அநுர அரசின் அதிரடி முன்னெடுப்புக்களால், நாடு புத்துயிர் பெறுமா?

அநுர அரசின் அதிரடி முன்னெடுப்புக்களால், நாடு புத்துயிர் பெறுமா?


வங்குரோத்தான நிலையில் சென்று கொண்டிருந்த இலங்கைத் தாய்நாட்டை மீளக் கட்டியெழுப்பவது என்பது ஒரு சவால் மிகுந்த பெரும் போராட்டமாகும். 

அதனை சீர்படுத்தும் நோக்கில், தேசிய மக்கள் சக்தி  ஜனாதிபதித் தேர்தலில் தனது தலைவரைக் களமிறக்கி, வெற்றியும் பெற்று நம்பிக்கையுடன் சீர்திருத்தங்களைச் செய்துகொண்டு மெல்ல நகர்ந்து கொண்டிருக்கின்றது.

சபாநாயகர், துணை சபாநாயகர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் தவிர, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டிருந்த அனைத்து போலீஸ் மெய்ப்பாதுகாவலர்களும் உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் திரும்பப் பெறப்பட்டுள்ளதுடன், சுமார் 85 பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது ஓய்வூதிய உரிமையையும், சிறப்புரிமைகளையும் இழக்கின்றனர். 

வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களில் முக்கிய பதவிகளில் அமர்த்தப்பட்டிருந்த, கடந்த கால ஆட்சியிலிருந்த அமைச்சர்கள் மற்றும் அரசாங்கத்துக்கு நெருக்கமான முக்கியஸ்தர்களின் குடும்ப உறுப்பினர்கள், புதிய அரசாங்கத்தின் வெளிநாட்டு செலவுகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் திருப்பி அழைக்கப்படுகின்றனர். 

பெரும்போகத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் உர நிவாரணத்தை இம்மாதம் முதல்  ஹெக்டயாருக்கு 15,000 இருந்து 25000 வரை அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், இம்மாதமுதல் நடைமுறைக்கு வரும் வகையில் மீனவ சமூகத்திற்கு எரிபொருள் மானியம் வழங்கவும் தீர்மானிக்கப் பட்டுள்ளது.
பொருட்களின் விலை படிப்படியாகக் குறைக்கப்படும் என்ற வாக்குறுதியின் ஆரம்ப முயற்சியாக எரிபொருள் விலையும், பஸ் கட்டணமும்  குறைக்கப் பட்டுள்ளது.

ஒக்டேன் ரக 92 பெட்ரோல் 311 ரூபாய், ஒக்டேன் ரக 95 பெட்ரோல் 377 ரூபாய், ஓடோ டீசல் 283 ரூபாய், சுபர் டீசல் 319 ரூபாய், மண்ணெண்ணை 183 ரூபாவாக புதிய விலை அமுலுக்கு வந்துள்ள நிலையில், பஸ் கட்டணங்களும் குறைக்கப்பட்டுள்ளன. ஆகக் குறைந்த பஸ் கட்டணமாக 27 ரூபா நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

முட்டை விலையும் குறைந்துவிட்டதாக அறிவிக்கப் பட்டு, 30 ரூபாய் என்று கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்ட போதிலும், முட்டையின் விலை கூடிச் செல்வதைத்தான் இப்போது எங்கும் காண முடிகின்றது. கோழித்தீன்களின் விலை குறையாமல் முட்டையைக் குறைந்த விலைக்குக் கொடுப்பது கடினம் எனவும், இடைத்தரகர்களே முட்டை விலை அதிகரிப்பிற்குக் காரணம் எனவும் முட்டை உற்பத்தியாளர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

கோழி இறைச்சியின் விலை குறைக்கப் படவுள்ளதாகவும், அடுத்த சில வாரங்களில் ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை நூறு ரூபா தொடக்கம் நூற்றைம்பது ரூபா வரை குறையலாம் எனவும்,  அகில இலங்கை சிறு கைத்தொழில் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போது ஒரு கிலோ கோழி இறைச்சியின் சில்லறை விலை 1,000 முதல் 1,100 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாக சங்கத்தின் தலைவர் நிருக்ஷ குமார தெரிவித்துள்ளதோடு, இது 900 முதல் 850 ரூபாய் வரை குறையலாம் எனவும் அவர் கூறியுள்ளார். 

