Ticker

6/recent/ticker-posts

Ad Code



1 லிட்டர் ரசாயனத்தில் 500 லிட்டர் பால்.. 20 ஆண்டுகளாகக் கொடிகட்டிப் பறந்த 'கெமிக்கல் பால்' பிசினஸ்!


உத்தரப்பிரதேசத்தில் கெமிக்கல் மூலம் போலியாக பால் தயாரித்து விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 20 ஆண்டுகளாக மக்களின் உயிருடன் விளையாடிய கும்பல், கையும் களவுமாக சிக்கியதன் பகீர் பின்னணி என்ன?

பாலில் தண்ணீர் கலப்பது என்பது சர்வசாதாரணம் என்பதுடன், அதன் கெட்டித் தன்மைக்காக மாவு கலப்பதையும் பார்த்திருப்போம். ஆனால், உத்தர பிரதேசத்தில் ஒரு கும்பல் வெறும் தண்ணீரில் ரசாயனத்தைக் கலந்து, பாலையே போலியாகத் தயாரித்தது அனைவரையும் தலை சுத்த வைத்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் அமீர்பூர் அகோரா என்ற கிராமம் உள்ளது. இந்தக் கிராமத்தில் போலியாக பால் மற்றும் பாலாடைக்கட்டிகள் தயாரிப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து போலி பால் தயாரிக்கும் குடோனில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடிச் சோதனை மேற்கொண்டனர். அப்போது, போலியாக பால் தயாரிப்பதற்காகக் குவித்து வைக்கப்பட்டிருந்த கெமிக்கல் மற்றும் கலப்படப் பொருட்களைக் கண்டு அதிகாரிகளே அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மேலும், வெறும் ஒரு லிட்டர் ரசாயனத்தின் மூலம் 500 லிட்டர் போலி பால் தயாரித்து வந்ததை அறிந்து, பேரதிர்ச்சி அடைந்துள்ளனர். அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அளிக்கும் வகையில் கடந்த 20 ஆண்டுகளாக இந்தக் கும்பல் எந்தவொரு தடையும் இன்றி போலி பால் தயாரித்து விற்பனை செய்து வந்துள்ளது.

தற்போது இந்த மோசடி கண்டுபிடிக்கப்பட்டதும், குடோனில் இருந்து 21 ஆயிரத்து 700 கிலோ எடை கொண்ட ஏழு வகையான ரசாயனப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதில் கொழுப்பு நீக்கப்பட்ட பால், காஸ்டிக் பொட்டாஷ், மோர் பவுடர், சோர்பிடால் மற்றும் சோயா உட்பட தீங்கு விளைவிக்கும் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இதுதொடர்பான வழக்கில் முக்கியக் குற்றவாளியான அஜய் அகர்வால் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த மோசடியில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். வெறும் ஒரு லிட்டர் ரசாயனத்தில் 500 லிட்டர் போலி பால் தயாரித்து விற்பனை செய்த சம்பவம், உத்தரப்பிரதேசத்தையே உலுக்கியுள்ளது.

news18



 Ai SONGS

 



Post a Comment

0 Comments