பேரழகி ப்யூ

பேரழகி ப்யூ


அந்தச் சிறுமி ப்யு  மிக மிக அழகாக இருப்பாள். சிறு குழந்தைகள் கூட அவளின் அழகைக் கவனித்துப் பார்ப்பர். பொதுவாக, சிறுமிகள் தங்கள் தோழிகளில் யார் அழகு என்பதை உணர்ந்து, அதை ஆராதித்து மதிப்பு கொடுப்பது நிகழ்வது இல்லை. விளையாட்டுப்பருவ உணர்வோடு, சரளமாக, சாதரணமாகப் பேசி விளையாடுவார்கள். ஆனால், இவள் விஷயத்தில் அப்படி இல்லை. ஒத்த வயது சிறுமிகளும் இவள் அழகை மெச்சுவர்.

என் அம்மாவோ, சிறுமி ப்யு  வை எப்போது வீதியில் பார்த்தாலும், அவளைக் கொஞ்சாமல் விடமாட்டார். அழகிய மஞ்சள் தேநீர் ரோஜா மலர்ச்செடி அருகே குனிந்து, அதன் அழகை ரசிப்பது போல, சிவப்பு மலர்களுடன் சிரிக்கும் காக்டஸ் செடியைக் குனிந்து உற்று நோக்குவது போல,, பைன் மரத்தின் வரிவரியான பட்டைக்கு நடுவே, அசந்து தூங்குவது போல் பாசாங்கு செய்யும் நீலவண்ண வண்ணத்துப்பூச்சியை வியந்து பார்ப்பது போல, என் அம்மா அந்த சின்னஞ்சிறு ப்யு சிறுமியை வியந்து பார்ப்பாள்.

பொன்னிறமாகவும், செஸ்ட்நட் போல் சிவப்பும்,ப்ரௌனுமாக மின்னும் அவளது சுருள் கேசத்தை வருடிக் கொடுப்பார். அழகிய கன்னத்தைத் தடவித் தட்டிக் கொடுப்பார். படபடக்கும் கண்ணிமைகள் கருவிழித் தடங்களில் பரந்து திறப்பதை வியந்து நோக்குவார். சிவந்த அதரங்கள் திறந்து மூடும் போது பளிச்சிடும் வெண்முத்துப் பற்களைக் கண்டு அதிசயிப்பார். அழகின் மொத்த உருவமாய் இருக்கும் அச்சிறுமியைச் சற்று நேரம் அணுஅணுவாய் ரசித்த பின்னரே, தன் கைகளை விலக்கி, அவளைத் தன் வழியில் போக விடுவார். அவள் சென்ற பின்பும், “எத்தனை அற்புதமான அழகு ! இணையில்லா அழகு” எனத் தமக்குத் தாமே சொல்லிக் கொள்வார்.

நாட்களும் நகர்ந்தன … பருவத்தின் வனப்பு ஒரு சராசரிப் பெண்ணையே அழகாக்கும் ! சிறுமியோ இயற்கையிலேயே அழகி  ! பருவம் அவளைப் பேரழகியாக ஆக்கியது ! அவளைப் புகழ்ந்து பேசாத தருணங்களோ , மனிதர்களோ அவ்வூரில் இல்லை !

அன்று ஒரு நிகழ்ச்சியில், தடுமாற்றத்துடன் அவள் பேசிய … இல்லை,இல்லை, முணுமுணுத்த ஒரு அரைகுறை உரையை அனைவரும் புகழ்ந்து தள்ளினார்கள். அந்த ப்யு சிறுமியின் முதல் கம்யுனியன் நிகழ்வு தேவாலயத்தில் பரபரப்பான நிகழ்ச்சியானது. சில வதந்திகளும் உண்டு. தேவாலயத்தில் பிரார்த்தனை முடிந்த பின், அவள் தந்தையுடன்  கஃபேயில் அமர்ந்திருந்ததும், அன்று மாலையில், நடன விருந்தில், சற்று தடுமாற்றத்துடன், இளமை ததும்ப அவள் ஆடியதும் உள்ளூர் வாசிகளின் ‘பேசும் பொருள் ‘ ஆனது.

