மாவோ சேதுங் 1949இல் ஆட்சிக்கு வந்தபோது, சீனா வறுமையிலும் போரிலும் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தது.
இன்று, கம்யூனிஸ்ட்களின் வெற்றிக்கு 75 ஆண்டுகளுக்குப் பிறகு, நாடு முற்றிலும் வேறுபட்டதாக உள்ளது. இன்று சீனா ஒரு முன்னணி உலக சக்தியாக உள்ளது, உலகின் முன்னணி பொருளாதாரமாக மாறவும் விரும்புகிறது.
வரலாற்றில் தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ள, சீனாவின் ‘பொருளாதார அதிசயத்திற்கு’ காரணம் மாவோ சேதுங் அல்ல, மாறாக மற்றொரு கம்யூனிஸ்ட் தலைவரான டெங் ஷியோபிங். அவரால் முன்னெடுக்கப்பட்ட சீர்திருத்தம்தான் இதற்குக் காரணம்.
அது ‘சீர்திருத்தம் மற்றும் தாராளமயம்’ என்று அழைக்கப்பட்டது. அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, அந்தச் சீர்திருத்தம் மூலமாக 74 கோடி மக்களை வறுமையிலிருந்து மீட்க முடிந்தது.
‘சீன பண்பியல்புகளுடன் கூடிய சோசலிசம்’ என்ற கருத்தின் கீழ், டெங் அப்போதிருந்த அணுகுமுறையை எதிர்த்தார்.
விவசாயம், தனியார் துறையை தாராளமயமாக்குதல், தொழில்துறையை நவீனமயமாக்குதல், சீனாவின் கதவுகளை வெளிநாட்டு வர்த்தகத்திற்குத் திறந்துவிடுதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தி தொடர்ச்சியான பொருளாதார சீர்திருத்தங்களை ஊக்குவித்தார்.
இந்தப் பாதை சீனாவை மாவோ சேதுங்கின் கம்யூனிசத்தில் இருந்து விலக்கியது. சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் வார்த்தைகளில் சொல்வதானால், கடந்த காலத்தின் ‘சங்கிலிகளை உடைப்பதை’ இது பிரதிநிதித்துவப்படுத்தியது.
‘ஒரு ஏழை நாடு’
இந்த மாற்றம் 1978இல் தொடங்கியது. சீனாவின் பொருளாதாரம் இன்று அமெரிக்கா அல்லது ஐரோப்பிய ஒன்றியத்துடன் அடிக்கடி ஒப்பிடப்படுகிறது. ஆனால் அன்றைய காலத்தில், அதன் பொருளாதாரம் மிகவும் வேறுபட்டதாக இருந்தது.
ஐ.நா. புள்ளிவிவரங்களின்படி, அதன் 800 மில்லியனுக்கும் அதிகமான குடிமக்களுக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 150 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. இது 2022இல் சீனாவுக்கு இருந்த 18 டிரில்லியன் அமெரிக்க டாலர் ஜிடிபியை விட மிகவும் குறைவு.
சீன மக்கள் குடியரசின் நிறுவனர் மாவோ சேதுங் 1976இல் இறந்தார். அவர் ஒரு சர்ச்சைக்குரிய பாரம்பரியத்தை விட்டுச் சென்றார் என்றுதான் கூற வேண்டும்.
அவரது முக்கிய திட்டங்களில் ஒன்றாக கிரேட் லீப் ஃபார்வர்ட் (1958-1962) இருந்தது. இது நாட்டின் விவசாயப் பொருளாதாரத்தை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டது. இது குறைந்தது ஒரு கோடி மக்களைக் (சுயாதீன ஆதாரங்களின்படி, 4.5 கோடி வரை) கொன்ற பஞ்சத்திற்கு வழிவகுத்தது.
மேலும், 'முதலாளித்துவத்தின்' ஆதரவாளர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட கலாசாரப் புரட்சி (1966-1976) என்ற மாவோவின் பிரசாரமும் இழப்புகளுக்கு வித்திட்டது. பல்வேறு ஆதாரங்களின்படி, இதனால் பல ஆயிரங்கள் முதல் பல லட்சம் மக்கள் வரை இறந்தனர். இது சீனாவின் பொருளாதாரத்தையும் முடக்கியது.
