மருந்து சீட்டுக்கள் தெளிவில்லாத கையெழுத்தில் எழுதப்படுவது ஏன்?

மருந்து சீட்டுக்கள் தெளிவில்லாத கையெழுத்தில் எழுதப்படுவது ஏன்?


மருத்துவர்களின் கையெழுத்து என்பது உலக மகா அதிசயமாக உள்ளது; கல்வெட்டு எழுத்துக்களைக் கூட முயற்சித்தால் வாசித்துவிடலாம். ஆனால் மருத்துவர்கள் எழுதித்தரும் குறிப்புகளை எந்தக் கோணத்தில் பார்த்தாலும் வாசிப்பது கடினமாகி உள்ளது.

உண்மை என்னவென்றால் மருத்துவர்களின் தெளிவில்லாத எழுத்துக்களால் சராசரியாக வருடத்திற்கு 7000 பேர் உயிரிழப்பதாக அமெரிக்காவின் மருத்துவ நிறுவனம் கூறுகிறது.   

இதனால் தெளிவாக மருந்துச் சீட்டை எழுத வேண்டுமென்று பல நாடுகளில் மருத்துவர்களுக்கு சட்டம் போடும் அளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளதாக அறிய முடிகின்றது. 

மருத்துவர்கள் தரும் மருந்துச் சீட்டின் கிறுக்கல்களைப் பார்க்கும்போது, அப்படிக் கிறுக்கல் இல்லாத மருந்துச்சீட்டுகளை நோயாளர்களுக்கு எழுதித் தரமுடியாதா என்று நோயாளர்களும், பார்மஸிஸ்டுகளும் கேள்வி எழுப்புகின்றனர்.

மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துச் சீட்டில் மருந்து, மாத்திரைகளின் பெயர்களை கெப்பிடல் எழுத்தில் எழுத வேண்டுமென்று இந்திய மருத்துவ கவுன்ஸிலில் உத்தரவு இருந்தபோதிலும்,  அதைப் பெரும்பாலான மருத்துவர்கள் பின்பற்றுவதில்லை. 
கையெழுத்து புரியாததால், டாக்டர் கூறியுள்ள மருந்துகளுக்குப் பதிலாக வேறொன்றை மாற்றிக் கொடுத்துவிடும் அபாயமும், அதனால் நோயாளிக்கு மாற்றிக் கொடுக்கப்படும் மருந்துகளால் பின்விளைவுகளும் ஏற்பட வாய்ப்புள்ளது; சிலவேளைகளில் நோயாளியை இறப்பில்கூட கொண்டுபோய் நிறுத்திவிடலாம் என்று இந்திய ஊடகமொன்று  கருத்துத் தெரிவித்துள்ளது.

பென்சிலின், இன்சுலின் என இரண்டு ஊசிமருந்துகள் உள்ளன. இரண்டுமே `in' எனத்தான் முடிகின்றன. ஆனால், பென்சுலினையும் இன்சுலினையும் வேறு வேறு நோய்களுக்குக் கொடுக்க வேண்டும். மருத்துவரின் கையெழுத்து சரியாக இல்லாதபோது, அதைப் பார்த்து மருந்து கொடுப்பவர்கள் தவறாகக் கொடுக்கும்பட்சத்தில் நிச்சயம் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

இதுபோன்ற ஆபத்துகள் இருப்பதால்தான் மருத்துவர்கள் தெளிவான கையெழுத்தில், மருந்துகளைப் பரிந்துரைப்பது அவசியமாகின்றது.

'ஒரு நோயாளிக்கு அதிக நேரம் ஒதுக்க முடியாது; நிறைய நோயாளிகளைப் பார்க்க வேண்டும்' என்று அவர்கள் நினைக்கும்போது மருந்துச் சீட்டை கெதியாக எழுதுவர்; இதைத் தட்டிக் கேட்கவும் முடியாது.