சில நாட்கள் கழிந்தன. “எனக்கு வேலை கிடைத்துள்ளது” என எங்களிடம்  பள்ளியில் பார்த்த போது சொன்னாள்.

குரலில் ஒரு இறுமாப்பு !எக்காளம் !

”எங்கே ? எங்கே ? என்ன வேலை ?” :நாங்கள்.

“மேடம் அடால்ஃப்”

அந்த வட்டாரத்தில் அது ஒரு பிரபலமான, பணக்காரர்களுக்கு நாகரீகமான உடை தயார் செய்யும் நிறுவனம் !

“என்ன ஊதியம் கிடைக்கும் ? இப்போதே கிடைக்குமா ?” : நாங்கள்.

“எனக்கு இப்போது தானே பதிமூன்று வயது ஆகிறது. அடுத்த வருடம் ஊதியம் கிடைக்கும். இப்போது பயிற்சி” என்றாள் சிறுமி ப்யு.

எங்களிடம் பேசும் போது பெரும்பாலும் உணர்ச்சியற்ற குரலில் தான் பேசுவாள். ஒட்டி உறவாட மாட்டாள். விலகி இருப்பாள். அவள் தனிமைப் படுத்திக் கொண்டாள், தனிமைப் படுத்தப்பட்டாள். ஞாயிற்றுக்கிழமைகளிலோ விடுமுறைகளிலோ கூட, தன் வயதொத்த சிறுமிகளிடம் மனம் விட்டுப் பேசாமல், விளையாடாமல் இருப்பாள். தன் அழகு தனக்கு சிறந்த உயர்வான நிலையைக் கொடுத்துள்ளது என்பதை அவள் உணர்ந்திருந்தாள்.

உள்ளூரில் நன்மதிப்பைப் பெற்றிராத அவளது குடும்பத்தில்,  எங்களை விட வயதில் முதிர்ந்த உறவுப்பெண்கள் உண்டு. அவர்களுடன் தான் அதிக நேரம் செலவிடுவாள். அந்தப் பெண்கள் நாணமில்லாதவர்கள் என எள்ளி நகையாடப்படும் பெண்கள் ! அது மட்டுமா ? அவர்களின் அண்ணன்கள், சரட்டு வண்டி ஓட்டப் பழகிக் கொண்டு, தங்கள் வீட்டுப் பெண்களைக் கலைக்காட்சியகத்துக்கும், விதவை ஃபிமொல் நடத்தும் மதுக்கடைக்கும் அழைத்துப் போய்க் கொண்டு இருப்பார்கள். அடிக்கடி புகை பிடித்துக் கொண்டிருப்பார்கள். அவர்களும் இந்தப் பேரழகிக்கு நண்பர்கள் ! 

ஒரு நாள் காலை நான் பள்ளி செல்லும் வழியில் ப்யு சிறுமியைப் பார்த்தேன். அவள் அந்த ஆடைத் தயாரிப்பகத்திலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தாள். அவளுடைய அற்புதமான அழகையும், அலங்காரத்தையும்,நடையையும், உடையையும் கண்டு வாயைடைத்து நின்றுவிட்டேன். என்ன ஒரு அழகு ! வியப்பு ஒரு புறம் ! பொறாமை ஒரு புறம் என்னைப் பிய்த்துத் தின்றது. தெருமுனையில் நின்று,அசைந்தாடிச் செல்லும் நாநா ப்யுவின் உருவம் மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்தேன். 

பள்ளிச் சிறுமிகள் அணியும் குட்டை ஸ்கர்ட், ஃபினோபோர் முதலியவற்றை அவள் அணியவில்லை. நீளமான ஸ்கர்ட், பிங்க் நிறத்தில் மடிப்புகளுடன் வழுவழுப்பான பளபளப்பான சேட்டின் ப்ளவுஸ், விலையுயர்ந்த அல்பகா ( அல்பகா வகை ஆடுகளின் ரோமத்தினிலான ) ஏப்ரான் அணிந்து இருந்தாள். அடர்ந்த கேசம் படிய வாரி எட்டு போல வளைத்து முடியப்பட்டு இருந்தது. கர்வம் கொப்பளிக்கும் முகத்துக்கும் தலைக்கும் கவசம் போல இருந்தது சிகை அலங்காரம் … ஷினியா சிகை அலங்காரம். 

