Ticker

6/recent/ticker-posts

நீதிக்கு சாட்சியாக நின்ற நபியின் தோழர்கள்

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்த ஏராளமான நல்ல பல மனிதர்கள் முஹம்மது நபியின் பாசறையில் பயிற்சி எடுத்தவர்கள். அப்படிப்பட்ட தோழர்கள் தங்களுக்குப் பாதகமான சூழலிலும் கூட நீதத்தைக் கடைபிடித்த மகத்தானவர்களாகத் திகழ்ந்தார்கள்.

அப்துல்லாஹ் பின் சஹ்ல் பின் ஸைத் (ரலி) அவர்களும் முஹய்யிஸா பின் மஸ்ஊத் பின் ஸைத் (ரலி) அவர்களும் (மதீனாவிலிருந்து) புறப்பட்டு கைபர் சென்றடைந்தனர். அங்கு ஓரிடத்தில் தனித்தனியாகப் பிரிந்துவிட்டனர். பிறகு அப்துல்லாஹ் பின் சஹ்ல் (ரலி) அவர்கள் (ஓரிடத்தில்) கொல்லப்பட்டுக் கிடப்பதை முஹய்யிஸா (ரலி) அவர்கள் கண்டு, அவரை (எடுத்து) அடக்கம் செய்தார். பின்னர் அவரும் அவருடைய (சகோதரர்) ஹுவய்யிஸா பின் மஸ்ஊத் (ரலி) அவர்களும் (கொல்லப்பட்ட வரின் சகோதரர்) அப்துர் ரஹ்மான் பின் சஹ்ல் (ரலி) அவர்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள்.

அப்போது அவர்கள் அப்துல்லாஹ் பின் சஹ்ல் (ரலி) அவர்கள் கொல்லப்பட்டதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவித்தனர். அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(அப்துல்லாஹ் பின் சஹ்லை இன்ன மனிதர்தாம் கொலை செய்தார் என உங்களில்) ஐம்பது பேர் சத்தியம் செய்து, நீங்கள் “உங்கள் (உயிரிழந்த) தோழருக்காக (பழிவாங்கும்) உரிமையை’ அல்லது “உங்கள் கொலையாளியிடமிருந்து (இழப்பீடு பெறும்) உரிமையை’ எடுத்துக்கொள்கிறீர்களா?’’ என்று கேட்டார்கள்.

அதற்கு அவர்கள், “(கொலை நடந்த இடத்தில்) நாங்கள் இருக்கவில்லையே! நாங்கள் எப்படிச் சத்தியம் செய்வோம்?’’ என்று கேட்டார்கள். இதைக் கண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தாமே அப்துல்லாஹ் பின் சஹ்ல் (ரலி) அவர்களின் கொலைக்கான உயிரீட்டுத் தொகையை வழங்கினார்கள்.
ஆதாரம்: முஸ்லிம்-3439 

இந்த செய்தியை ஆழமாகப் படித்து பாருங்கள்! தன்னுடைய முஸ்லிம் தோழர்களில் ஒருவரை யாரோ கொன்று விட்டார்கள்! அந்தத் தோழரோ, இரத்த வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கின்றார். இப்போது நபி (ஸல்) அவர்களிடம் வழக்கு வருகின்றது. மேலும், அந்த முஸ்லிம் நபித்தோழர் கொலை செய்யப்பட்டுக் கிடந்த இடம் என்பது, சுற்றிலும் முஸ்லிமல்லாத யூதர்கள் வசிக்கின்ற பகுதியாகும்.

இப்போது நபி (ஸல்) அவர்கள் தோழர்களிடத்தில் கேட்கின்றார்கள். ஐம்பது நபர்கள் சத்தியம் செய்து இன்னார் தான் கொலை செய்தார் என்று சொல்லுங்கள்! என்று கேட்க, அதற்கு அருமை தோழர்கள் சொன்ன பதில், நம்முடைய உரோமங்களையெல்லாம் சிலிர்க்க வைக்கின்றது.

அதாவது, நாங்கள் கொலை நடந்த இடத்தில் இல்லாத போது, இன்னார் தான் கொலை செய்தார் என்று கண்கூடாகக் காணாத போது,  எப்படி நாங்கள் சத்தியம் செய்வோம் என்று கேட்பதன் மூலம், நாங்கள் நீதிக்குத்தான் சாட்சியானவர்கள்! அநீதிக்கு சாட்சியானவர்கள் அல்ல என்பதை நிரூபித்திருக்கின்றார்கள்.

