காணாமற்போன லலித், குகன் வழக்கு : யாழ்ப்பாணத்திற்கு வர மறுக்கும் கோட்டாபய

காணாமற்போன லலித், குகன் வழக்கு : யாழ்ப்பாணத்திற்கு வர மறுக்கும் கோட்டாபய

2011ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் காணாமல் போன இரண்டு மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தொடர்பில் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தைத் தவிர நாட்டின் எந்த நீதிமன்றத்திலும் சாட்சியமளிக்கத் தயார் என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச(gotabaya rajapaksa) தெரிவித்துள்ளார்.உச்ச நீதிமன்றத்தில் இன்று (ஒக்டோபர் 22) நடைபெற்ற விசாரணையின் போது அவரது சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா,ஊடாக இதனை அவர் தெரிவித்துள்ளார்.

2011 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் காணாமல் போன மனித உரிமை செயற்பாட்டாளர்களான லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் கடத்தப்பட்டமை தொடர்பான வழக்கு, அப்போது பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்ச, யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றில் சாட்சியமளிக்க முதலில் அழைக்கப்பட்டிருந்தார். எனினும், பாதுகாப்பு காரணங்களால் அங்கு முன்னிலையாக முடியவில்லை என அவர் வாதிட்டார்.

வேறு எந்த நீதிமன்றிலும் சாட்சியமளிக்க தயார்

முன்னாள் ஜனாதிபதி யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் முன்னிலையாக முடியாது என்றாலும், இலங்கையில் உள்ள வேறு எந்த நீதிமன்றத்திலும் சாட்சியங்களை சமர்ப்பிக்கத் தயாராக இருப்பதாக கோட்டாபய ராஜபக்சவின் வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் முன்னைய தீர்ப்பை சவாலுக்கு உட்படுத்தி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று(22) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்புக் கவலைகள் நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டது.

ஜனாதிபதியாக இருக்கும் போது கோட்டாபய ராஜபக்சவை சாட்சியாக அழைக்க முடியாது என்று முந்தைய தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

நீதிபதிகள் பிரீத்தி பத்மன் சூரசேன, ஷிரான் குணரத்ன மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு இந்த வாதங்களை கேட்டது.

உயிருக்கு அச்சுறுத்தல்

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி வகிக்காததால், சாட்சியம் அளிக்கும்படி கட்டாயப்படுத்த உத்தரவிட வேண்டும் என்று மனுதாரர்கள் கோரியுள்ளனர். இந்த வழக்கை மேலும் பரிசீலிப்பதற்காக, அடுத்த விசாரணையை மார்ச் 18, 2025க்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் காணாமல் போன செயல்பாட்டாளர்களின் குடும்பத்தினரால் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுவை அடுத்து யாழ் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 2019 இல் கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆணையை அனுப்பியது. அந்த நேரத்தில், அவர் தனது உயிருக்கு அச்சுறுத்தல் காரணமாக யாழ்ப்பாணத்திற்கு பயணிக்க முடியாது என வாதிட்டதுடன் ஆணையை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.

அவரது ஜனாதிபதி பதவி தற்போது முடிவடைந்த நிலையில், இந்த வழக்கில் அவரை சாட்சியமளிக்க அழைக்கலாமா என்பதை உச்ச நீதிமன்றம் தீர்மானிக்கும், இது முன்னாள் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இதுபோன்ற வழக்குகளுக்கு முன்னோடியாக அமையும். 

ibctamil



 Ai SONGS

 



Post a Comment

Previous Post Next Post