அவள் இன்னும் சிறுமி தான் என்பதற்கான அடையாளம் அவளது புத்துணர்வு தொனிக்கும் இளம் பிராயமும் துடுக்குத்தனமான தறி கெட்ட வாழ்வின் பின்விளைவை அறியாத வெகுளித்தனமும் தான் !

அவளைப் பார்த்ததே எனக்குப் பரபரப்பான முக்கிய நிகழ்வாக இருந்தது. “நாநா ப்யுவைப் பார்த்தேன். நீளமான ஸ்கர்ட் அணிந்திருந்தாள் ! நம்ப மாட்டீர்கள் ! அவள் தலை முடியை ஷினியா அலங்காரம் செய்திருந்தாள் ! அவளது இடுப்பு பெல்ட்டில் கத்திரிக்கோல் !”

வீட்டுக்குப் போனதும் அம்மாவிடமும் பரபரப்புடன் சொன்னேன். “அம்மா, அந்த ப்யு சிறுமியை இன்று நம் தெருவில் பார்த்தேன். “எத்தனை பேரழகு ! கண்ணுக்குக்குள்ளேயே நிற்கிறது ! அம்மா ! அழகான நீளமான ஸ்கர்ட் , ‘ஷினியா’ சிகைமுடி ! குதிகால் உயர்ந்த செருப்பு ! “

“என் செல்ல ‘மினெ ஷெரி’ , என் பூனைக்குட்டியே ! சீக்கிரம் சாப்பிடம்மா ! உன் கட்லெட் சில்லென்று ஆவதற்கு முன் சாப்பிட்டு முடி !”

“அம்மா ! அவளது ‘ஏப்ரான்’ அற்புதமாய், ‘அல்பகா’ ஆடை அம்மா! பளபளக்கிறது ! என்னால் …. நானும் … அது போல …”

“முடியவே முடியாது, செல்லம் ! ‘மினெ ஷெரி’ ! உன்னால் முடியாது .”

“ஏம்மா ! நாநா ப்யுவுக்கும் என்னைப் போல பதின்மூன்று வயது தானே ! அவளுக்கு முடிகிறதே ?”

“உண்மை தான், நாநா ப்யு, பதின்மூன்று வயதில் செய்ய முடியும் – ‘ஷினியா சிகையலங்காரம், நீளமான ஸ்கர்ட் — உலகின் எல்லா ப்யு சிறுமிகளும் சின்னஞ்சிறு வயதிலேயே இதையெல்லாம்  செய்யத் துவங்கி விடுவார்கள் !

பாவம் ! பரிதாப வாழ்க்கை !”

“ஆனால் , அம்மா !”

“என் செல்லப் பெண்ணே ! புரிகிறது உன் ஆசை ! சிறுமி  ப்யு போல ஆடையும் அலங்காரமும் நாமும் அணிந்தால் என்ன என நினைக்கிறாய் !  ‘ஷினியா’ சிகைமுடி, நீள ஸ்கர்ட், ‘அல்பகா’ அங்கி மட்டும் தான் வெளியில் தெரிகிறது ! அந்த ஏப்ரான் அங்கிக்குள் ஒரு கசங்கிய கடிதம் கிடக்கும். சிகரெட் நாற்றமோ, மது நாற்றமோ கொண்ட ஒரு நண்பன், இருவர், மூவர்…மெல்ல மெல்லப் பெருகும் எண்ணிக்கை….. நண்பர்கள் …. பின்னர் …கண்ணீர் துளிகளாக …!”