சீனாவில், வறுமையும் பட்டினியும் தாண்டவமாடிய இந்தச் சூழ்நிலையில்தான் ஆளும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக அப்போது இருந்த டெங் ஷியோபிங் ஒரு மாற்றத்தை முன்மொழிந்தார்.
புதிய சூத்திரம்
‘நான்கு நவீனமயமாக்கல்கள்’ என்று அழைக்கப்படுவதையும், வணிகச் சந்தை முக்கிய பாத்திரம் வகிக்கும் ஒரு பொருளாதாரத்தை நோக்கிய பரிணாமத்தையும் டெங் அறிவுறுத்தினார்.
இந்தத் திட்டம் 1978 டிசம்பர் 18 அன்று சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டது, அது பொருளாதார நவீனமயமாக்கலை அதன் முக்கிய முன்னுரிமையாக வைத்தது.
அடுத்தடுத்த ஆண்டுகளில், அந்தச் சமயத்தில் சீனாவின் லட்சியமாகக் கருதப்பட்ட மாற்றங்கள் செயல்படுத்தப்பட்டன. அதுவும் கட்சியின் மிகவும் பழமைவாத பிரிவின் எதிர்ப்பையும் மீறி அவை முன்னெடுக்கப்பட்டன.
எடுத்துக்காட்டாக, விவசாயத் துறையில், மாவோயிஸ்ட் அமைப்பின் திட்டமிடப்பட்ட கிராமப்புற பொருளாதாரத் திட்டம் படிப்படியாகக் கைவிடப்பட்டது. இதனால் உற்பத்தித் திறனை அதிகரிக்கவும், நாட்டின் பல பகுதிகளை வறுமையிலிருந்து மீட்கவும், நகரங்களுக்கு தொழிலாளர்கள் இடம்பெயர்வதை ஊக்குவிக்கவும் முடிந்தது.
தனியார் துறையின் மீதிருந்த ‘தடைகள்’ தளர்த்தப்பட்டன. 1949இல் மக்கள் குடியரசு உருவாக்கப்பட்டதற்கு பிறகு முதல் முறையாக, நாடு அந்நிய முதலீட்டிற்குத் திறக்கப்பட்டது.
ஷென்சென் நகரம் போன்ற சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் உருவாக்கப்பட்டன, அவை நம்பமுடியாத மாற்றத்திற்கு உட்படுத்தப்பட்டன. இன்று ஷென்சென் ‘சீனாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு’ என்று விவரிக்கப்படுகிறது.
வெளி உலகத்திற்கான இந்த அணுகல், சீனாவின் உற்பத்தித் திறன் மற்றும் புதிய மேலாண்மை முறைகளை அதிகரிப்பதில் பங்களித்தது.
இந்த மாற்றங்கள் 2001ஆம் ஆண்டில் உலக வர்த்தக அமைப்பில் இணைவதற்கான சீனாவின் நீண்ட செயல்முறைக்கு வழிவகுத்தது. அதன் மூலம் உலகமயமாக்கலுக்கான கதவுகள் திட்டவட்டமாகத் திறக்கப்பட்டன. இது சீனாவின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவியது.
கடந்த 2008இல், உலகளாவிய நிதி நெருக்கடி வெடித்து, மேற்கத்திய நாடுகள் புதிய சந்தைகளைத் தேடத் தொடங்கியபோது, சீனா அவை அனைத்தைக் காட்டிலும் தனித்து நின்றது. ‘உலகின் தொழிற்சாலையாக’ சீனா மாறுவதற்கு அது வழிவகுத்தது.
இருப்பினும், அதன் பொருளாதார ஏற்றத்திற்குப் பின்னர், சீனா இப்போது அந்த அடையாளத்தை உதறித் தள்ளப் போராடுகிறது. உற்பத்தியில் இருந்து விலகி, புதுமைகளுக்கான நாடு என்ற இடத்திற்கு நகர முயல்கிறது.
பல காரணிகள் சீனா ஏற்கெனவே அவ்வாறு செய்து வருவதைக் குறிக்கின்றன.