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வலுவடைந்ததுள்ளமையினால் அதன் பலனை நுகர்வோருக்கு பெற்றுக்கொடுக்கவுள்ளதாக வர்த்தக நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ள நிலையில், நாட்டில் எதிர்வரும் வாரங்களில் பொருட்களின் விலை குறைவடைவதற்கான வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

விழாக்கள் நடத்துவதற்காக தேவையற்றவாறு பணச் செலவு செய்வதையும்,  பொது வளங்களை வீணடிப்பதையும்  உடனடியாக நிறுத்த வேண்டும் என பிரதமர் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

கைவிடப்பட்டிருந்த 11 வேலைத்திட்டங்களை 
ஜப்பான் மீளவும் 
ஆரம்பித்துள்ளது.
கடந்த அரசாங்கங்கள் மோசடிகளுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொள்வதற்காக, கொழும்பில் ஆங்காங்கே மூடப்பட்டிருந்த வீதிகள் பலவற்றை இப்போது திறந்து, மக்கள் மயப்படுத்தப்பட்டுள்ளன.

வெளிநாடுகளில் பணிபுரியும் நம் நாட்டுப் பிரஜைகள் புதிய அரசாங்கத்தில் நம்பிக்கை வைத்து, சுய விருப்பத்தில் டொலர்களை அனுப்பத் தொடங்கியுள்ளனர். 

வெளிநாட்டு உறவுகள், ராஜதந்திரத் தொடர்புகள் சிறப்பாகக் கையாளப்படுகின்ற நிலையில், அரசாங்கத்தின் எதிர்கால செயற்திட்டம் குறித்து ஆராய்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்டக் குழுவொன்று கடந்த 2024.10.02 அன்று இலங்கைக்கு விஜயம் செய்தது.

திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் 2.9 பில்லியன் டொலர் நீட்டிக்கப்பட்ட நிதி வசதியின் நான்காவது தவணையைப் பெறுவது பற்றி ஆராய்வதே இந்த விஜயத்தின் நோக்கமாக இருந்தது.

இலங்கை தொடர்பான சாதகமான அணுகுமுறையை அதிகரித்து தற்போதைய அரசாங்கத்தின் கீழ் நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய சீர்திருத்தங்கள் தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் பாராட்டுத் தெரிவித்தனர்.

பொருளாதார ஸ்தீரத்தன்மைக்கான இலங்கையின் அர்ப்பணிப்பு மற்றும் சர்வதேசத்தின் தொடர்ச்சியான ஆதரவை நோக்கி ஒரு தீர்க்கமான முன்னெடுப்பு பற்றியும் இங்கு கோடிட்டுக் காட்டப்பட்டது.

சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஷ்ட தூதுக் குழு தலைவர் Dr. பீட்டர் ப்ரூவர், வதிவிடப் பிரதிநிதி கலாநிதி சர்வத் ஜஹான் மற்றும் பொருளாதார நிபுணர் மானவி அபேவிக்ரம ஆகியோர் இடம்பிடித்ததோடு இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி, ஹர்சன சூரியப்பெரும, பொருளாதாரக் கொள்கைப் பேரவையின் தலைவரும் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான Dr அனில் ஜெயந்த, பொருளாதாரக் கொள்கை தொடர்பான பேரவையின் பிரதான உறுப்பினர்களான சுனில் ஹந்துந்நெத்தி, பேராசிரியர் சீதா பண்டார ரணதுங்க, சுனில் கமகே, ஜனாதிபதி சிரேஷ்ட ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ, கலாநிதி நந்தசிறி கிஹிம்பியஹெட்டி, பேராசிரியர் ஓ.ஜி.தயாரத்ன பண்டா, அமரசேன அத்துகோரள ஆகியோர் உரையாடலின்போது கலந்து கொண்டனர்.
இலங்கையின் பொருளாதார முன்னேற்றம் மற்றும் பொருளாதார மறுசீரமைப்பு வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைக்கும் வகையில் உலக வங்கி குழுமத்தின் சர்வதேச அபிவிருத்திச் சங்கத்தினால்,  மேலும் 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