“அழும் குழந்தைகளை மறைத்து மறைத்து, அழித்து என சோகமே மிஞ்சும் ப்யு சிறுமி வாழ்வில் ! உனக்கு வேண்டவே வெண்டாம் அது, என் செல்ல ’மினெ ஷெரி’ ! “

“சரி, அம்மா! எனக்கு அந்த ’ஷினியா’ சிகையலங்காரம் பொருந்துமா எனப் பார்க்கலாமா ?”

“முடியாது” எனக் கடுமையான முகத்துடன் தலையசைத்தார் அம்மா.

“ஏப்ரான் அங்கி இல்லாமல் ‘ஷினியா’ சிகைமுடி கிடையாது ; கசங்கிய கடிதம் இல்லாமல் ‘ஏப்ரான்’ கிடையாது ; குதிகால் உயர்ந்த செருப்பு இல்லாமல், ‘கடிதம்’ கிடையாது. இப்படி ஒரு சுழற்சி ! அந்த சுழற்சியில் சிக்கிக் கொள்ளக் கூடாது. அதெல்லாம் நம் விருப்பமாகக் கூடாது.

ப்யு போல அழகாகத் தோன்ற வேண்டும் என்ற என் அவா மெல்ல மெல்ல தேய்ந்து போனது. அந்த ’ஜொலிக்கும்’ ராணி எங்கள் தெருவைத் தினமும் கடந்து செல்கிறாள். நானும் அதிகமாகக் கூர்ந்து கவனிப்பதில்லை.

சில நாட்களில்  சாதாரண சிகை அலங்காரத்தில்,ஒவ்வொரு வாரமும் புதுப்புது மேலாடைகள், குளிர்காலத்தில் வனப்பான ஸ்கார்ப் போட்டுக் கொண்டு… நிமிர்ந்து, மின்னல் போல் பளிரென, முள்ளுடன் கூடிய ரோஜா போல – கர்வமுடனும்… அழகுடனும்… ! கண்ணிமைகளின் கருணையால் கிடைக்கும் கண்மலர்களின் தரிசனம் ! 

நாளுக்கு நாள் மெருகேறிக் கொண்டே செல்லும் வனப்பு !எத்தனை பேர் அவளை வைத்த கண் வைத்த படி பார்த்து ரசிக்கின்றனர். ! எத்தனை பேர் பின் தொடர்ந்து நட்பு பாராட்டுவர் ! மோகம் கொள்வர் ! எத்தனை ஆபரணங்கள் ! படிய வாரிய செஸ்நட் கூந்தல் அவள் காதோரம், கழுத்தோரம் அலை பாயும் வேளை, எல்லோர் மனதும்  அலை பாயுமே !

இப்போது அவளுக்குப் பதினைந்து, பதினாறு வயதிருக்கும். ஞாயிற்றுக்கிழமை , வழக்கமாக அனைவரும் கூடும் வேளையில் தன் பளிச்சிடும் வெண்ணிறப் பற்களைக் காட்டியபடி அடிக்கடி, அளவுக்கதிகமாக சிரித்தாள். 

உள்ளூர் சமூகத்தில் நற்பெயரில்லா அவளது குடும்பப் பெண்களிடமும் சகோதரர்களிடமும் அதிக நேரம் செலவிட்டாள் என்பதைத் தவிர, அந்தப் பேரழகி சிறுமி நாநா ப்யு  நன்மதிப்புடன் நெறி பிறழாமல் தான் இருக்கிறாள் ! ப்யு பெண்களிடம் காணப்படாத குணவதியாக இருக்கிறாள் என்பதே மக்களின் கருத்தாக இருந்தது.

செயின்ட் ஜான் திருவிழா வந்தது. நாற்றம் வீசும் எண்ணையிட்ட விளக்குகளின் மங்கிய ஒளியுடன் அமைக்கப்பட்ட ‘கிராண்ட்-ஷு” நடன மேடையில் நாநா தோன்றினாள் ! லாடம் போல சிறு ஆணிகளைக் கொண்ட காலணிகள் அணிந்த இளைஞர்கள் ஆடும் போது நடன மேடையில் புழுதியும் சத்தமும் எழுந்தது. இளைஞர்கள் வழக்கம் போல் தொப்பியுடன் ஆடிக் கொண்டிருந்தனர்.

