முன்னாள் எம்.பி.யும், தூதுவரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம். எம். ஸுஹைரின் தேர்தல்கள் பற்றிய கண்ணோட்டம்!

முன்னாள் எம்.பி.யும், தூதுவரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம். எம். ஸுஹைரின் தேர்தல்கள் பற்றிய கண்ணோட்டம்!


இவ்வருடம் பொதுத் தேர்தலை நடத்த செலவாகும் என்று எதிர்பார்க்கப்படும் 11 பில்லியன் ரூபாய் தொடர்பிலான ஆவணத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க  கையொப்பமிட்டுள்ளதாக பொதுத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் ஸமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

முன்னாள் எம்.பியும் முன்னாள் தூதுவரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.எம்.ஸுஹைர், நேற்றைய The Island பத்திரிகையில் எழுதியிருந்த தேர்தல் பற்றிய பகுப்பாய்வுக் கட்டுரையில், நடக்கப்போகும்  நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி மிக இலகுவாக 113 பெரும்பான்மையைப் பெற்றுவிடும் என்று குறிப்பிடுகின்றார்.

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில், மொத்த 160 தொகுதிகளில், அநுரகுமார திஸாயக்க 105 தொகுதிகளில் வெற்றி பெற்றார். இது மொத்தத் தொகுதிகளில் 2/3 பங்காகும்.

ஸஜித் பிரேமதாஸ 49 தொகுதிகளிலும்,   பா. அரியனேந்திரன் 6 தொகுதிகளில்  பெரும்பான்மை பெற்றிருந்தபோதிலும், ரணிலால் ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியாமற் போய்விட்டது!

மிதமிஞ்சிய ஊழல், அதிகாரத் துஷ்பிரயோகம், இனவாதம், பொதுமக்கள் அபிப்பிராயத்தைக் கருத்தில் கொள்ளாமை, நீதித்துறையை மரியாதையின்றி நடத்தியமை, பிழையான சட்டங்களை நடைமுறைப்படுத்தியமை போன்றன ஆட்சி மாற்றத்திற்கான முதன்மைக் காரணிகளாகக் குறிப்பிடலாம் என்று ஸுஹைர் தனது கட்டுரையில் குறிப்பிடுகின்றார்.

இதிலிருந்து  ரணில் எந்த அளவுக்கு அரசியலில் ஓரம் கட்டப்பட்டிருக்கின்றார் என்பதை  உலகம்  நன்கு புரிந்துவிட்டது. மக்கள் ஆணை எதுவுமின்றி, வெறும் அரசியல் பிம்பங்களின் உந்துதலால் ஜனாதிபதியான ரணிலை, இலங்கை மக்கள் கடந்த காலங்களில் நம்பவுமில்லை; எதிர்காலத்தில் நம்பப் போவதுமில்லை!
நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தல் மும்முனைப் போட்டியாக நடக்கலாம் என்று எதிர்பார்த்த நிலையில், அது  இருமுனைப் போட்டியாக மாறியது. நாட்டில் இப்போது அநுர அலைதான் கோலோச்சுகின்றது.

நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் தொகுதிவாரித் தேர்தலல்ல; விகிதாசாரப் பிரதிநிதித்துவ அடிப்படையிலேயே நடந்த தேர்தல்.
நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலும் இதே விகிதாசார முறையின் அடிப்படையில்தான் நடைபெறவுள்ளது.

அதனால், நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி மிக இலகுவாக 113 பெரும்பான்மையைப் பெற்றுவிடும் என்பது அநேகரின் கணிப்பாகும்!

ஜனாதிபதி பெற்ற 13 இலட்சம் பெரும்பான்மை வாக்குகளில், 9 இலட்சம் வாக்குகளை கொழும்பு, கம்பஹா, களுத்துறை உள்ளிட்ட மேல் மாகாணத்தில் வென்றிருக்கிறார். அதிலும், 460,000 வாக்குகளை இலங்கையில் அதி கூடிய வாக்காளர்களுள்ள மாவட்டமான கம்பஹாவில் பெற்றிருக்கின்றார்.

வெற்றியின் முதல் கட்டம் நடந்தேறிவிட்டது; அடுத்த கட்டம்  இன்னும் 45 நாட்களில் நடைபெற உள்ளது! இத்தேர்தலிலும் இலங்கை மக்கள் இலேசாக வென்று விடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்!

செம்மைத்துளியான்



 Ai SONGS

 



Post a Comment

Previous Post Next Post