போக்குவரத்து பொருளாதார ஆலோசனை நிறுவனமான எம்.டி.எஸ் டிரான்ஸ்மோடலின் கருத்துப்படி, மலேசியா, வங்கதேசம் ஆகிய நாடுகள் 15 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவின் ஆடை உற்பத்தியில் பெரும் பங்கை உறிஞ்சியுள்ளன. அதே நேரத்தில் தைவான் உலோக உற்பத்தியில் ஓரளவு உயர்வைக் கண்டுள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டில் நாடு உற்பத்தித் துறை மற்றும் கடல்சார் துறையில் முதலீடு செய்யத் தொடங்கிய பின்னர் வியட்நாம் தனது உற்பத்தி வர்த்தகத்தில் நல்ல பங்கைப் பெற்றுள்ளது.
அரசியல் மாற்றம்
பொருளாதார வெற்றி இருந்தபோதிலும், சீர்திருத்தங்கள் நாட்டிற்கு எதிர்மறையான விளைவுகளையும் கொண்டு வந்தன. அதாவது அதன் பெரும்பாலான நகரங்களில் பிரச்னையாக இருக்கும், கடுமையான காற்று மாசுபாடு மற்றும் சமத்துவமின்மை.
முந்தைய பிரச்னை, இப்போது பல நகரங்களில் ஒரு பெரிய விஷயமாக இல்லை. சிகாகோ பல்கலைக்கழகத்தின் எரிசக்திக் கொள்கை நிறுவனத்தின் (EPIC) அறிக்கைப்படி, 2013 மற்றும் 2020க்கு இடையில் காற்றிலுள்ள தீங்கு விளைவிக்கும் துகள்களின் அளவை சீனா 40% குறைத்துள்ளது.
இதற்கிடையில், 2000களில் மிக உயர்ந்த மட்டத்தை எட்டிய சமத்துவமின்மை, கடந்த பத்து ஆண்டுகளில் கணிசமாகக் குறைந்துள்ளதாகப் பல ஆதாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
ஆனால் பல மாற்றங்கள் இருந்தபோதிலும், எஞ்சியுள்ள ஒரு விஷயம், உலகின் பல்வேறு பகுதிகளில் அடிக்கடி விமர்சிக்கப்படும் ஓர் அரசியல் அமைப்பு.
கடந்த ஆண்டுகளில், சீனாவில் நிலவி வரும் இறுக்கமான, ஒரு கட்சி ஆட்சிமுறையில் எந்தவித மாற்றமும் கொண்டுவரப்படவில்லை.
மனித உரிமைகள் ‘அடக்குமுறை’ அதிகரித்து வருவதாகவும், தற்போதைய சீன அதிபர் ஷி ஜின்பிங்கிடம் அதிக அதிகாரங்கள் குவிவதால், மக்களின் சுதந்திரத்தை அவர் அதிகளவில் கட்டுப்படுத்துவதாகவும் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
கடந்த ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற, குடியரசு நிறுவப்பட்டதன் 74வது ஆண்டு விழாவில், சீனாவின் எதிர்காலம் ‘பிரகாசமாக உள்ளதாக’ ஷி ஜின்பிங் கூறினார். மேலும், நாடு எவ்வாறு வறுமையிலிருந்து செழிப்பை நோக்கி ‘அனைத்து அம்சங்களிலும்’ நகர்ந்துள்ளது என்பதை எடுத்துரைத்தார்.
இந்த உரை பெய்ஜிங்கின் தியானன்மென் சதுக்கத்தில் உள்ள ‘கிரேட் ஹால் ஆஃப் தி பீப்பிள்’ மண்டபத்தில் இருந்து வழங்கப்பட்டது. அங்குதான் ஒரு காலத்தில் சீன ராணுவம் மக்கள் ஆர்ப்பாட்டங்களைப் பலவந்தமாக நசுக்கியது. அதனால் நிகழ்ந்த இறப்புகளின் எண்ணிக்கை இன்னும் தீர்மானிக்கப்படாமல் உள்ளது.
சீன வரலாற்றின் இந்த இருண்ட அத்தியாயம் குறித்துப் பேசுவதுகூட சீன மக்களுக்குத் தடை செய்யப்பட்டதாகவே உள்ளது. அதுமட்டுமின்றி, அந்நாட்டின் அரசியல் அமைப்பு பற்றிய எந்தவொரு விமர்சனமும்கூட தடைசெய்யப்பட்டதாகவே உள்ளது.
எழுதியவர்,
பதவி,பிபிசி முண்டோ
bbctamil
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments