புதிய ஜனாதிபதியின் வருகையானது, கடந்த அரசாங்கங்களை மௌனித்தே கடந்துவந்த எம்மைப் பேசவும், கேள்விகள் கேட்கவும் வைத்திருப்பது நிதர்சனமாக இருந்தாலும், ஜனநாயக ரீதியாக அவரைப் பலவீனப்படுத்தும் சந்தர்ப்பத்தை நாடாளுமன்றத் தேர்தல் மக்களுக்கு அளித்துள்ளது; அதனால், பெரும்பான்மை எதிர்க்கட்சிப் பலத்தைப் பெற்று அவரை செல்லாக் காசாக்கும் முயற்சிகள் திரைமறைவில் நடந்து கொண்டுதான் வருகின்றன.
எது எவ்வாறிருந்தபோதிலும், தேசிய மக்கள் சக்தியின் வெற்றிச் சந்தர்ப்பத்தை, பிரதேசத்திலுள்ள வளங்களை முறையாகப் பயன்படுத்திக் கொள்வதற்கும், பிரதேசத்துக்குத் தேவையான நல்ல பல வேலைத் திட்டங்களை முன்னெடுக்க வைப்பதற்கும் ஒரு வாய்ப்பாகக்கிக் கொள்ள வேண்டியது சமூகத்தின் கடப்பாடாகும்.
கண்டி நகரில் முஸ்லிம்களுக்கென பிரத்தியேகமான ஆண்கள் பாடசாலையொன்று இல்லாமை கண்டிப் பிரதேச முஸ்லிம்களின் நீண்ட காலப் பிரச்சினைகளுள் ஒன்றாகவும், குறையாகவும் சுட்டிக்காட்டப்படு வருகின்றது! இதனை நிவர்த்தி செய்து கொள்வதற்கு வேட்பாளர்களைத் தூண்டவைப்பது கண்டிப் பிரதேச முஸ்லிம் சமூகத்தின் இப்போதைய முக்கிய பொறுப்பாகும்.
அத்துடன், கண்டிப் பிரதேச முஸ்லிம் பாடசாலைகளின் கல்விக்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டிய சூழ்நிலையும் வெகுவாகக் காணப்படுகின்றது. குறிப்பாக, டிஜிட்டல் தொழில்நுட்பக் கல்வியை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட வேலைத் திட்டங்களில் புதிய ஜனாதிபதி தீவிரமாக ஆர்வம் கொண்டுள்ளார். எமது பாடசாலைகளிலும் இத்தொழில்நுட்பக் கல்வி முறையை உட்புகுத்த நடவடிக்கை எடுத்தல் அவசியமாகும்.
அத்துடன், கணிசமான முஸ்லிம் மக்கள் வசிக்கும் அக்குறணை பிரதேசம் பல வருடகாலமாக தொடர்ந்தும் வெள்ளத்தினால் மூழ்கி வருகின்றது. அக்குறணையில் ஏற்பட்டுள்ள வெள்ளச் சூழலைத் தீர்ப்பதற்கு சரியான வழி கண்டுபிடிக்கப்பட்டு, முன்மொழியப்பட்டபோதிலும், அதனைச் செயற்படுவதில் சிக்கல்கள் பல இருப்பதாக அறிய முடிகின்றது.
இதனை இனங்கண்டு, நிரந்தரத் தீர்வொன்றைக் எட்ட வைப்பதற்கு வெற்றிபெறப்போகும் வேட்பாளர்களைத் தூண்டவைப்பது வாக்காளப் பெருமக்களின் கடமையாகும்.
குறிப்பாகக் கடந்த கால பிரதிநிதிகளால் இவ்விடயத்தில் எவ்வித முன்னெடுப்புக்களும் செய்துகொள்ள முடியாமல் போய்விட்ட நிலையில், புதிதாகக் களமிறங்கியுள்ள வேட்பாளர்களைத் தூண்டி, அவர்கள் வெற்றிபெறும் பட்சத்தில் இவ்விடயத்தில் தீவிர முன்னெடுப்பை எடுக்க வைக்கச் செய்வதில் வாக்காளர்கள் தமது புத்திசாதுரியத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது கட்டாயத் தேவையாகும்.
மேலும் இப்பிரதேசத்தின் உள்ளூர்க் கிராமங்களுக்குள் செல்லும் பல பாதைகளும், பாதையோர பழுதடைந்த விளக்குகளும் கவனிப்பாரற்றுக் கிடப்பது மட்டுமல்லாது, பல கிராமங்கள் நீர்வசதி இல்லாமலும் இருக்கின்றன. இக்குறைபாடுகளை இனங்கண்டு, நிவர்த்தி செய்து கொள்வதற்கு, கண்டி மாவட்ட முஸ்லிம் சமூகம் இம்முறை தேர்தலில் தமது வாக்குகளைக் கவனமாக பரிசீலித்துப் பிரயோகிக்க வேண்டிய கடப்பாட்டில் உள்ளனர்.
தேசிய மக்கள் சக்திக்கு முஸ்லிம் பிரதிநிதித்துவத்தைப் பெறுவதற்கு முன்னுரிமை கொடுப்பதில் கரிசணை காட்டிவரும் வாக்காளர்கள், தங்களை நாடிவரும் வேட்பாளர்களிடம், சமூகத்தின் நலனை முன்னிறுத்தி, பிரதேசத்தின் குறைபாடுகளை ஆணித்தரமாகச் சுட்டிக்காட்டி, அவர்கள் வெற்றிபெறும் பட்சத்தில், அவற்றை நிவர்த்தி செய்து கொள்வதில் உறுதியாக இருப்பது காலத்தின் தேவையாகும்!
செம்மைத்துளியான்
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments