Ticker

6/recent/ticker-posts

வள்ளுவரும் வாழும் குறளும் (பன்முக ஆய்வு)-17


சாத்தனார், தாமியற்றிய மணிமேகலைக் காப்பியத்தை அரங்கேற்ற கடைச்சங்கம் இல்லையாதலின் இளங்கோவடிகளின் வேண்டுதலினால் சேரனவையில் அரங்கேற்றம் நடைபெற்றது. 

இதை"இளங்கோ வேந்தனருளிக் கேட்ப வளங்கெழு கூலவாணிகன் சாத்தன் மாவண் டமிழ்த்திற மணிமேகலைத் துற வாறைம் பாட்டினுளறிய வைத்தனனென எனும் மணிமேகலை பதிகத்தினால் நாம் அறியலாம்.

ஆரியப் படை தந்த பாண்டியன் காலத்தில், சங்கம் ஒடுங்கிவிட்டதால்தான் எந்தப் புலவரும் அப்பாண்டிய மன்னரைப் பாடவில்லை என்றும் நாம் கொள்ளலாம்.

இப்படி, சங்கம் ஒடுங்கிய பிறகு, புலவர்களை ஊக்குவிப்பதிலே. சேர மன்னர்களே முழுமுயற்சி செய்திருக்கின்றனர் என்பதற்கு, பதிற்றுப்பத்து. ஐங்குறுநூறு முதலிய நூல்களே சான்றாக விளங்குகிறது.

இவ்வாறு சங்க காலத்தை ஆராய்ந்து பார்க்கும்பொழுது, நமக்கு ஆசிரியர் பிறந்த ஆண்டு ஒருவாறு புலப்படுகிறது.

கி.மு.26 ஆம் ஆண்டில் பாண்டிய மன்னன் உக்கிரப் பெருவழுதி அரியணை ஏறினான் என்றும், அவனது அரசவையிலே திருக்குறள் அரங்கேறியது என்பதும் நாம் முன்னர் உணர்ந்தோம். உக்கிரப் பெருவழுதி அரசேறி சிறிது காலம் சென்று, அதாவது கி.மு.20 ஆண்டிலே திருக்குறள் அரங்கேறி இருக்க வேண்டும்.

வள்ளுவர் திருக்குறளை அரங்கேற்றிய பின், பத்து ஆண்டுகள் உயிருடன் இருந்திருக்க வேண்டும் எனக்கொண்டு, பண்டைக்காலத்து மக்களெல்லாம் வெகு வருடங்கள் வாழ்ந்திருந்தார் என்ற முறையில், ஆசிரியர் திருவள்ளுவரும் சுமார் எண்பத்தைந்து ஆண்டுகள் வாழ்ந்திருந்தாரெனக் கொள்வோ மாயின், இவர் கி.மு.93 ஆம் ஆண்டில் பிறந்தார் எனக் கொள்ளலாம். இவ்வாறு சொல்லுவதும் சரித்திர மரபுக்கு ஏற்றுக் கொள்ளும் கொள்கையாகும்.

ஆசிரியர் திருவள்ளுவர் 'மருந்து' என்னும் அதிகாரத்தில் விளக்கிய நன் முறைகளை உற்று நோக்கினால், இவர் நல்ல உடல் நலத்துடன் இருந்திருப்பார் என்பது விளங்குகிறது.

(தொடரும்)


 



Post a Comment

0 Comments