டாக்டர்-நோயாளி உறவு மனிதாபிமான அடிப்படையில் இருந்தால் இத்தகையப் பிரச்னைகள் நடக்காது. அது வணிகரீதியாக மாறும்போதுதான் இதுபோன்ற சிக்கல்கள் ஏற்படுகின்றன.

பெரும்பாலான வைத்தியர்கள், `நாம எழுதுற கையெழுத்தை பார்மசிஸ்ட்டுகள் புரிந்து கொள்வர்' என்றவாறாக நினைக்கிறார்கள்.  

"டாக்டர்களின் கையெழுத்தை எப்படிப் புரிந்துகொள்கிறீர்கள்? ஒருவேளை பரிந்துரைக்கும் மருந்துச் சீட்டில் அவரது கையெழுத்து புரியவில்லை என்றால், என்ன செய்வீர்கள்?’’ என்று ஒரு பார்மஸிஸ்டிடம் கேட்கப்பட்டபோது,

"பெரிய மருத்துவமனைகளில் உள்ள டாக்டர்கள் பெரும்பாலும் கெப்பிடல் லெட்டரில் எழுதுவதால், எங்களுக்கு மருந்தை அறிந்துகொள்வதில் எந்தப் பிரச்னையும் இருப்பதில்லை. இது தவிர வேறு சில டாக்டர்கள் கிறுக்கலாக எழுதினாலும் அதை பார்மசிஸ்ட் புரிந்துகொள்ளும் வகையில்தான் இருக்கும். கையெழுத்துப் புரியவில்லை என்றால் மருந்துச் சீட்டிலுள்ள டாக்டரிடமே 'என்ன மருந்து' என்பதைத் கேட்டுத் தெரிந்து கொள்வோம். அப்படியும் புரியாத வகையில் கையெழுத்திருந்தால் நோயாளியிடம் அதனைக் கொடுத்து, சம்பந்தப்பட்ட மருத்துவரிடம் ஆலோசித்து வரும்படி அறிவுறுத்துவோம். ஆனால், கையெழுத்து புரியவில்லை என்பதற்காக ஒருபோதும் வேறொரு மருந்தைத் கொடுத்துவிட மாட்டோம்" என்று குறிப்பிடுகின்றார்.

மருந்து சீட்டுக்கள் தெளிவில்லாத கையெழுத்தில் எழுதப்படுவது ஏன்?

படிக்கின்ற காலத்தில் வேகமாக குறிப்பெடுக்கும் பழக்கம் காரணமாக இருக்கலாம், குறித்த நேரத்துக்குள் நிறைய நோயாளிகளைப் பார்வையிட வேண்டியிருக்கலாம், பணி சுமை காரணமாக இருக்கலாம், எழுதப்படும் மருந்துகள் மருந்தகப் பணியாட்களுக்கு மட்டும் படிக்கக் கூடியதாக இருந்தால் போதும் எனக்கருதி இருக்கலாம், மோசமாக எழுதுவதுதான் மருத்துவர்களுக்கே உரிய சிறப்பான பாணி எனவும் கருதியிருக்கலாம்.
இப்போது ஒரு சில வைத்தியர்கள் தமது நோயாளர்களை கணினியில் பதிவு செய்து வைத்து கொண்டு, மருந்துச் சீட்டை பிரிண்டர் மூலம் அச்சிட்டு வழங்குவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. எதிர்காலத்தில் மருத்துவர்கள் இவ்வழிமுறையைப் பின்பற்றுவார்களேயானால், தெளிவில்லாத கையெழுத்துக் காரணமாக உலகளவில் ஆண்டொன்றுக்கு சராசரியாக 1.5 மில்லியன் மருத்துவத் தவறுகளும், 7000 மரணங்களும் சம்பவிப்பதைத்  தடுத்துக் கொள்ள முடியும்!

செம்மைத்துளியான்



 



Post a Comment

Previous Post Next Post