அதாவது அந்த தோழர்கள் நினைத்திருந்தால் ஒரு ஐம்பது நபர்கள் பொய் சத்தியம் செய்து எதிரியாக இருந்த யூதர்களில் ஒருவனுக்குத் தண்டனை பெற்றுத் தந்திருக்க முடியும். ஆனால் நீதியில் சங்கமித்த தோழர்கள் அப்படிப்பட்ட அநியாயத்தை எதிரியாக இருந்தாலும் செய்வதற்குத் துளியளவு கூட எண்ணவில்லை.

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்  “ஒரு சொத்தை அபகரிப்பதற்காக யார் திட்டமிட்டு பொய்ச் சத்தியம் செய்கிறாரோ அவர் மீது அல்லாஹ் கோபம் கொண்ட நிலையில் தவிர வேறுவிதமாக அவனை அவர் சந்திக்கமாட்டார்’’ என்று சொன்னார்கள்.
ஆதாரம்: புகாரி-7183 

இன்றைய காலகட்டத்தில் அடுத்தவர்களின் சொத்துக்களை அபகரிக்க வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தில் பொய் சாட்சி சொல்வதையும், பொய்யான சாட்சியங்களை உண்டாக்கிக் கொண்டு வருவதையும் பார்க்கிறோம். சமமான நீதியை வழங்குகின்ற நீதியாளர்களையும், நீதிக்குச் சாட்சியாக நிற்கின்ற மக்கள் கூட்டத்தையும் அரிதாகப் பார்க்க வேண்டிய காலகட்டமாக மாறி விட்டது.

பிறருடைய சொத்துக்களையும், மான மரியாதைகளையும், உயிர்களையும் பறித்துக் கொண்டு விட்டு, சர்வ சாதாரணமாக நிரபராதி என்ற பட்டத்தைப் பெற்றவனாக பூமியில் நடமாடிக் கொண்டிருக்கின்றான். அதே போன்று எவ்வித சிரமுமின்றி, அடுத்தவர்களின் சொத்துக்களை அநியாயமாக அபகரித்து, அந்த சந்தோஷத்திலே குளிர் காய்வதையும் பார்க்கின்றோம்.

இதுபோன்ற அநியாயம் செய்பவர்களையும், அக்கிரக்காரர்களையும் அடக்கி ஒடுக்க வேண்டுமானால் சரியான நீதி வழங்குகின்ற நீதிமான்கள் பெருமளவில் உருவாக வேண்டும்.

ஒருக்காலும் அநியாயமான முறையில் தீர்ப்பளிக்க மாட்டேன்! நீதிக்குப் புறம்பாக, பெரும்பான்மையினரின் விருப்பத்தின் அடிப்படையில், அவர்களது நம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்பளிக்க மாட்டேன்! அநியாயக்காரர்களுக்குத் துணை நிற்க மாட்டேன் என்று நீதிபதிகள் உளமாரத் தங்களின் உள்ளங்களில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.

எனவே, எந்தச் சூழலிலும், எதிரியாகவே இருந்தாலும் கூட மனித உரிமைகளைப் பேணுவோம்! சமமான, நீதமான, உண்மையான நீதியை வழங்குவோம்! நீதிக்கு சாட்சியாக இருப்போம் என்ற சபதத்தை உளமார ஏற்போமாக!!

நீர் தீர்ப்பளித்தால் அவர்களுக்கிடையே நீதியாகத் தீர்ப்பளிப்பீராக! நீதி செலுத்துவோரையே அல்லாஹ் நேசிக்கிறான்.
(அல்குர்ஆன்: 5:42)

அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் நீதியைப் பற்றி கூறிய அனைத்து உபதேசங்களையும் நம்முடைய அன்றாட வாழ்வில் கடைபிடிப்போமாக.! அந்த பாக்கியம் கொண்டவர்களாக அல்லாஹ் நம்மை ஆக்கி அருள் புரிவானாக.! 

வாஆகிறு தஃவானா அனில்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.

நன்றி:Rajaghri Farook
whatsapp

 Ai SONGS

 



Post a Comment

0 Comments