அம்பலமாகியுள்ள தூதுவராலய நியமனங்கள்! சுகபோக வாழ்க்கையை அனுபவித்து வரும் மேல்மட்ட அரசியல் பிம்பங்கள்!

அம்பலமாகியுள்ள தூதுவராலய நியமனங்கள்! சுகபோக வாழ்க்கையை அனுபவித்து வரும் மேல்மட்ட அரசியல் பிம்பங்கள்!


கடந்த கால ஆட்சியிலிருந்த அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் அரசாங்கத்துக்கு நெருக்கமான முக்கியஸ்தர்களின் குடும்ப உறுப்பினர்கள் வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களில் முக்கிய பதவிகளில் அமர்த்தப்பட்டிருந்தனர்.

இவர்களைத் திருப்பி அழைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அத்துடன், அரசியல் செல்வாக்கின் அடிப்படையில் எந்தவொரு நியமனத்தையும் வழங்குவதில்லை என்ற நிலைப்பாட்டில் இப்போது அநுர அரசு உள்ளது.

எதிர்வரும் நாட்களில் அந்த இடங்களுக்கு இராஜதந்திர துறையில் அனுபவம் வாய்ந்தவர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

இதுவரை வெளியான தகவல்களின் அடிப்படையில், பல அரசியல்வாதிகளின் உறவினர்கள் வெளிநாட்டு தூதரகங்களில் பல்வேறு பதவிகளில் இருக்கின்றனர் 

அந்த வகையில், எஸ்.பி.திஸாநாயக்கவின் மகன், சுசில் பிரேமஜயந்தின் மகள் உள்ளிட்ட  அரசியல்வாதிகள் பலரின் உறவினர்கள் வெளிநாட்டு தூதரகங்களில் பல்வேறு பதவிகளில் இருந்துகொண்டு சுகபோக வாழ்க்கையை அனுபவித்து வருகின்றனர்.

அரசியல் தொடர்புகளின் அடிப்படையில் அரசியல்வாதிகளின் உறவினர்கள் பலர் வெளிநாட்டு தூதரகங்களில் பல்வேறு பதவி நிலைகளில் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

வொஷிங்டன் இலங்கைத் தூதுவரகம்:

ஐக்கிய அமெரிக்கா வொஷிங்டனில் இலங்கைக்கான தூதுவராக முன்னாள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க செயற்படுவதோடு தூதரகத்தின் மூன்றாவது அதிகாரி தாரக திஸாநாயக்க இருந்து வருகின்றார். இவர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்கவின் மகனாவார். அங்கு எழுத்தாளராகக் கடமையாற்றுபவர் முன்னாள் அமைச்சர் சுசில் பிரேமஜயந்தின் மகள் இந்திவரி குலரத்ன ஆவார்.

இதற்கு முன்னர் மேற்குறிப்பிட்ட தூதரகத்தில் முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தனவின் மகன் விபுல கடமையாற்றியுள்ளார்.

அதே தூதரகத்தின் ஊடக அதிகாரி அசோக ஜயதுங்க முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் செய்தித் தொடர்பாளராக கடமையாற்றியுள்ளார். 

லொஸ் ஏன்ஜல்ஸ் கொன்சல் காரியாலயம்:

அமெரிக்காவின் லொஸ் ஏன்ஜல்ஸ் கொன்சல் ஜெனரலாக கடமையாற்றுபவர் டாக்டர் லலித் சந்திரதாஸ. இவர் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகியோரின் மைத்துனர் ஆவார்.

அவுஸ்திரேலியாவின் கான்பராவின் உயர்ஸ்தானிகரான சித்ராங்கணி வாகீஸ்வர ஜனாதிபதி அலுவலகத்தில் சேவையாற்றி ஓய்வு பெற்றுள்ளார்.

அந்த அலுவலகத்தில் மூன்றாவது அதிகாரியாகப் பணிபுரிபவர் டி.சி.பெர்னாண்டோபுள்ளே முன்னாள் அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவின் மனைவியாவார். மெல்போர்ன் கொன்சல் ஜெனரல் சந்தித் சமரசிங்க. இவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்.

ஜப்பான்:

ஜப்பான் டோக்கியோவில் இலங்கைக்கான தூதுவர் ரொட்னி பெரேரா. இவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நெருக்கமான ரொனால்ட் பெரேராவின் சகோதரர் ஆவார். 2006ம் ஆண்டு முதல் இதே அலுவலகத்தில் எழுத்தாளராகக் கடமையாற்றி வரும் இந்து குணரத்ன, முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் உறவுக்கார மகளாவார்.

லண்டன்:

லண்டனில் உள்ள இங்கிலாந்து உயர்ஸ்தானிகர் ரோஹித போகல்லாகம முன்னாள் அரசியல்வாதி ஆவார். இங்கு மூன்றாவது அதிகாரியான சேனிய புஞ்சி நிலமே முன்னாள் அமைச்சர் சுசந்த புஞ்சி நிலமேயின் மகன்.

இதற்கு முன்னர், முன்னாள் இராஜாங்க அமைச்சர் பியல் சாந்தவின் மகன் கசுந்த சில்வா மூன்றாவது அதிகாரியாக பணியாற்றியுள்ளார்.

பரீஸ்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகனான சஹஸ்ர பண்டார, பாரிஸில் உள்ள பிரான்ஸ் தூதரகத்தில் மூன்றாவது அதிகாரியாவார்.

அதற்கு முன்னர் அந்த பதவியில் முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவின் இளைய சகோதரரான அமில திஸாநாயக்க பணியாற்றியிருந்தார்.

சீஷெல்ஸ்

அத்தோடு சீஷெல்ஸ் விக்டோரியாவின் உயர்ஸ்தானிகராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மைத்துனர் ஸ்ரீமால் விக்கிரமசிங்க ஆவார். இவர் ஷிரந்தி ராஜபக்சவின் சகோதரர் ஆவார்.பாலஸ்தீனத்தில் இலங்கைக்கான பிரதிநிதியாக முன்னாள் பிரதி அமைச்சர் நாவலகே பென்னட் குரே பதவி வகிக்கிறார்.

மேற்குறிப்பிட்ட பட்டியலிலுள்ள நபர்கள் அல்லாத இன்னும் பலர் இவ்வாறு வெளிநாட்டு தூதரகங்களில் பல்வேறு பதவி நிலைகளில் பணிபுரிகின்றமை பற்றிய தகவல்களைப் பெற்றுக் கொள்வதில் அநுர அரசு கவனம் செலுத்தி வருவதைப் பார்க்கும்போது மக்கள் புளங்காகிதம் அடைகின்றனர்.



 Ai SONGS

 



Post a Comment

Previous Post Next Post