அதற்கமைவான ஒப்பந்தத்தில் கைசாத்திடும் நிகழ்வு 2024.10.07 அன்று,  ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றதோடு, இந்த ஒப்பந்தத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில்,  இலங்கை அரசாங்கத்தின் நிதி அமைச்சர் ​கே.எம். மஹிந்த சிறிவர்தன மற்றும் உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் டேவிட் சிஸ்லேன் ஆகியோர் கையொப்பமிட்டனர். 

இலங்கையின் மறுசீரமைப்பு, நிலைப்படுத்தல் மற்றும் பொருளாதாரத்தை சுமுக நிலைக்குக் கொண்டு வருவதற்கான அபிவிருத்தி கொள்கைகளுக்கு நிதியளிக்கும் வேலைத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ்  இந்த நிதி உதவி இலங்கைக்கு கிடைத்துள்ளது.  

இந்த வேலைத்திட்டத்தின் முதல் கட்டம் 2023 ஆண்டில் செயற்படுத்தப்பட்டதுடன், பிரதான மூன்று துறைகளின் கீழ் ஏழு வேலைத்திட்டங்கள் முழுமைப்படுத்தப்பட்ட பின்னர்,  500 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை இலங்கை பெற்றுக்கொள்ள முடியும்.

2024.10. 07 அன்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி டகபூமி கடோனோவை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கா சந்தித்து கலந்துரையாடினார். 

அதன்போது, இலங்கையில் வலுசக்தி மற்றும் சிறு தொழில் முயற்சிகளை மேம்படுத்தத்  தேவையான நிதியுதவிகளை வழங்கவும், நிதித்துறையின் முன்னேற்றத்துக்கு தேவையான நிதியுதவிகளை வழங்கவும் அவர் இணக்கம் தெரிவித்தார். 

இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்துக்காக சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்கு அவசியமான வசதிகளுக்கான நிதி உதவிகளை வழங்கவும், ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கிணங்க வடக்கில் சுற்றுலாத்துறை அபிவிருத்தியை மேம்படுத்த உதவிகளை வழங்கவும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி இணக்கம் தெரிவித்தார். 

இதன்போது, ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி டகபூமி  கடோனோவுடன் இலங்கைக்கான முன்னெடுப்புக்களின் பிரதானி சொல்பொத் மெம்பேடோவா, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, பணிப்பாளர் நாயகம் டீ.ஏ.பி.அபேசேகர, பணிப்பாளர் உதேனி உடுகஹபத்துவ, சிரேஷ்ட பொருளாதார அதிகாரிகளான ஹஷிதா விக்ரமசிங்க மற்றும் லக்‌ஷினி பெர்னாண்டோ ஆகியோரும் கலந்துகொண்டனர்.