வெளிர்சிவப்பு நிறத்துடன் இருந்த பெண்கள் இறுக்கமான உள்ளாடைகளுடன் இன்னும் சிவப்பாகவும், வயல்வெளிகளில் வேலை செய்து , சூரிய ஒளியால் கறுத்த பெண்கள் இன்னும் அடர் கறுப்பாகவும் தெரிந்தார்கள். அங்கே இருந்த வாளிப்பான பெண்களில் நாநா ப்யுவும் இருந்தாள் ! சின்னஞ்சிறு பூக்கள் வாரி இறைத்தாற் போல வண்ண உடை, கையில் மதுக்கிண்ணம்… !

அப்போது அங்கே வந்தனர் அந்த இரு பாரீஸ் இளைஞர்கள் !

கோடையில் எப்போதாவது, கிராமத்தில் இருக்கும் தன் ஜமீன்தார் நண்பர்களின் வீட்டுக்கு வருகை தந்து, அங்கே நடைபெறும் விழாவையோ, நிகழ்வையோ சுவாரசியம் சற்றும் இன்றி, சொல்லப் போனால் எக்காளத்துடன் பார்க்கும் பாரீஸ் நகரவாசிகள் உண்டு. அது போலத் தான் அந்த இரு இளைஞர்களும் !ஒருவன் ப்ரௌன் நிற டஸ்ஸர் சில்க் உடையில், இன்னொருவன் வெண்ணிற உல்லன் உடையில் !

பரிகாசப் புன்னகையுடன் இருந்த இருவரும் பேரழகி நாநா ப்யுவைப் பார்த்ததும், சிரிப்பதை நிறுத்திவிட்டு, அவளை ரசித்துப் பார்க்க வசதியாக பார் அருகே அமர்ந்தார்கள்.

அந்த அற்புத அழகியைப் பற்றி கிசுகிசு குரலில் அவர்களின் ரகசிய சம்பாஷணையைக் கேளாதது போல் முகபாவனையுடன் உற்றுக் கவனித்துக் கேட்டு அகமகிழ்ந்தாள் நாநா !

”தான் அழகி” என்றுணர்ந்த அவளின் கர்வம் அவர்கள் பக்கம் தன் தலையைத் திருப்ப அனுமதிக்கவில்லை. கிசுகிசுக்கும் பாரீஸ் இளைஞர்கள், “என்ன அற்புதமான அழகு ! இந்த சூழலுக்குப் பொருத்தமில்லாமல் ! வாத்துக் கூட்டத்துக்கு நடுவில் அன்னபட்சியாய் ! “க்ரூஸ்” ஓவியம் போல் பேரழகு !” என்றெல்லாம் புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தனர். 

அவர்களுள் வெண்ணிற ஆடை உடுத்தியிருந்தவன் எழுந்திருந்து, நாநா ப்யு அருகில் வந்தான். புன்னகையுடன், “நாமிருவரும் நடனமாடலாமா ?” என அன்புடன் தன் கையை முன் கொணர, நாநா ப்யு பேரழகியோ, மகிழ்ச்சி, வியப்பு என எந்த ஒரு உணர்ச்சியையும் முகத்தில் காட்டாமல், மௌனமாக எழுந்து நடனமாடச் சென்றாள். மெல்ல மெல்ல, சுழன்று சுழன்று ஆடும் போது, அவள் அழகிய கண்ணிமைகள் அவ்வப்போது திறந்து அந்த இளைஞனின்மீசை மீது ஒட்டி உறவாடியது.

நாநாவுடன் நடனமாடிய பின், அவ்விரு பாரீஸ் இளைஞர்களும் அங்கிருந்து வெளியெறி விட்டனர். நாநாவும், நடனமாடாமல் தனியே அமர்ந்துவிட்டாள்.