'ஒட்டு மொத்தமாக அம்பலப்படுத்தல்' என்ற மகுடத்தில் 'ஊழல் எதிர்ப்பு' என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்வு ஒன்றின்போது, ஊழல்கள் சம்பந்தப்பட்ட  560 கோப்புகளில், 165 கோப்புகளை துரிதமாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள இருப்பதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

குறிப்பாக, உயிர்த்த ஞாயிறு தாக்கம், மத்திய வங்கி பிணைமுறி ஊழல், மிக் கொடுக்கல் வாங்கல், லஸந்த விக்ரமசிங்க, தாஜுதீன், எக்னலிகொட வழக்குகள் போன்ற விடயங்களை ஆழமாக விசாரிக்க கமிஷன்கள் முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது.
இவ்வாறான முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதனால்,  நாடு  சகல சவால்களையும் எதிர்கொண்டு சரியான திசையில் நடைபோடத் தொடங்கிவிட்டதாக  மக்கள் நம்பிக்கை வைத்துள்ளபோதிலும், எதிர்கட்சிகள் எதிர்மறை கருத்துக்களையே வெளியிட்டு வருகின்றன.

ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்த நிலையில் பொதுத் தேர்தலுக்கான திகதி குறிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தலை அடிப்படையாக வைத்து பொதுத் தேர்தலுக்கான அணுகுமுறை பற்றி எதிர்க்கட்சி உட்பட  சிறு கட்சிகள் அனைத்துமே குழப்பமான ஒரு நிலைப்பாட்டில் இருந்தபோதிலும், வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன.

மாக்ஸிச சித்தாந்தத்தினை தனது அரசியல் கோட்பாடாகக் கொண்ட இயக்கம், இலங்கையில் அடிப்படை மாற்றங்களைக்கோரி பல தடவைகளில் இழப்புகளைச் சந்தித்தபோதிலும்,  புது வடிவில் நாட்டின் பிரதான அரசியல் நீரோட்டத்திற்குள் நுழைந்து, தீர்மானகரமான அரசியல் சக்தியாக  தன்னை மாற்றிக் கொண்ட நிலையில், தன்னால் தனித்து நின்று வெல்ல முடியும் என்பதை நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் மூலம் 'தேசிய மக்கள் சக்தி' நிரூபித்துக் காட்டியுள்ளது.

கடந்த கால அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகளில் மக்கள் எந்தளவுக்கு வெறுப்படைந்துள்ளனர் என்பதைத்தான், இந்த இடதுசாரிக் கட்சியின் வெற்றி நிரூபித்துள்ளது!

குறிப்பாக சிறீலங்கா சுதந்திரக் கட்சி, பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பன இலங்கை அரசியலில் பல தசாப்தங்களாகப் பாரிய தாக்கத்தைச் செலுத்தி வந்துள்ள கட்சிகளாகும்.

ஆனால் இன்று அக்கட்சிகளே நாட்டில் ஊழல்களையும், மோசடிகளையும் புரிந்து, நாட்டிற்குள் பொருளாதார நெருக்கடியையும். வறுமையையும்  கொடுத்துள்ளன என்பதை சரிவரப் புரிந்து கொண்ட மக்கள் அரசியல் மாற்றம் ஒன்றை வேண்டி நின்றதன் பலனே இடதுசாரிக் கட்சியின் வெற்றியாகும்!

நாடாளுமன்றத்துக்குள்  மூன்று உறுப்பினர்கள் மட்டுமே இருந்தபோதிலும், தான் ஜனாதிபதியானால் என்ன செய்வது என்பது குறித்து மிகவும் விரிவாகத் தமது உறுப்பினர்களுடன் விவாதித்து,  வினைத்திறன் மிக்க பொருளாதார முகாமைத்துவம், அரச கட்டுமானங்களில் சீர்திருத்தம், வெளிநாட்டு முதலீடுகளை ஆகர்ஷிக்கும் வகையிலான உட்கட்டுமான மாற்றங்கள்  போன்றவற்றை மேற்கொள்வதாக மக்களுக்கு உறுதியளித்த கட்சியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்கா, இப்பொழுது ஆட்சிபீடத்தில் ஏறியுள்ளார்.