அதற்குப் பின், இளைஞர்களும், உள்ளூரில் அந்தஸ்துடன் இருப்பவர்களும், சற்றே வயதானவர்களுமென எத்தனை ஆண்கள் அவளிடம் “நாமிருவரும் நடனமாடாலாமா?” எனக் கேட்டனர் ! அங்குள்ள அனைவருமே எனலாம் ! லெரிஷ், ஹாட்டெ, மருந்தாளுநர் ஹோன்ஸ், கேபினட் பெட்டி தயாரிக்கும், வயதான பாஸி… சொல்லிக் கொண்டே போகலாம் !

எல்லோருக்கும் ஒரே பதில் தான் சொன்னாள் நாநா ! “மிக்க நன்றி ! ஆனால், நான் சோர்வடைந்து விட்டேன். மன்னியுங்கள்” நீண்ட நேரம் இருக்காமல், பத்து மணி அளவில் அவள் வெளியேறி விட்டாள்.

அன்றைய நிகழ்வுக்குப் பின், குறிப்பிடத் தகுந்த எந்நிகழ்வுமே நாநா ப்யுவுக்கு நடக்கவில்லை ! அந்த பாரீஸ் இளைஞர்கள் திரும்பி வரவில்லை ! அவர்களைப் போன்ற நகர்புற கனவான்கள் யாருமும் வரவில்லை.

ஹாட்டெ, ஹோன்ஸ்,லெரிஷ், தங்கக் கடிகாரம் அணிந்த வியாபாரிகள், செல்வம் மிகுந்த பயணிகள், விடுமுறையில் வந்திருந்த போர்வீரர்கள், ஷெரிஃப் அலுவலக எழுத்தர்கள் என வெவ்வேறு சமூக அமைப்பைச் சார்ந்த ஆண்கள் எங்கள் தெரு வழியே கால் கடுக்க நடப்பதைக் காண முடியும். சீரான சிகை அலங்காரத்துடன் அன்ன நடையிடும் அந்தப் பேரழகு “தையல் கலைஞர்” நாநாவிடம் அவர்கள் தங்களுடன் நடனமாட, மாலைப் பொழுதைக் கழிக்க என அழைப்பதைக் காண முடியும்.

யார் அழைத்தாலும் எத்தனை முறை அழைத்தாலும் தொல்லை தரும் அழைப்புகளைத் தீர்க்கமான தலையசைப்புடன் ‘முடியாது’ என நிராகரித்து விடுவாள் நாநா ப்யு. “மிக்க நன்றி ! என்னால் நடனமாட முடியாது. எனக்கு சோர்வாக இருக்கிறது.” என்பது தான் அவளது நிரந்தர பதிலாக மாறியது. 

நாட்கள் செல்லச் செல்ல அவளுடன் நடனமாட விரும்பிய ஆண்கள் , அவள் தங்களைத் திட்டமிட்டு அவமானம் செய்வதாகவே கருதினர். “சோர்வடைந்து விட்டாளாம் ! அப்படி என்ன சோர்வு ! ஒன்பது மாதம் நீடிக்குமோ அவள் சோர்வு !” என எக்களித்து, அவளின் உருவத்தில் ஏதும் மாற்றம் தெரியுமோ என அவளைக் கவனித்து வருவர் !

ஆனால், ப்யு பேரழகிக்கு எதுவும் நிகழவில்லை ! யாருடனும் அவள் தொடர்பில் இல்லை !

அந்த அழகி காத்துக் கொண்டிருந்தாள் ! தன் அழகின் மீதான கர்வம், அதீதமான நம்பிக்கை, தனக்கு அற்புதமான ஆனந்தப் பெருவாழ்வு கிட்டுமென ! தன்னைச் சூழ்ந்திருக்கும் சிறு மனிதர்கள் வலையில் விழுவதால் வரும் இடைஞ்சல், அபாயங்களைத் தவிர்த்துக் கொண்டிருந்தாள். அந்த பாரீஸ் இளைஞர்கள் வருவார் என்றா ? இல்லை, தன் அழகுக்கு இணையான வேறு ஒருவன், இன்னும் மிடுக்குடன் செல்வச் செழிப்புடன் ஒருவன் வருவான் என அமைதியுடன் தூய்மை கலையாமல் காத்திருந்தாள் !