தேர்தல் முடிவுகளை ஆராயும்போது தேசிய மக்கள் சக்தியானது, தன்னைத் தேசிய நல்லிணக்கத்திற்கான சக்தியாக, சிறுபான்மை இனத்தவரின் உரிமைகளை அங்கீகரிக்கும் சக்தியாக, ஆட்சியில் சகல பிரிவினருக்குமான வாய்ப்புக்களை உண்டுபண்ணும் கருத்துக்களை மக்கள் நம்பும் வகையில்  முன்வைத்தமையே  இவ்வெற்றியின் இரகசியமாகும்.
இக்கட்சியானது சாத்தியமான வகைகளில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்த திட்டங்களை முன் வைத்தார்கள். குறிப்பாக பொருளாதார வளர்ச்சியுடன், சமூக பாதுகாப்பிற்கான ஏற்பாடுகள் பற்றிய தமது எண்ணக் கருக்களையும் மக்கள்முன் வைத்தார்கள். அத்துடன், கடந்த காலத்தில் நடந்த ஊழல்களைஆய்ந்தறிந்து, குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவதாகவும் மக்களுக்கு உறுதி அளித்தார்கள். 

அதனால்தான், மக்கள் இப்புதிய அரசியல் நீரோட்டத்தை ஆகர்ஷிக்கின்றார்கள் என்பதை 2024 ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் முழு உலகிற்கும் உணர்த்தியுள்ளது.

வெறுமனே 3% வாக்குகள் பெற்ற ஒரு கட்சி, மிகவும் குறுகிய காலத்திற்கள் 40%த்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெறுவதென்பது, இலங்கை மக்கள் தம் மனோநிலையை எந்தளவுக்கு மாற்றிக் கொண்டுள்ளார்கள் என்பதை எடுத்துக் காட்டுகின்றது!

அந்த வகையில், இந்த வெற்றியானது இலங்கையின் ஏனைய கட்சிகள் அனைத்தையுமே ஆட்டம் காணச் செய்துவிட்டது; ஏனைய கட்சிகளை ஊழலற்ற வேட்பாளர்களைத் தேடி ஓட வேண்டிய நிலையைக் கூட ஏற்படுத்தி விட்டது!

ஏனைய கட்சிகள் தமது வாக்குக் கேட்கும் மேடைகளில் குறைந்த பட்சம் ஊழல், மோசடிக்கு எதிராகப் பேச வேண்டிய நிலையையும் ஏற்படுத்தியிருக்கிறது; அப்படிப் பேசினாலும் கூட, அது எவ்வளவு தூரத்துக்கு மக்கள் மத்தியில் எடுபடும் என்பதில் கூட அவர்களுக்கு சந்தேகமே!

காலாகாலமாக நாடாளுமன்றக் கதிரைகளைக் கட்டிப் பிடித்திருந்த பல அரசியல்வாதிகள் இப்போது கட்டாய ஓய்வில் செல்ல வேண்டிய நிலையில் உள்ளனர்.

மைத்திரிபால சிறிசேன, மஹிந்த ராஜபக்ஷ, காமினி லொகுகே, பந்துல குணவர்த்தன, பேராசிரியர் திஸ்ஸ விதாரண, ஜோன் செனவிரத்ன, வாசுதேவ நாணாயக்கார, அலி ஸப்ரி இப்படியாக ஓய்வை அறிவித்தோர் பட்டியல் தவிர, அறிவிக்காமலே ஓய்வில் செல்வோர் பட்டியல் இன்னும் நீண்டதாக இருக்கப் போகின்றது.

பல வருடங்களாக  நாடாளுமன்ற அங்கத்தவர்களாக இருந்த பலரையும் இந்தப் புதிய அரசியல் பிரவேசம் ஆட்டிப்படைக்கப் போகின்றது.

பல ஆண்டுகளாகக் கட்டிக்காத்த நாடாளுமன்ற உறுப்புரிமை இம்முறை முஸ்லிம் பெயர் தாங்கிக் கட்சிகளுக்கு கிட்டுமா என்பது கூட கேள்விக் குறியாக உள்ளது; பாரம்பரியக் கட்சிகளுக்கும் இதே நிலைதான் என்ற ஊகம் இலங்கை மக்களிடத்தில் வலுப்பெற்றுள்ளது.

இருபதாவது திருத்தத்துக்கு கையுயர்த்தியோர், ஜனாஸா எரிப்பின்போது வாய்பொத்தி மௌனம் சாதித்தோர், டொலர்களுக்காக ஊழல்வாதிகளின் பின்னால் சென்றோர் நிலைமைகள் எதிர்காலத்தில் கவலைக்கிடமாக இருக்கப் போகின்றது.

தமிழரசுக் கட்சிக்குள்ளும் நெருக்கடி ஏற்பட்டிருப்பதை உணர முடிகிறது. இலங்கை தமிழரசுக் கட்சியின் அனைத்து பொறுப்புகளையும் துறப்பதற்கு அதன் தலைவர் மாவை சேனாதிராசா தீர்மானித்துள்ளதாக தகவல் கிடைக்கின்றது.

ரணிலும் ஸஜித்தும் இணைந்து பொதுத் தேர்தலை எதிர்கொள்ளும் வியூகங்கத்திற்கான பேச்சு வார்த்தைகள்  வெற்றியளிக்கவில்லை! பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணி என்ற பெயரில் கூட்டணி ஒன்று ஸ்தாபித்துள்ளதாக ரமேஷ் பத்திரண குறிப்பிடுகின்றார். ஐக்கிய தேசியக் கட்சியுடன் இன்னும் சில கட்சிகள் இணைந்து பொதுத் தேர்தலில்  போட்டியிடவருக்கும் நிலையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசியலிலிருந்து ஓய்வு பெறப்போவதாக செய்திகள் வெளிவந்த வண்ணமாக உள்ளன.

தோல்விப் பயமானது நாமல் ராஜபக்ஷாவை தேசியப் பட்டியல் பக்கம் திருப்பியுள்ள நிலையில், மாவட்ட ரீதியான தேர்தல் போட்டிக்கு அவர் வருவாரா என்பதில் கூட சந்தேகம் எழுந்துள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருத்து வெளியிடுகின்ற ரிலையில், கட்சியிலிருந்து விலகிய உறுப்பினர்களை ஒன்றிணைத்துக் கொண்டு பலமான சக்தி ஒன்றை கட்டியெழுப்பும் பணியில் அவர் தயாராகி வருவதையும் ஊடகங்கள் மூலம் அறிய முடிகின்றது.
தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதித் தேர்தல் வெற்றியை ஊழல் அரசியல்வாதிகள் சரியாகக் கணிக்கவில்லை; எப்போதும்போல்  மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கலாம் என்று அவர்கள் தப்புக் கணக்குப் போட்டுவிட்டார்கள்.

'ஸஜித் அல்லது ரணில் வெல்வார்' என்று அவர்கள் போட்டிருந்த தப்பான கணக்கு, இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் எடுபடவில்லை. அதனால், 'ஏமாற்று அரசியல் கபட நாடகம்' எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஒரு முடிவுக்கு வரலாம் என்று எதிர் பார்க்கலாம்!

அதிரடியான முன்னெடுப்புக்களை சகித்துக் கொள்ள முடியாதவர்களால், புதிய அரசாங்கத்துக்கு நெருக்கடிகள் கூட உருவாகலாம்;  இதனால்  எதிர்மறை விளைவுகள் ஏற்படவும் வாய்ப்புக்கள் உண்டு.

இவற்றையெல்லாம் அறிந்து, தெரிந்து, புரிந்து கொண்டு எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று,  ஏற்கெனவே பெற்ற வெற்றியைப் பலப்படுத்திக் கொள்வது, அநுர அரசின் அடுத்த இலக்காக இருக்கப் போகின்றது!

செம்மைத்துளியான்



 



Post a Comment

Previous Post Next Post