மருந்தாளுநர் ஹான்ஸ் அவளைத் திருமணமே செய்து கொள்வதாகச் சொன்னாலும் கூட அதனை நிராகரித்து விட்டாள் ! மனைவி எனும் உரிமையுடன் வாழ்ந்திருக்கலாம் !

கெக்கலிப்புகள், ரகசிய கண்ணோட்டப் பார்வைகள், கன்னங்களின் மினுமினுப்பு, சிவந்த உதடுகளின் மொழி, செழிப்பான அவயங்கள், சீரான அலங்காரம் என எல்லா முன்னெடுப்புகளையும், பேரழகிகளின் ஆயுதங்களையும் அவள் ஒரு முறை கூட உபயோகிப்பதில்லை. தன் தூய தடம் பிசகாமல், தன் ஒற்றை இலக்காய் காத்திருந்தாள் – தன் கனவு நாயகனுக்காக, தன் கனவு ராஜ்ஜியத்துக்காக, தன் இளவரசனுக்காக !

வருடங்கள் பல ஓடின.

நன் எனது அம்மா வீட்டு வழியாகப் பயணித்துக் கொண்டிருந்தேன். எனக்கு “ப்யு உடை” கிடையாது எனச் சொன்ன என் அம்மா இல்லை. இருந்தாலும், அந்தத் தெரு வழியே எனது கார் மெதுவாகச் சென்றது ! எனது காருக்கு வழி விட்டு, இடிபடாமல் இருக்க ஒரு உருவம் சற்று நகர்ந்து சென்றது.

மெல்லிய உருவம், பழைய மோஸ்தர் அலங்காரத்துடன் தலை முடி! தையற்கலைஞர் உடையுடன் ! கறுப்பு மேலங்கியின் இடுப்பு பெல்ட்டில் கத்திரிக்கோல் ! பெரிய கண்கள் ! சலனமில்லா மௌனம் !  மினுமினுப்பில்லா பராமரிக்காத கன்னங்கள் ! விளக்கொளியில் நெடுநேரம் வேலை செய்யும் அயர்ச்சி ! நாற்பத்து ஐந்து வயதிருக்கும்… இல்லை முப்பத்தெட்டு இருக்கலாம்… என் வயது தான் இருக்கும் ! 

எனது கார் அவளைக் கடந்தது.ஆம் ! அதே ப்யு ,நாநா ப்யூதான் அந்தப் பெண் !

விரக்தியும் எதிர்பார்ப்பும் கொண்ட கண்கள் காருக்குள்ளே அவள் கனவுக் காதலன் இல்லை என்பதி உறுதி செய்ததோ ? 

சலனமின்றி, அமைதியாய் தன் வழியில் தொடர்கிறாள் அந்த அழகு தேவதை ! அந்த ‘ப்யு’ சிறுமி ! 

குறிப்பு
 "அழகுப் பதுமைகளின் வாழ்க்கை எவ்வாறு இருக்கும் ? அதித சுவாரசியமானதாக இருக்கும். சிலருக்கு  அவலமான சோதனைகள் நிறைந்ததாக இருக்கும். சிலருக்கு பேரானந்தப் பெருவாழ்வையும் தரும். என்ன நடக்கிறது இச்சிறுமியின் வாழ்வில் …. ? வயதொத்த இன்னொரு சிறுமியின் கண்ணோட்டத்தில், சிறுமி ப்யுவின்  வாழ்க்கை நம் கண் முன்னே விரிகிறது…சிடொன் கப்ரியல் கொலட், சுருக்கமாக ’கொலட்’ என அழைக்கப்படும் பிரென்ச் பெண் எழுத்தாளரின் கதை  ”தி லிட்டில் ப்யு கேர்ல்” ! 

மூலம் : சிடொன் கப்ரியல் கொலட்
தமிழாக்கம் : கமலா முரளி
source:solvanam


 



Post a Comment

Previous Post Next Post